December 2025
கிறிஸ்மஸ்: சிறப்பு தேவசெய்தி...

கிறிஸ்மஸ் வந்துவிட்டது

ஆனால் கிறிஸ்துவுக்கோ இடமில்லை
THE MAGIC OF CHRISTMAS IS IN THE AIR; BUT, THERE IS NO ROOM FOR CHRIST
Rev. S.J.D. Dharmaraja

ஆண்டவரும் அருமை இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய திருப்பெயரில் உங்களை அனைவரையும் அன்போடு வாழ்த்துகிறேன். மீண்டுமாக ஒரு கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாட ஆண்டவர் நமக்குக் கிருபை தந்திருக்கிறார். ‘கிறிஸ்மஸ் வந்துவிட்டது - ஆனால் கிறிஸ்துவுக்கோ இடம் இல்லை’ என்ற கருத்தை மையமாகவைத்து வேதவசனங்களைத் தியானிக்க அழைக்கப்படுகிறோம்.

கடவுள் தம் திருமைந்தனை இவ்வுலகிற்கு அனுப்பி ஆயிற்று, கிறிஸ்துவானவர் மரியாளின் வயிற்றில் சிசுவாக உருவாகி ஆயிற்று, மரியாள் இயேசுவைப் பெற்றெடுக்க ஆயத்தமாகி விட்டார், பெத்லகேம் சிறுநகரம் இயேசுவின் பிறப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது, கிறிஸ்மஸ் நட்சத்திரம் (யாக்கோபின் வெள்ளி) கிழக்கில் உதித்தாயிற்று, பரமசேனையின் திரள் இயேசுவின் பிறப்பை அறிவிக்க வானத்திலிருந்து இறங்கி ஆயிற்று; ஆனால், இயேசு பிறப்பதற்கோ பெத்லகேம் நகரில் எங்குமே இடமில்லை; சத்திரங்களில் இடமில்லை, யாருடைய இல்லங்களிலுமு; இடமில்லை. இயேசு பாலன் பிறப்பதற்கு கிடைத்த இடமோ, மாட்டுக்கொடடில் மாத்திரமே. ‘கிறிஸ்மஸ் வந்தாயிற்று ஆனால் கிறிஸ்துவுக்கோ இடமில்லை’ என்ற இந்த செய்தியை மத்தேயு, லூக்கா, யோவான் ஆகிய நற்செய்தி ஆசிரியர்கள் வெவ்வேறு வழிகளில் விளக்கிக் கூறுவதை நாம் வேதத்தில் காணமுடியும்.

பாலகனாய் பிறந்தார் சத்திரத்தில் இடமில்லை: (லூக். 2:7)

“மரியாள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாத படியினால், பிள்ளையை துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.” என இயேசு பிறப்பதற்கு இடம் இல்லாத நிலை லூக்கா நற்செய்தி நூலில் சொல்லப்படுகிறது.

லூக்காவைப் பொறுத்தவரை, ‘இடமில்லை’ என்பது மனப்பூர்வமாக மறுப்பது அல்ல; மாறாக வேலைப்பளு, பரபரப்பு, கவனச்சிதறல் போற்றவற்றின் விளைவு. மக்கள் தொகை கணக் கெடுப்பில் பங்கேற்க வந்த ஏராளமான மக்கள் மத்தியில் யோசேப்பும் மரியாளும் விடுதி காப்பாளரின் பார்வையில், உலக அழுத்தங்கள் மற்றம் நெருக்கடிகள் நிறைந்த கண்ணுக்கு முக்கியமற்றவர்கள் ஆனார்கள்.

மன்னனாய் பிறந்தார் மாநிலத்தில் இடமில்லை: (மத். 2:13-15)
“கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுகிறான்; ஆதலால் நீ பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், அங்கே இரு என்றான். யோசேப்பு எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்கு புறப்பட்டுப்போய், ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான்.”

மத்தேயுவின் கூற்றுப்படி, இயேசு பிறந்த உடனேயே, ஏரோது ராஜா அவரைக் கொல்லத் தேடுகிறான்; யோசேப்பு தனது இளம் குடும்பத்துடன் தப்பிச்செல்லும்படி ஒரு தூதனால் எச்சரிக்கப்பட்டு எகிப்துக்கு தப்பியோடுவதை இங்கே காண்கிறோம். இங்கு, கிறிஸ்து பிறந்து விட்டார் ஆனால் அவருக்கோ, யூதேயா மாநிலத்தில் எங்கும் இடமில்லை; மன்னனின் மனதிலும் மாளிகையிலும் இடமில்லை.

மத்தேயுவைப் பொறுத்தவரை, இயேசுவுக்கு இடம் மறுப்பது என்பது மிகவும் நேரடியான நிராகரிப்பு மற்றும் வெளியேற்றும் நோக்கத்திலிருந்து வருகிறது. காரணம், ஏரோது மன்னர், ஒரு புதிய ‘ராஜா’ பிறந்ததைக் கேள்விப்பட்டபோது அடைந்த அச்சத்தை வெளிப்படுத்துவதாக மத்.2:3 மற்றும் 16 அமைந்துள்ளது.

ஒளியாய் வந்தார் உலகில் இடமில்லை: (யோவா.1:5,9,10 யோவா.3:19)
“அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருள் அதைப் பற்றிக் கொள்ளவில்லை.
இயேசு உலகத்தில் இருந்தார்; ஆனால், உலகமோ அவரை அறியவில்லை. அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.”
யோவானின் கூற்றுப்படி, மனிதரைப் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளியாக உலகிற்கு வந்துகொண்டிருந்த இயேசு உலகத்தில் இருந்தார்; ஆனாலும், உலகம் அவரை அறியவில்லை. அவர் தம் மக்களை நோக்கியே வந்தார், ஆனால், அவருடைய சொந்த மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒளி வந்துவிட்டது, மக்கள் ஒளியைவிட இருளையே நேசித்தார்கள்.

இன்று கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடுகிற நாம், கடவுளுக்கு நம் வாழ்வில் இடம் கொடுக்க விரும்புகிறோமா? இயேசு மனுஷகுமாரனாக நம் நடுவில் இருப்பதில் நமக்குத் தடையாக இருப்பது என்ன? நம் வாழ்வில் இயேசுவுக்கு ‘இடமில்லை’ என்பது வழக்கமான மற்றும் சமரசம் செய்யப்பட்ட சம்பிரதாயமாகவே மாறிவிட்டிருக்கிறது. நம்மை அறியாமலேயே இயேசுவுக்கான இடத்தை நாம் மறுத்துவருகிறோம். சுவிசேஷங்கள் ஒவ்வொன்றும் அதன் சொந்த வழியில், இத்தகைய மறுப்புக்கான பதில்களைக் குறிப்பிட்டுள்ளன. இவ்வாறாக, இயேசு இந்த உலகில் வரவேற்கப்படவில்லை; மாறாக, அவர் விடுதியில் இருந்தும், நகரத்தில் இருந்தும், நாட்டில் இருந்தும் வெளியேற்றப்பட்டார் என அறிகிறோம்.

சுவிசேஷங்கள் கூறும் இச்செய்திக்குள் நாம் நம்மையும் அடையாளம் காண முடியும். இன்று இயேசு, ஒரு குழந்தையாக நம்மிடையே வருகிறார்; நிராகரிப்பு, தவறான புரிதல், வன்முறை ஆகியவற்றின் நடுவில் அவர் நம்முடன் வாழ்கிறார். மேலும், அவரது வாழ்நாள் முழுவதும் இந்த உலகத்தின் வலிகள் மற்றும் பயங்கரங்களுக்கு மத்தியில் வாழ்வதற்கான சாட்சியாகவும் இருக்கிறார். இடம் கொடுக்கப்பட்டபோதும் மறுக்கப்பட்டபோதும், எப்போதும் அவர் நமக்குள் அன்புடன் மட்டுமே செயல்படுகிறார்.

இயேசுவின் இந்நிலை வேதனையானது. நம்மை மோசமாக காயப்படுத்திய ஒருவரை மன்னிக்க அல்லது அவர் மீதுள்ள வெறுப்பை விட்டுவிட நாம் எப்போதாவது முயன்றிருந்தால்; தீமைக்கு தீமை செய்யாதிருப் பதை நாம் எப்போதாவது தேர்வு செய்திருந்தால்; நமது சுயகௌரவத்துக்கான வாய்ப்புகள் நமக்கு மறுக்கப்பட்டிருந்தால் கிறிஸ்து வானவருடைய அன்பின் வழி எவ்வளவு வேதனையானது என்பதையும், அந்த அன்பிற்கு நம்மை அர்ப்பணிப்பதில் நாம் எவ்வளவு குறைவுபடுகிறோம் என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும்.

இயேசுவுக்கு நம் வாழ்வில் இடமளிப்போம்; அவருடைய சீடர்களாய் மாற நம்மை அர்ப்பணிப்போம். இயேசுவின் சீடர்களாக இருப்பது என்பது, அவரை நம் வாழ்வில் அனுமதிப்பதும் அவர் நமக்கு வைத்துப்போன முன்மாதிரிப்படி நடப்பதுமேயாகும். இதனால் நாம் வெறுப்பதற்குப் பதிலாக, அன்பு செலுத்தும் கிருபையில் வளருகிறோம்; பிறரை பழி வாங்கவோ அல்லது நம்மைத் தற்காத்துக் கொள்ளவோ கட்டாயப்படுத்தப்படாமல், கிருபையில் வளர்கிறோம்.

கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடுகிற நாம், கிறிஸ்துவுக்கு நம் இதயங்களில் இடமளித்து, அவரது அன்பின்-வழி நடக்க நம்மை அர்ப்பணம் செய்வோமானால், நம் வாழ்வும் இவ்வுலக மக்களுக்கான அன்பின் பரிசாக மாறும்.

தாமஸ் மெர்டன் என்ற அறிஞர் இயேசுவின் பிறப்பு குறித்து: “இடமே இல்லாத பாவம் நிறைந்த இவ்வுலகிற்குள், இடம் இல்லாத பைத்தியக்கார சத்திரத்திற்குள், அனுமதி மறுக்கப்பட்ட நம் வாழ்விற்குள், கல்லாய் மாறின நம் இதயத்துக்குள் இரட்சகர் இயேசு இன்று அழையா விருந்தாளியாக வருகிறார்.” என சொல்கிறார். கிறிஸ்மஸ் வந்துவிட்டது, கிறிஸ்து வந்து விட்டார், இயேசு பிறந்துவிட்டார், நாம் கொடுக்கும் எந்த இடத்தையும் அவர் ஏற்று, தமக்கான அன்பின் மாளிகையாக அதை மாற்றுவார். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.




அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா, ஆயர் மற்றும் உழிய இயக்குநர்,
நற்செய்தி வேதாகம அச்சுப்பதிவு, சாலிகிராமம், சென்னை. தமிழ்நாடு, தென்னிந்தியா