லூக்கா-2:8-20
கிறிஸ்மஸ் காலம் தொடங்கிவிட்டது. பண்டிகை நெருங்க நெருங்க பல்வேறு காரியங்களை எதிர்கொள்ள பயந்துகொண்டிருக்கிறோம். நம் அன்றாட வாழ்வில், நம் விசுவாச வாழ்வில் என்னென்ன காரியங்களுக்கு பய்ப்படக்கூடாது என்பதை சிந்திக்க அழைக்கப்படுகிறோம். லூக்கா 2:8-20ன் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு சற்று நேரம் நாம் தியானிப்போம்.
1.எதிர்பாராத சம்பவங்களுக்கு பயப்பட வேண்டாம்: (லூக் 2:9,10மு)
“தேவதூதன் மேய்பர்கள் முன் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள்.” பெத்லகேம் மேய்ப்பர்கள் தங்கள் மந்தையைக் காத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் தூதர்களுக்காகவோ அல்லது, இயேசு என்ற குழந்தைக் காகவோ காத்திருக்கவில்லை. அங்கு, எதிர்பாராத ஒன்று நடந்தது. கடவுள் ஒரு பிரகாசமான தூதனை அனுப்பி அவர்களைச் சந்தித்தார். ஆனால் மேய்ப்பர்களோ, பயத்துக்கு உள்ளானார்கள. தேவதூதன் சொல்கிறார் “நீங்கள் பயப்பட வேண்டாம்” என்று.
நம்மில் பெரும்பாலானோர் எதிர்பாராத சம்பவங்கள் நடக்கும்போது மிகவும் பயந்துபோகிறோம். அருமையானவர்களின் எதிர்பார மரணம், துணையாளர்களின் எதிர்பாராத பிரிவு, வியாபாரத்தில் எதிர்பாராத நஷ்டம், பிள்ளைகளின் வாழ்வில் எதிர்பாராத தோல்வி போன்றவற்றைக் கண்டு மிகவும் கலங்குகிறோம். கடவுள் நமது நன்மைக்காகவே நம் வாழ்வில் எதிர்பாராமல் குறுக்கிடு கிறார் என்ற உண்மையை உணர்வோம். வாழ்வில் எதிர்பாராமல் நடைபெறும் சம்பவங்கள் குறித்து பயப்படவேண்டாம் என்ற நம்பிக்கை நற்செய்தியை கிறிஸ்மஸ் நமக்கு அளிக்கிறது.
2. கடவுளின் வார்த்தை குறித்து பயப்பட வேண்டாம்: (லூக் 2:10)
தேவதூதன் மேய்ப்பர்களிடம் வந்து கடவுளின் வார்த்தையை அறிவித்தார். பாமரரான அந்த மேய்ப்பர்களோ, கடவுளின் வார்ததையைக் கேட்டு அதிக அச்சம் அடைந்தனர். கடவுளின் வார்த்தைகளையுடைய தூதனின் செய்தியோ, “பயப்படாதிருங்கள”; என்பதாகும். மட்டுமல்ல, “எல்லா மக்களுக்கும் மகிழ்ச்சி தரும் கடவுளின் வார்த்தையை அறிவிக்கிறேன்” என்பதாகும். இந்த கடவுளின் வார்த்தை அரச-குடும்பத்தார் அல்லது பாதிரியார்-குழு போன்ற மேல்தட்டு மக்களாகிய ஒரு சாராருக்கானது மட்டுமஅல்ல; அது முழு மனித இனத்திற்கும் உரியதாகும். எனவே அச்சம் அடையத் தேவையில்லை.
இன்று நம் கரங்களில் கொடுக்கப்பட்டுள்ள கடவுளின் வார்த்தைகள் அடங்கிய வேதபுத்தகம், அறுவை சிகிச்சை நிபுணரின் கத்தி போன்று இரண்டு விளிம்புகளைக் கொண்டுள்ளது. ஒரு விளிம்பு வெட்டுகிறது, மற்ற விளிம்பு குணமாக்குகிறது. இது குணமடைய வெட்டும் ஒதுரு கத்தி ஆகும். எனவே நாம், கடவுளின் வார்த்தையை வெளிப்படுத்துகிற கிறிஸ்மஸ் செய்தி கேட்டு மகிழ்ச்சியடைய வேண்டுமேயல்லாமல், பயப்படக்கூடாது.
3. கடவுளின் திட்டங்கள் குறித்து பயப்பட வேண்டாம்: (லூக் 2:11-14)
தேவதூதன் கடவுளின் திட்டத்தை மேய்பர்களிடம் அறிவித்தபோது, அவர்கள் மிகவும் பயந்துபோயினர். “இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமை, பூமியில் சமாதானம், மனுஷர்மேல் பிரியம்|” என்பதே அந்தத் திட்டம். விடுதலை வாழ்வுக்கான திட்டம் நம்மிடம் இல்லை என்பதை அறிந்த கடவுள், தமது மீட்பின் திட்டத்தை அறிவிக்கிறார். அத்திட்டம், விடுதலை நாயகனின் (இரட்சகரின்) பிறப்பு, விண்ணகத்தில் மகிமை, மண்ணுலகில் சமாதானம், மனிதர் அனைவர்மேலும் நன்மதிப்பு போன்ற செயல்திட்டங்களை உள்ளடக்கியது ஆகும். கடவுளின் திட்டங்களைவிட சிறந்த திட்டம் எதுவும் நமக்கு இல்லை. “நான் உங்களுக்காக வைத்திருக்கும் திட்டங்கள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கு ஏதுவானவைகளே|” (எரே-29;11) என்று தீர்த்கத்தரிசி மூலமாக கடவுள் அறிவிப்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
யோவான் ஸ்நானன் பிறப்பு, நட்சத்திரம் உதயம், ஞானிகள் வருகை, கன்னிமரியாள் கருத்தரிப்பு, மாட்டுத் தொழுவத்தில் கிறிஸ்து பிறப்பு போன்ற கிறிஸ்மஸ் கால திட்டங்கள் யாவும் நன்மை யானவைகளே. எனவே, இந்த கிறிஸ்மஸ் காலங்களில் கடவுளின் திட்டங்களைப் பார்த்து பயந்துகொண்டிராமல், தேவ திட்டங்கள் நிறைவேற மகிழ்ச்சியுடன் நம்மை அர்ப்பணிப்போம்.
4. கடவுளை (கிறிஸ்துவை) சந்திக்க பயப்பட வேண்டாம்: (லூக் 2:15,16)
இரட்சகர் பிறந்த செய்தி மற்றும் அடையாளம் குறித்த செய்தியை கேட்ட மேய்ப்பர்கள் அக்குழந்தையைச் சந்திக்க, தரிசிக்கத் தயங்கவில்லை. மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், “நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள்|” என்று சொல்லி, தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்.
“கடவுள் பயங்கரமானவர், அவர் சேரக்கூடாத ஒளியில் வாழ்பவர்” என்பது பழைய ஏற்பாட்டுச் செய்தி. ஆனால் புதிய ஏற்பாட்டு நற்செய்தியோ, “கடவுள் இரக்கம் நிறைந்த இம்மானுவேல் கடவுள், அவரை மிகவும் எளிதில் அணுகவும் சந்திக்கவும் முடியும்” என்பதாகும் (மத்-11:28). கடவுள் உங்களையும் என்னையும் போல ஒரு மனிதனானார்; ஆகையால் அந்த மேய்ப்பர்களைப் போல் நாமும் பயமின்றி அவரை நெருங்கி வர முடியும் (எபி 4:14-16).
தங்களை விடுவிக்க ஒருவர் பிறந்திருக்கிறார் என்ற செய்தியை கேள்விப்படும் மக்கள் அவரைச் சந்திக்க விரும்புவதே இயல்பான செயல். இங்கே, மேய்ப்பர்கள் கிறிஸ்துவிடம் தீவிரமாகச் சென்றனர் அல்லது விரைந்தனர் என்று வாசிக்கிறோம். நாமும் இந்த கிறிஸ்மஸ் காலங்களில் பயம் அற்றவர்களாக, இயேசுவைச் சந்திக்க முன்னோக்கி விரைந்து அவரைக் கிட்டிச்சேர்வோம்.
5. நற்செய்திக்கான எதிர்வினை எண்ணி பயம் வேண்டாம்: (லூக் 2:17,18)
கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியைக் கேட்டு, திருக்குழந்தையை கண்ணாரக் கண்ட மேய்ப்பர்கள் அதை பயமின்றி அறிவித்தனர். “மேய்ப்பர்கள் குழந்தையைக் கண்டு, பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள். மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.”
மேசியா என்னும் இரட்சகர் பிறந்திருக்கிறார், என்பதை கேட்டு, கண்ட மேய்ப்பர்கள், அந்த நற்செய்தியை பரப்பினார்கள். அவர்கள் தங்கள் செயலுக்கு எதிர்வினை ஏதாவது வருமோ, என்பதைப் பற்றி கவலைப்படவில்லை, மாறாக, தேவதூதர்களிடமிருந்து கேட்டு தாங்கள் கண்ட அதே செய்தியை எங்கும் பரப்பத் தொடங்கினார்கள். அதுதான் கிறிஸ்தவரின் நற்செய்திப் பணி. எனவே, கிறிஸ்து பிறப்பின் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும், இரட்சிப்பின் நற்செய்தி பிரசங்கிக்கபட வேண்டும்.
தீவிரவாதச் செயல், குண்டுவீச்சு, போதைப்பொருள் விற்பனை, பிரிவினைப் பிரச்சாரம் போன்ற தீய-செய்திகளை எதிர்வினை குறித்த பயமின்றி இந்நாட்களில் பரப்புரை செய்பவர்கள் ஏராளம். ஆனால் இதுவரை கேள்விப்பட்ட செய்திகளில் சிறந்த நற்செய்தியை அறிவிப்பதற்கு எதிர்வினை எண்ணி நாம் பயந்துகொண்டிருக்கிறோம். நாமும் கிறிஸ்துவைக் காண வாஞ்சிப்போம், அவரது வார்த்தைகளை கேட்க வாஞ்சிப்போம், கிறிஸ்துவுடைய இரட்சிப்பின் நற்செய்செய்தியை அறிவிக்க எதிர்வினைகளைக் கண்டு பயப்பாடாதிருப்போம். கிறிஸ்துவின் இரட்சிப்பை அனுப வித்த நாம், உண்மை மனதுடன் நற்செய்தியை அறிவிக்கும் போது அதைக் கேட்கிறவர்கள் உண்மையாகவே மகிழ்ச்சியடைவார்கள், ஆச்சர்யம் அடைவார்கள், அதிசயிப்பார்கள் என்பது வேதம் சொல்லும் சத்தியம்.
6. உங்கள் புது-வாழ்வு குறித்து பயப்பட வேண்டாம் (லூக் 2:20)
தெய்வக் குழந்தையைத் தரிசித்த மேய்ப்பர்கள் தங்கள் வாழ்வில் மாற்றுறுவாக்கம் பெற்றனர். “மேய்ப்பர்கள் தங்களுக்குச் சொல்லப்பட்டதின்படியே கேட்டு, கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப் போனார்கள்.” பெத்லகேம் பாலனை சந்தித்த மேய்ப்பர்கள் கடவுளை தரிசித்த பாக்கியம் பெற்றார்கள். கடவுளைத் துதிக்கிற மனிதர்களாய் மாறினார்கள். கடவுளின் நற்செய்தியை அறிவிக்கிறவர்களாகவும் மாறினார்கள். மொத்தத்தில் ஒரு புதுவாழ்வைப் பெற்றவர்களானார்கள். ஆயினும் அதுகுறித்து அவர்கள் கவலையோ, பயமோ கொள்ளவில்லை. இயேசு இரட்சகர் என்னும் குழந்தை அவர்கள் வாழ்க்கையை மாற்றியது.
இயேசு இரட்சகருடன் தொடர்பு கொள்ளும் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியும் மாற்றுறுவாக்கமும் அடைகிறார்கள். நீங்களும், கிறிஸ்து-தரும் இரட்சிப்பு குறித்து பயப்படாதிருக்கவும், புதுவாழ்வை பயமின்றி தொடரவும் கிறிஸ்மஸ் நம்பிக்கை அளிக்கிறது.
கிறிஸ்துவுக்குள் அன்பான விசுவாச குடும்பத்தாரே!
உங்கள் வாழ்வில் எதிர்பாராமல் நடக்கும் காரியங்களுக்காகவோ, கடவுள் உங்களுக்கு அருளும் வார்த்தையைக் குறித்தோ இன்னும் அஞ்ச வேண்டிய தில்லை. இரட்சகருடைய பிறப்பின் செய்தி, முழு உலகிற்கும் நற்செய்தி அந்த நற்செய்தியை அறிவிப்பதற்கோ, அதை அறிவிப்பதால் எழும் எதிர்வினை குறித்தோ நீக்கள் பயப்படாமல் கடவுளுடைய இரட்சிப்பின் திட்டங்களை நிறை வேற்றுங்கள். கடவுளுடைய மீட்பின் திட்டம் நம் மகிழ்ச்சிக்கானது. கிறிஸ்து பிறப்பு - கிறிஸ்மஸ் பண்டிகை நம் நன்மைக்கானதே அன்றி தீமைக்கானது அல்ல, எனவே, பயம் நீக்குவோம். கிறிஸ்து நம் அருகில் இருக்கும் இம்மானுவேல். எனவே, பயமின்றி அவரை கிட்டிச்சேர்வோம்.
கிறிஸ்து பிறப்பில் நமக்குக் கிடைக்கும் வாழ்வானது, ஒரு புதுவாழ்வும் ஒரு நிறைவாழ்வும் ஆகும். இவ்வாண்டு கிறிஸ்மஸ் தினத்தில் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் பயமற்ற ஒரு புதுவாழ்வைத் தொடங்குவோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென்
அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா
அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா,
ஆயர் மற்றும் ஊழிய இயக்குநர்,
நற்செய்தி வேதாகம அச்சுப்பதிவு ஊழியங்கள்,
சாலிகிராமம், சென்னை-93. தென்னிந்தியா.