கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! 2026ம் ஆண்டின் அட்வென்ட் காலத்திற்குள் பிரவேசிக்கும் நாம், ஆண்டவரின் முதலாம் வருகை குறித்து தியானிக்கவும் 2ம் வருகையை எதிர்கொள்ளவும் ஆயத்தப்படுவோம். வருகையின் கால அட்வென்ட் முழக்கங்களான ‘என் நேசரே, தீவிரமாய் வாரும்’ மற்றும் ‘ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.’ ஆகியவற்றை மையமாகக்கொண்டு உன்னதப் பாட்டு புத்தகத்தின் வெளிச்சத்தில் தியானிக்க அழைக்கப்படுகிறோம்.
உன்னதப்பாட்டு புத்தகம், ஒரு மணவாளனுக்கும் மணவாட்டிக்கும் இடையே உள்ள காதல் பாடலாக அமைந்துள்ளது. எட்டு அதிகாரங்களில் அவர்கள் ஒருவரை ஒருவர் தேடுகிறார்கள், கண்டுகொள்கிறார்கள், பிரிகிறார்கள், மீண்டும் சேருகிறார்கள். உன்னதப்பாட்டு புத்தகம் எப்படி முடிகிறது? ‘அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்’| என்று அல்ல. அது மூன்று வார்த்தைகள் கொண்ட ஒரு கதறுதலோடு முடிகிறது. விசுவாச வாழ்விற்கு அடிப்படையாக அமையும், ‘என் நேசரே, தீவிரியும்’ என்ற மூன்று வார்த்தைகளே அவை.
பிரியமானவர்களே, இது உன்னதப்பாட்டின் முடிவு மட்டுமல்ல, திருவருகை காலத்தின் இருதயமும் இதுதான். வருகையின் காலத்தில் சபை முழுவதும் என்ன செய்கிறது? இதே ஜெபத்தைத்தான் செய்கிறது. 2000 வருடங்களாக சபை செய்யும் கடைசி ஜெபமும் இதுதான்: ‘ஆண்டவரே, சீக்கிரமாய் வாரும்.’ இந்த ஜெபத்தில் உள்ள 3 சத்தியங்களைப் தியானிப்போம்.
1. இது அன்பின் கதறுதல்: - யார் கதறுகிறார்கள்?
இங்கு, யார் பேசுகிறார்கள் என்று பாருங்கள். ஒரு வேலைக்காரன் எஜமானனிடம் பேசவில்லை. அந்நியன் பேசவில்லை. மணவாட்டி
தன் நேசரிடம் பேசுகிறாள்.
உன்னதப்பாட்டு புத்தகத்தில் 62முறை மணவாட்டி அவரை ‘என் நேசர்’ என்று அழைக்கிறாள். இது நெருக்கமான அன்பு. சொந்த அன்பு. இன்று நாம், திருவருகை காலத்தில் நம் நேசர் இயேசுவுக்காய் காத்திருக்கிறோம், மெழுகு வர்த்தி ஒளி ஏற்றுகிறோம், கிறிஸ்துமஸ் ஆயத்த கொண்டாட்டங்களில் ஈடுபடுகிறோம். இவற்றுக்கான காரணம் ஒன்றுதான்; அது அன்புதான். தேவன் நம்மில் அன்பு கூர்ந்ததால் இயேசு கிறிஸ்து வந்தார் (யோவா.3:16). இது கடவுளின் அன்பு. ஆனால், நாம் இயேசுவை நேசித்தால்தான் அவர் வர வேண்டும் என்று கதறும் நிலை வரும். பல விசுவாசிகள் கிறிஸ்துமஸ் வேலையில் மும்முரமாக இருக்கிறார்கள், ஆனால் கிறிஸ்துவை நேசிக்க மறந்துவிடுகிறார்கள். வீட்டை சுத்தம் செய்கிறோம், ஆனால் வரப்போகும் விருந்தாளியை வரவேற்க உற்சாக குரல் எழுப்ப மறுக்கிறோம். இந்த திருவருகை காலத்தில், இயேசு உண்மையிலேயே உங்கள் நேசராய் இருக்கிறாரா? உங்களால் அவரை, ‘என் நேசரே’ என்று உரிமையோடு அழைக்க முடியுமா? திருவருகை நமது ‘முதல் அன்பை’ புதுப்பிக்க அழைக்கிறது.
2. இது ஏக்கத்தின் கதறுதல்: தீவிரமாய் வர மணவாட்டி ஏன் அழைக்கிறார்?
ஏன் மணவாட்டி ‘தீவிரமாய் வாரும்’ என்கிறாள்? ஏனென்றால் அவர் இன்னும் முழுமையாக அவளோடு இல்லை. இதுதான் திருவருகையின் போராட்டம். நாம் இரண்டு வருகைகளுக்கு நடுவில் வாழ்கிறோம்.
அவர் வந்துவிட்டார் - அது கிறிஸ்துமஸ். இம்மானுவேல், தேவன் நம்மோடு. அவர் வரப்போகிறார் - அது இரண்டாம் வருகை. தேவன் என்றென்றும் நம்மோடு.
ஆனால் இப்போது, நாம் நடுவில் வாழ்கிறோம். அவருடைய பிரசன்னத்தை உணர்கிறோம், ஆனால் அவருடைய பிரிவையும் உணர்கிறோம். ஆசீர்வாதங் களைப் பார்க்கிறோம், ஆனால் யுத்தம், வியாதி, கண்ணீர், மரணத்தையும் பார்க்கிறோம். அதனால்தான் ‘தீவிரமாய் வாரும்’ என்று கதறுகிறோம். வசனத்தைப் பாருங்கள் – ‘கந்தவர்க்க மலைகளின்மேல்’. கந்தவர்க்க மலைகள் அழகானவை, வாசனையுள்ளவை. ஆனால் அவை இன்னும் பிரிவின் மலைகள், பாவத்தின் மலைகள், துன்பத்தின் மலைகள், காலத்தின் மலைகள்.
மணவாட்டி சொல்கிறாள், ‘ஆண்டவரே, நீர் வெளிமானைப் போல வேகமானவர். எந்த மலையும் உம்மை தடுக்க முடியாது. அதனால் சீக்கிரமாய் வாரும்.’ திருவருகை நமக்கு கற்றுக்கொடுப்பது என்ன? இவ்வுலகில் திருப்தியடையாமல் இருப்பது பரிசுத்தமானது. இன்னும் அதிகமாக தேவனுக்காக ஏங்குவது சரியானது.
3. இது நம்பிக்கையின் கதறுதல்: நேசர் எப்படி வருகிறார்?
அவர் வருகையை எப்படி வர்ணிக்கிறாள்? மெதுவான கிழவனைப் போல அல்ல. வெளிமானைப் போல, மான்குட்டியைப் போல. வேதத்தில் மான், வெளிமான் என்பது மூன்று காரியங்களைக் குறிக்கும்:
அ) வேகம் - அவர் தாமதமானவர் அல்ல. 2 பேதுரு 3:9 சொல்கிறது, அவர் தாமதமாய் வரவில்லை, அவர் பொறுமையாய் இருக்கிறார்.
நேரம் வரும்போது வேகமாய் வருவார்.
ஆ) உறுதி - மான் மலைகளில் ஒருபோதும் சறுக்காது. நமது தேவன் ஒருபோதும் தவற மாட்டார். ஒவ்வொரு வாக்குத்தத்தமும்
நிறைவேறும்.
இ) அழகு - அவர் வருகை மணவாட்டிக்கு பயங்கரமானதல்ல, அழகானது.
முதல் முறை அவர் வர தீவிரித்தார். காலம் நிறைவேறினபோது தேவன் தம்முடைய குமாரனை அனுப்பினார் (கலா.4:4). இரண்டாம்
முறையும் அவர் தீவிரமாய் வருவார்; ‘இதோ, சீக்கிரமாய் வருகிறேன்’ (வெளி.22:8,12) என்கிறார். இதுதான் திருவருகையின்
நம்பிக்கை. நாம் வெற்றிடத்தை நோக்கி கதறவில்லை. ஏற்கனவே வந்தவரும், இனியும் வருவேன் என்றும் வாக்குக்
கொடுத்தவருமான நேசரை நோக்கி கதறுகிறோம்.
அன்பானவர்களே! இந்த திருவருகை காலத்தில் நாம் எப்படி வாழ்வது?
1. தினமும் ஜெபியுங்கள்: இந்த திருவருகை மாதம் முழுவதும், காலையில் போனை பார்க்கும் முன், ‘என் நேசரே, இன்று என்
இருதயத்திற்குள், என் குடும்பத்திற்குள் தீவிரமாய் வாரும்’ என்று ஜெபியுங்கள்.
2. ஆயத்தமாகுங்கள்: ‘தீவிரமாய் வா’ என்று கதறும் மணவாட்டி தன்னை ஆயத்தமாக வைத்திருக்கிறாள். உன்னதப்பாட்டு 4:12ல்
அவள் ‘அடைக்கப்பட்ட தோட்டம்’ எனப்படுகிறாள். உங்கள் தோட்டத்தை சுத்தம் செய்யுங்கள். கொடிமுந்திரியை கெடுக்கும்
சிறு நரிகளை உன்னதப்பாட்டு 2:15 - சிறு பாவங்கள், சிறு கசப்புகளை அகற்றுங்கள்.
3. அறிவியுங்கள்: திருவருகை அவர் வருவதற்காக காத்திருப்பது மட்டுமல்ல, அவர் வந்துவிட்டார் என்று மற்றவர்களுக்கு
சொல்வதும் கூட. இந்த கிறிஸ்துமஸில் ஒருவரிடம் சொல்லுங்கள் ‘என் நேசர் வந்துவிட்டார், உனக்கும் அவர் நேசராக
முடியும்.’
கடைகள் சொல்லுகின்றன, ‘தீவிரமாய் வந்து வாங்குங்கள்’ என்று. உலகம் சொல்லுகிறது, ‘தீவிரமாய் வந்து கொண்டாடுங்கள்’ என்று. ஆனால், சபை எல்லா அழைப்பிற்கும் மேலாக, வேறுவிதமாகக் கதறுகிறது, ‘என் நேசரே, தீவிரமாய் என்னிடத்தில் வாரும்’ என்று. அதுவே இந்த காலத்தில் உங்கள் ஜெபமாக இருக்கட்டும். பெத்லகேமில் குழந்தையாக ஒரு முறை வந்த தேவன், மகிமையோடு உங்களை தம்மிடமாய்ச் சேர்க்க மீண்டும் வருகிறார். அந்த பெரிய நாள் வரை தூய ஆவியானவர் உங்களோடு இருப்பாராக. ஆமென்.
அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா, ஆயர் மற்றும் ஊழிய இயக்குநர்,
நற்செய்தி வேதாகம அச்சுப்பதிவு, சாலிகிராமம், சென்னை-600 093. தென்னிந்தியா.