November 2025
குழந்தைகள் தினம்: சிறப்பு தேவசெய்தி...

குழந்தைகள் குறித்த புரிதல்

குழந்தைகளின் இன்றைய பிரச்சனைகளுக்குத் தீர்வளித்தல்
RESOLVING TODAY’S PROBLEMS OF CHIDREN
Rev. Dn. J. Felix Jesudoss

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே! நவம்பர் 14ஆம் நாள் குழந்தைகள் தினத்தை கொண்டாடு கிறோம். ‘’பிள்ளைகள் ஆண்டவர் அருளும் செல்வம்; மக்கட்பேறு அவர் அளிக்கும் பரிசில்’’ (தி.பா 127:3); இது திருமறை வாக்கு. கடவுளின் அருட்கொடையான குழந்தைகளை நாம் எவ்வாறு புரிந்து கொள்கின்றோம்? குழந்தைகளோடு இணைந்து நாம் எவ்வாறு வாழ்கின்றோம்? குழந்தைகளை எதை நோக்கி நாம் நகர்த்துகின்றோம்? என வினவி, நாம் வாழும் சூழமைவை உணர்ந்து குழந்தைகளின் வாழ்வியலை பகுத்தாய்வோம்.

இன்று, குழந்தைகள் வாழ, வளர நமது சமுதாயம் பாதுகாப்பானதாக இருக்கின்றதா? சில வருடங்களுக்கு முன்பு, ஹாசினி என்ற 7 வயது பெண் குழந்தை தன் வீட்டருகில் விளையாடிக் கொண்டிருக்கும்போது காணாமல் போய்விடுகிறாள். பெற்றோர், அக்கம்பக்கத்தினர், காவல்துறை யினர் தீவிரமாய் தேடுகின்றனர். அவர்களோடு இணைந்து தேடிய தஷ்வந்த் என்ற இளைஞர் மேல் சந்தேகப்பட்டு, விசாரித்ததில், அவன் குழந்தையை பாலியல் சீண்டல் செய்து, கொலை செய்து எரித்துவிட்டதாக வாக்குமூலம் அளிக்கிறான். நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கிறது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தாமதமானதால் பிணையில் வெளிவந்து, பெற்ற தாயையே கொலை செய்கிறான். மீண்டும் கைதாகிறான்; வழக்கு நகர்கிறது, குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று சொல்லி உச்ச நீதிமன்றம் அவனை விடுதலை செய்கிறது.

இது ஒரு எடுத்துக்காட்டுதான். இதுபோல் தினமும் ஆயிரக்கணக்கான சம்பவங்கள் அரங்கேறி கொண்டுதான் இருக்கின்றன. மறுபுறம், குழந்தைகள் எவ்வாறு வளர்கின்றனர்? சிறுவயது முதல் முதலே செல்போன், சினிமா, எதை நினைத்தாலும் வாங்க வேண்டும் என்ற பிடிவாதம், சமுதாய சீர்கேடுகளை புரிந்து கொண்டு அவற்றில் அங்கமாதல், பெற்றோரின் கனவுத்திணிப்பு போன்ற ஆரோக்கியமற்ற நிலையில் வளர்கின்றனர். இத்தகைய சூழமைவில், குழந்தைகளுக்கு கிறிஸ்தவ தகவுகளை கற்றுக்கொடுத்து சமுதாய சிக்கல்கள், ஏற்றத்தாழ்வுகள், சீர்கேடுகளை புரியவைத்து அவர்களை சரியான திசையில் நகர்த்த நாம் அழைக்கப்படுகின்றோம். இதை நாம், “சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள், அவர்களை தடுக்காதீர்கள். ஏனெனில், இறையாட்சி அத்தகையோருக்கே உரியது” (மாற். 10:14) என்ற வாக்கியத்தின் வழியாய்ப் புரிந்துகொள்கிறோம்.

முதலாவதாக குழந்தைகளை ஏற்றுக் கொள்ளுதல்:

சமநோக்கு நற்செய்தி நூல்களின்படி, சிறுபிள்ளைகளை இயேசு தொடவேண்டும் என்று அவரிடம் கொண்டுவருகின்றனர். ‘கொண்டுவருதல்’ என்பதற்கான கிரேக்க மூலம் மத்தேயுவில் ஞானிகள் காணிக்கை ‘கொண்டுவருதல்’ (மத்.2:11) எனும் ஒரே இடத்தில் மட்டும் காணப்படு கிறது. இதன் வழியாய் குழந்தைகளை கடவுளுக்கு படையலாக அவர் ஏற்றுக்கொள்ளும்படி கொண்டுவந்ததை புரிந்து கொள்ளலாம். சில இறையியலாளர்கள், இயேசுவின் தொடுதல் மற்றும் ஜெபம் ஆசீர்வாதத்தை கொண்டு வருகின்றது எனும் நம்பிக்கையில் அழைத்து வந்தனர் என குறிப்பிடுகின்றனர். ஆனால், அவர்கள் அந்த அடிப்படையில் கொண்டு வருவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஏனெனில், இயேசு, தன் சீடர்களை கடிந்து கொள்கிறாரே தவிர, கொண்டு வருகிறவர்களை அல்ல. அந்த நோக்கில் கொண்டு வந்திருந்தால் யோவா.6:26ல் நாம் படிப்பதுபோல் கடிந்துக் கொண்டிருப்பார். சீடர்கள், ‘குழந்தைகள் இயேசுவுக்கு இடையூறாக இருப்பர்’ என்றெண்ணினர். ஆனால் இயேசுவோ, குழந்தைகளை ஏற்றுக்கொள்கிறார்.

இயேசுவின் காலத்தில் குழந்தைகளை மிகவும் தாழ்ந்தவர்களாக, சுமைகளாக, அறிவில்லாதவர் களாகக் கருதினர். பவுலடிகள், ‘குழந்தைகளைப் போல் இருக்க வேண்டாம்’ என மூன்று இடங்களில் பற்றாளர்களை எச்சரிப்பது இதற்கு சான்று.

ஒரு காலத்தில் நம் இந்திய சமூகத்தில் பெண் சிசுக்கொலை பரவலாக காணப்பட்டது. ஆனால், இன்று மாறிவரும் கால சூழலில் ஒரு புறம் குழந்தைகள் பிறப்பது குடும்பகளில் பெரும் சவாலாக மாறிப் போய்விட்டது. இதற்கு உணவு மாற்றங்கள், வாழ்வியல் மாற்றங்கள், சுற்றுச்சூழல் என பல காரணிகள் உள்ளன. மறுபுறம் குழந்தைகள் சுமைகளாக இருப்பதாக பல பெற்றோர் கருதுவதையும் நாம் காணமுடிகிறது. குழந்தைகள், மாபெரும் ஆற்றல் மற்றும் ஆசீர்வாதம் என்பதை உணர்ந்து கொண்டு, அவ்வுணர்வுகளை அடுத்த தலைமுறைக்கு நகர்த்தவும் அழைக்கப்படுகின்றோம். குழந்தைகள் கடவுளால் நமக்கு அருளப்பட்ட செல்வம் என்பதை கருத்தில் நிறுத்தி குழந்தைகளை எற்றுக்கொண்டு, அவர்களுக்கான ஆசீர்வாதத்தின் கருவிகளாய் செயல்படுவோம்.

இரண்டாவதாக குழந்தைகளை புரிந்துகொள்ளுதல்:
இன்றைய காலச்சூழல் குழந்தைகள் வளர்வதற்கு மிகவும் சவால் நிறைந்ததாய் காணப்படு கிறது. பல சூழமைவுகளில் குழந்தைகள் பெரும் சவால்களை புற சூழ்நிலைகளால் எதிர் கொள்கின்றனர். குழந்தைகளை பெரும்பாலும் நாம், நம் கனவுகளை நிறைவேற்றுகிறவர் களாகவே பார்க்கிறோம்.

சீடர்கள் தங்கள் பார்வையில் குழந்தைகளை அணுக, இயேசுவோ, குழந்தை களின் பார்வையில் சீடர்களை அணுகுகிறார். திருமறையில்கூட பெரும்பாலும் பொதுபார்வையிலேயே குழந்தைகள் அணுகப்படுகின்றனர். ஆகவேதான், குழந்தைகளுக்கான இடம் என்பது பெரும்பாலும் எதிர் மறையாகவே காணப்படுகிறது. ஆனால், இயேசுவின் பார்வை நமக்கு மிகப்பெரும் படிப்பினையை தருகிறது. குழந்தைகளின் பக்கம் நின்று, அவர்களை அணுகுவதே குழந்தை களை புரிந்துகொள்ளும் சரியான முறையாகும். நாம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கிறவர் களாக மட்டுமன்றி குழந்தைகளோடு இணைந்து அவர்களை கற்றுக்கொள்ளவும், அவர்களை புரிந்துகொள்ளவும் முயற்சிப்போம்.

மூன்றாவதாக குழந்தைகளை ஆற்றல் படுத்துதல்:
இயேசு கிறிஸ்து குழந்தைகளை ஏற்றுக்கொண்டு, குழந்தைகள் பக்கம்நின்று அவர்களைப் புரிந்துகொள்கின்றார். மட்டுமல்ல, “இறையரசு இத்தகையோருக்கே உரியது” என்று சொல்லி குழந்தைகளை ஆற்றல்படுத்துகிறார். “இறையரசை, குழந்தைகளைப் போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார்” என்றும் கூறுகிறார். குழந்தைகள், சமுதாயத்தில் எப்படி ஒன்றுமற்றவர்களாகப் பார்க்கப்படுகின்றார்கள் என்பதை நன்கு உணர்ந்து அவர்களை முன்னிலைப்படுத்துகிறார். தம்மிடம் அவர்களை சேர்த்துக்கொள்வதன் வழியாய் அவர்களை இறையரசின் பங்காளர்கள் ஆக்குகிறார். இவ்வாறு, மிக நேர்த்தியாய் அவர் குழந்தைகளை வலிமைப்படுத்துகின்றார்.

அன்பானவர்களே! இன்று, நாம் குழந்தைகளை சமுதாய நீரோட்டத்தில் இருந்து விலக்கி வைத்துவிட்டு, நாம் எதை புகுத்த விரும்புகிறோமோ அதை மையப்படுத்தி அவர்களின் வாழ்வை அமைக்கிறோம். குழந்தைகளுக்கு சமுதாய எதார்த்தத்தை புரியவைக்க மறுக்கிறோம். முன்னேறவேண்டும், பணம்-பொருள் சேர்க்க வேண்டும், குடும்பத்தில்-ஊரில் பெரிய அந்தஸ்து பெற வேண்டும் போன்ற கருத்துக்களையே புகுத்துகிறோம். உண்மையில், இச்செயல், குழந்தைகளை வலிமை குன்றவே செய்கின்றது.

சமுதாய-அநீதிகள், சமுதாய-ஏற்றத்தாழ்வுகள் போன்ற யதார்த்தங்களைக் குழந்தைகட்கு கற்பிப்பதின் வழியாய், அவர்களை சுயநலமற்றோராய் மாற்றமுடியும். அதுவே, அவர்களின் பெரும் ஆற்றலாய் அமையும். பிறருக்காய் வாழ்த்தல், பிறர் நலன் பேணுதல் போன்ற, இறையரசின் தகவுகளை நோக்கி குழந்தைகளை நகர்த்தி அவர்களை ஆற்றல் படுத்துவோம். கடவுள்தாமே நம்மையும், நம் குழந்தைகளையும், நம் தலைமுறைகளையும் ஆசீர்வதித்து வழி நடத்துவராக. ஆமென்.




அருட்பணி. J. ஃபெலிக்ஸ் ஜேசுதாஸ் பி.ஏ., பி.டி. சி.எஸ்.ஐ. பொதட்டூர்பேட்டை குருசேகரம், சென்னைப் பேராயம்,
பொதட்டூர்பேட்டை, திருவள்ளுர் மாவட்டம், தமிழ்நாடு, தென்னிந்தியா