லூக்கா-2:52
“இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக் கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்.” லூக்கா-2:52
அன்பான இரட்சிப்பு இதழ் வாசக பெருமக்களே!
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனியத் திருப்பெயரில் உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துகள். நவம்பர் மாத இரட்சிப்பு இதழ் மூலம் உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி. இம்மாதம் சிறுவர்களை சிறப்பிக்கும் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் மாதம், எனவே அவர்களை சிறந்தவர் களாக வளர்த்தெடுப்பது மற்றம் பயிற்றுவிப்பது குறித்து சற்றே தியானிப்போம்.
குழந்தைகளை வளர்த்தெடுப்பதும் அவற்களை பயிற்றுவிப்பதும் நமது கடமை. இக்கால சூழலில் நமது பிள்ளைகளைக்குறித்த கரிசனையை வளர்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.
இன்று குழந்தைகள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். படிக்கும் பிள்ளைகளை வன்முறைகளில் ஈடுபடுத்துவது, குழந்தைகள் என்றும் பாராமல் அவர்களைக் கொன்று குவிப்பது போன்ற செயல்கள் வேதனைக் குரியவை. மாணவர்கள் சக-மாணவர்களிடம் வன்முறையில் ஈடுபடுவதும், சக-மாணவர்களை அடித்துக் கொல்வதும், சாதாரண நிகழ்வாக மாறிவிட்ட நிலை பரிதாபத்திற் குறியதாகும். உணவு இல்லாததால் இரத்த சோகையில் வாழும் நிலை, ஊட்டச்சத்து இல்லாததால் நோயுற்ற நிலை என நமது பிள்ளைகள் வளர்வதும் வேதனைக்குரிய ஒன்று. நமது பிள்ளைகளை இப்படிப்பட்ட சூழ்நிலைகளிலிருந்து பாதுகாப்பதும், பிறரைக் குறித்த கரிசனை உடையவர்களாய் அவர்களை வளர்ப்பதும் நமது தலையாய கடமை. இந்த சிந்தனையுடன் லூக்கா 2ம் அதிகாரம் 41முதல் 52 வரையுள்ள திருமறைப் பகுதியை என்னுடன் இணைந்து சிந்திக்க உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
1. வியத்தகு ஞானம்:
இயேசுவின் பெற்றோராகிய யோசேப்பு-மரியா ஆகியோர் கொண்டிருந்த மிகச் சிறந்த பழக்க வழக்கங்களில் ஒன்று எருசலேம் ஆலயத்திற்கு குடும்பமாக செல்லுதல், ஆண்டவரை வழிபடுதல், பண்டிகைகளைக் கொண்டாடுதல் (வச.23, 24, 41, 42). தங்களது அந்த வழக்கப்படி அவர்கள் தங்கள் மகனாகிய இயேசுவை பயிற்றுவிக்கும் வகையில் இயேசுவை எருசலேம் தேவாலயத்துக்கு அழைத்துச்செல்கிற நிகழ்ச்சியை இங்கு நாம் வாசிக்கிறோம்.
இன்று ஆலயத்திற்குச் செல்லுதல், திருச்சபையின் விழாக்களிலும் கொண்டாட்டங் களிலும் கலந்துகொள்ளுதல் போன்றவற்றில் நமது பழக்க வழக்கம் எப்படி உள்ளது? நமது பிள்ளைகளை ஆலயத்திற்கு அழைத்துகொண்டு வரும் பழக்கம் நம்மிடம் இருக்கிறதா? நமது பிள்ளைகள் ஞானத்தில் வளர்வதற்கு இந்த பழக்க வழக்கம் மிக மிக அவசியமான ஒன்றாகும். இயேசு ஞானத்தில் வளர்ந்தார். கர்த்தருக்கு மற்றும் இறை வார்த்தைகளுக்கு பயப்படும் பயம், கர்த்தருடைய வார்த்தைகளை கேட்கும் ஆர்வம், அதைப் புரிந்துக்கொள்ளும் ஆற்றல், திருமறை குறித்து கேள்விகளை கேட்கும் துணிச்சல், திருமறை வசனங்கள் குறித்த பிறருடைய கேள்விகளுக்கு பதிலளிக்கும் ஆர்வம் மற்றும் திறன் ஆகிய இயேசுவின் தாலந்துகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின (வச. 46, 47).
பாரம்பரியம்’ அல்ல, திருமறையே மையம், என்ற விசுவாசக்கொள்கை வேகம் எடுத்தது. திருமறை மொழிபெயர்ப்பு அனைவர் கரங்களிலும் சென்றடைந்தது. கிறிஸ்தவர்கள் இரண்டு ஆணி அடித்த நிகழ்வுகளை எப்போதும் மறக்கக்கூடாது.
திருமறையைப் படிப்பதாலும் அதைத் தியானிப்பதாலும் வரும் நல்ல பழக்க வழக்கங்கள் நமக்கு, பிறர் வியக்கத்தக்க ஞானத்தையும், அறிவாற்றலை யும், வளர்ச்சிகளையும் தரும் என்பது இயேசுவின் வாழ்விலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் உண்மையாகும். எனவே, இயேசுவின் பெற்றோரைப் போன்று, நாமும் நமது பிள்ளைகளை இக்காரியங்களில் பயிற்றுவிப்போம்.
2. உடல் வளர்ச்சி:
“இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் சிறப்பு மிகுந்தவராய்” வளர்ந்தார் என்று திருமறை (லூக்கா-2:52மு) நமக்குச் சொல்லுகிறது.
இன்று நமது வாழ்விடங்களிலுள்ள பல சிறுவர்-சிறுமியர் தீய நட்பு, தீய பழக்க வழக்கங்கள் போன்ற காரணங்களாலும், ஊட்டச்சத்துக் குறைபாடால் ஏற்படும் தொற்று, ஒவ்வாமை, இரத்த-சோகை போன்ற நோய்களின் காரணமாகவும் உடல் மெலிந்து, வலிமை இழந்து வாழ்ந்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். சிறுவர்-சிறுமியரின் இந்நிலைக்கு, பொருளாதார பிரச்சனை, கூடா-நட்பு (பள்ளி, கல்லூரி சூழல்கள்), குடும்ப பிரச்சனைகள் (குடி, வெறி, சண்டை போன்ற, பெற்றோரின் தீய பழக்க வழக்கங்கள்), சமய-ஈடுபாடு, பக்தியின்மை, தீய நாட்டங்களுடன் கூடிய அரசியல் ஈடுபாடு, ஆடம்பர வாழ்வுக்கான ஈர்ப்பு போன்ற பல காரணங்கள் உண்டு.
நமது பிள்ளைகள் இன்று எப்படிப்பட்ட பழக்க வழக்கங்களில், சூழல்களில் வளர்கிறார்கள் என்பதை பெற்றோராகிய நாம் அறிந்திருக்க வேண்டும். இதற்கு பிள்ளைகளைக் குறித்த பாரம், அவர்களுக்காக ஜெபிப்பது, அவர்களுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நல்ல உணவை வழங்குவது (இன்று உள்ள நுகர்வு கலாச்சாரத்தில் நம் பிள்ளைகள் எப்படிப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை சிந்திப்போம்) போன்ற காரியங்களில் விழிப்புணர்வுடன் செயல்படுவது மிக மிக அவசியம் ஆகும். நமது பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் சுத்தம், சுகாதாரம், ஆரோக்கியம், நடை, உடை, பாவனை போன்ற வற்றில் நாம் சற்று அக்கரை காட்டுவோமா?
3. கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்த வாழ்வு:
கிறித்தவ வாழ்வு, ‘எப்படியும் வாழலாம்’ என்பதா? கிறிஸ்துவுக்கு ஏற்புடையவராக வாழ்வதா? பவுல் தன்னை முற்றிலும் கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தார். “நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே” (பிலி-1:21) என பவுல் கூறுகிறார்.
இயேசுவும், தன்னைத் தேடி வந்த தன் தாய் தந்தையை பார்த்து கேட்கிறார். “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களிலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்று. இவ்வாறாக இயேசுவானவர், கடவுளுக்கு ஏற்புடையவராகவும் அதேசமயம், போல் மனிதருக்கு ஏற்புடையவராகவும் வாழ்ந்து காட்டினார். நாமும், இயேசுவைப்போல், கடவுளுக்கு பயந்து தூய உள்ளத்தோடு, உண்மையுடனும், நீதியுடனும் பிறருக்கு நன்மை செய்து வாழ்வது கடவுளுக்கு உகந்த வாழ்வாகும். இன்றைய குழந்தைகள், பெற்றோருக்குக் கீழ்ப்படிவது, பெரியோரையும், சிறியோரையும் மதித்து வாழ்வது, ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வது, துன்பங் களில் வாழும் மக்களுக்காக ஜெபத்துடன் உதவுவது, விடுதலைத் திருப்பணிகளில் ஈடுபடுவது போன்றவற்றில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். அவ்வாறன வாழ்வே கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்த வாழ்வு என இயேசுவின் வாழ்வு நமக்குச் சான்றளிக் கிறது. இன்று நம் பிள்ளைகள் கடவுளுக்கும் மனிதருக்கும் ஏற்புடையவர்களாக வாழ்கிறார்களா? என்பதை சிந்தித்து செயல்பட அழைக்கப்படுகிறோம்.
பிள்ளைகள் கடவுள் அளித்த பரிசு, இயேசு அவர்களை ஏற்று அரவணைக்கிறார் மற்றும் அவர்களை ஆசீர்வதிக்கிறார். அவர்கள் ஆண்டவருக்குரியவர்கள். நாமும் அவர்களை நேசித்து அரவணைத்து ஆசீர்வதித்து வழிநடத்துவோம். மூவொரு கடவுளின் அன்பும், அருளும் ஆசீர்வாதமும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.
அருட்திரு. டி. மோகன்ராஜ
அருட்திரு. டி. மோகன்ராஜ
ஆயர் மற்றும் தலைவர், தூய. பேதுருவின் ஆலயம்,
சி.எஸ்.ஐ. வியாசர்பாடி குருசேகரம்,
சென்னை-39, தென்னிந்தியா.