ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய திருப்பெயரில் அனைவருக்கும் என் அன்பின் சீர்திருத்த திருநாள் வாழ்த்துக்கள். திருச்சபை சீர்திருத்தவாதிகளின் அடிநாதமாகிய ‘கிருபை மாத்திரமே’ (GRACE ALONE) என்ற செம்பொருளை, சாலோமோனின் பிரசங்கி புத்தகத்தின் வெளிச்சத்தில் தியானிப்பதற்கு அழைக்கப்படுகிறோம்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு திருச்சபைச் சீர்திருத்தவாதிகள் (PROTESTANT REFORMERS) ஒரு உண்மையை உலகிற்கு சொன்னார்கள்: ‘SOLA GRATIA’ அதாவது நமது இரட்சிப்பு மற்றும் நிறைவாழ்வு ஆகியவை கடவுளின் கிருபையால் மட்டுமே கிடைக்கின்றன என்ற விவிலிய உண்மையே அது. இதைப் புரிந்துகொள்ள நாம் பொதுவாகப் புதிய ஏற்பாட்டுப் பகுதிகளைத்தான் நாடுவோம். ஆனால், இந்த தியானத்தில், பிரசங்கி புத்தகத்தின் வெளிச்சத்தில் கிருபையின் ஆழந்த சத்தியங்களை தியானிக்க அழைக்கப்படுகிறோம்.
1. மனித நீதியின் திவாலான நிலை: (பிர.7:20)
“ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியில் இல்லை” (பிர.7:20). நம்முடைய உண்மையான அபாத்திர
நிலையை நாம் ஒப்புக்கொள்ளும் வரை, ~இறைவனின் பேரருள் மட்டுமே| (SOLA GRATIA) என்ற கோட்பாடு நமக்கு விளங்காது.
கி.பி. 16ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஜெர்மனியைச் சேர்ந்த மார்ட்டின் லூதர் (MARTIN LUTHER) என்ற துறவி இந்த
வசனத்தின் ஆழமான பாரத்தை உணர்ந்தார். ஒரு தூய்மையான இறைவனின் முன்னிலையில் நிற்கத் தனக்கு எந்தத் தகுதியும் இல்லை
என்பதை அவர் அறிந்தார். தினமும் 6மணி நேரம் தன் பாவங்களை அறிக்கையிட்டார்; ஆனாலும், அவருடைய மனச்சாட்சி அவருக்கு
அமைதியைத் தரவில்லை. அவர் எழுதினார்: “நான் ஒரு துறவியாக, எப்படி இரட்சிக்கப்பட முடியுமோ அப்படி வாழ்ந்தேன். ஆனால்
என் மனச்சாட்சி எப்போதும் குற்ற உணர்வோடு தான் இருந்தது.” பிரசங்கி 7:20 சொல்வதுபோல், எவ்வளவுதான் முயன்றாலும்
மனித இயல்பில் உள்ள பாவக் கறையை சுயமுயற்சியால் கழுவ முடியாது என்பதை லூதர் தன் சொந்த வாழ்க்கையில் உணர்ந்தார்.
நம்முடைய ‘நல்ல செயல்கள் நமது தீய செயல்களை’ சமன் செய்துவிடும் என்ற மாயையை பிரசங்கி இங்கு உடைக்கிறார்.
சூரியனுக்குக் கீழே மனிதர்களால் நீதியை உருவாக்க முடியாது; எனவே, நீதி என்பது இறைவனிடமிருந்து நமக்குக் கொடையாக
மட்டுமே வர வேண்டும்.
2. சுய-இரட்சிப்பின் வீண் முயற்சி: (பிரசங்கி 1:14; 2:11)
“சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற காரியங்களையெல்லாம் கவனித்துப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாய்; இருக்கிறது” மனிதர்கள் இயல்பாகவே தங்களது கடின உழைப்பு, செல்வம், அறிவுத்திறன் மற்றும் ஒழுக்கநெறிகள் மூலம் தங்களைத் தாங்களே இரட்சித்துக் கொள்ள முயல்கிறார்கள். பிரசங்கி இவை அனைத்தையும் செய்து பார்த்துவிட்டு, இவையெல்லாம் மாயை, அதாவது காற்றை கரங்களால் பிடிக்க முயல்வது போன்றது என்று முடிவு செய்கிறார்.
லூதரின் காலத்தில், கத்தோலிக்க திருச்சபை “பாவமன்னிப்புச் சீட்டுகளை” (INDULGENCES) விற்பனை செய்தது. மக்கள் பணம் கொடுத்து அந்தச் சீட்டுகளை வாங்கினால் அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்றும், அவர்கள் இறந்த பிறகு காத்திருப்பதிலிருந்து (PURGATORY) தப்பிப்பார்கள் என்றும் போதிக்கப்பட்டது. சீர்திருத்தவாதிகளான ஜான் கால்வின் மற்றும் லூதர் இந்த நடைமுறையை எதிர்த்தார்கள். மனிதன் பணத்தையோ, புண்ணியங்களையோ கொடுத்து இரட்சிப்பை விலைக்கு வாங்க முயல்வது, பிரசங்கி கூறுவது போல ‘காற்றைப் பிடிக்கும்’ ஒரு வீண் செயலே என்று அவர்கள் முழங்கினார்கள். இரட்சிப்பை மனிதன் உற்பத்தி செய்ய முடியாது; அதை இறைவன் மட்டுமே அருள முடியும். பிரசங்கி சொல்வதற்கிணங்க, நம் சொந்த முயற்சியால் இறைவனின் அன்பைப் பெற வேண்டும் என்ற பாரத்திலுமிருந்து SOLA GRATIA நம்மை விடுவிக்கிறது.
3. மகிழ்ச்சியை அனுபவிப்பது இறைக்கொடையே: (பிர.3:12-13; 5:19)
“தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே புசிக்கவும், தன் பங்கைப் பெறவும், தன் பிரயாசத்தில் மகிழ்ச்சி யாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகமே." பிரசங்கி 5:19 மற்றும் 6:1-2ல் பிரசங்கி, ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மையை குறிப்பிடுகிறார்: ஒரு மனிதனிடம் உலகிலுள்ள அனைத்து செல்வங்களும் இருக்கலாம், ஆனால் அதை அனுபவிக்கும் பாக்கியத்தை (கிருபையை) அவனுக்குக் கொடுப்பவர் தேவனே, என்பதே அவ்வுண்மை.
சீர்திருத்த காலத்தில், ஆன்மீக மகிழ்ச்சியையும் அமைதியையும் அடைவதற்காகப் பலர் உலகைத் துறந்து, திருமணம் செய்யாமல், வறுமையை ஏற்றுக்கொண்டு மடாலயங்களில் துறவறம் மேற்கொண்டனர். ஆனால் மார்ட்டின் லூதர் போன்ற சீர்திருத்தவாதிகள் ‘கிருபை மாத்திரமே’ என்ற உண்மையை உணர்ந்து, மடாலயங்களைவிட்டு வெளியே வந்தனர். லூதர் திருமணம் செய்து கொண்டார்; குடும்ப வாழ்க்கையை ரசித்தார்; நல்ல உணவையும் இசையையும் இறைவனின் கொடையாகக் கொண்டாடினார். விவிலியம் காட்டும் பேரருள் என்பது உலகை வெறுப்பதில் இல்லை, மாறாக இறைவன் தரும் எளிய அன்றாட ஆசீர்வாதங்களை அவருடைய கிருபையின் பரிசாக ஏற்று மகிழ்வதே என்பதுதான் அந்த உண்மை. இந்த உலகத்திலிருந்து மகிழ்ச்சியை நாம் பலவந்தமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆகவே, கடவுள் நமக்கு அளிக்கும் நன்மைகளையும் கிருபைகளையும் நாம் நம் வெறும் கைகளை ஏந்தி பெற்றுக்கொள்ளவேண்டும்.
4. மாறாத இறைவனின் செயலில் உள்ள பாதுகாப்பு: (பிரசங்கி 3:14)(வச.8,9)
“தேவன் செய்கிறது என்றென்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன்; அதினோடு ஒன்றும் கூட்டவும் கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவும் கூடாது; மனுஷர் தம்முடைய சமுகத்தில் பயந்திருக்கும்படி தேவன் இப்படிச் செய்கிறார்.” (பிர. 3:14). ‘இரட்சிப்பு’ என்பது, தொடக்கம் முதல் முடிவு வரை இறைவனின் செயல் மட்டும் என்பதே SOLA GRATIA கோட்பாட்டின் அடித்தளம். மனிதர்கள் ஒழுக்கத்தில் பலவீனமானவர்கள் என்பதால், மனித முயற்சியைச் சார்ந்திருக்கும் எந்தவொரு இரட்சிப்பின் முயற்சியும் இறுதியில் சரிந்துவிடும்.
அக்டோபர் 31, 1517 அன்று, மார்ட்டின் லூதர் வித்தன்பெர்க் தேவாலய கதவில் தனது 95 கொள்கைகளை ஆணி அடித்தார். மனிதனோ அல்லது திருச்சபையோ இறைவனின் இரட்சிப்புச் செயலில் எதையும் கூட்டவோ குறைக்கவோ முடியாது என்பதே அதன் மையக்கருத்து. கடவுளின் செயலே இறுதியானது, சரியானது, மாற்ற முடியாதது. நம்முடைய நித்திய வாழ்வு நமது பலவீனங்களின் மேல் அல்லாமல், கடவுளுடைய வாக்குத்தத்தத்தில் நிலைத்திருக்கிறது.
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே! கடவுளால் நேசிக்கப்படும் நாம், நமது சொந்த நீதியை நிலைநாட்ட வேண்டிய தேவையில்லை; அல்லது நமது உடைந்த நிலையை நாமாகவே சரிசெய்ய வேண்டியதில்லை. காற்றின் பின்னே ஓடுவதை நிறுத்துவோம். நம் சுயமுயற்சிகளை கைவிட்டு, கர்த்தர் மேல் பாரத்தை வைத்து தூய்மை-வாழ்வு வாழ்வோம். நம் வெறுங்கைகளை உயர்த்தி, கடவுளின் கிருபையை மாத்திரம் நம்பிக்கையுடன் நோக்குவோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா, ஆயர் மற்றும் ஊழிய இயக்குநர்,
நற்செய்தி வேதாகம அச்சுப்பதிவு, சாலிகிராமம், சென்னை-600 093. தென்னிந்தியா.