ஆண்டவரும் உலக இரட்சகரும், இரட்சிப்பை இலவசமாய் அனைத்துலக மக்களுக்கும் வழங்கியவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிதான நாமத்தினாலே இரட்சிப்பு வாசகர்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்களையும் அத்துடன் சீர்திருத்தத் திருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இரட்சிப்பு மாத இதழ் வழியாக ஆண்டவருடைய வார்ததையை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன், ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறேன். இரட்சிப்பு ஊழியக் குடும்பத்தாருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அக்டோபர் மாதம் என்றாலே சீர்திருத்தத் திருச்சபையைச் சார்ந்த நாம் நினைவில் கொள்ள வேண்டியது அக்டோபர் 31ம் தேதியான சீர்திருத்தத் திருநாள்தான்.
இங்கே நான் ஒரு சிறிய வரலாற்றுச் செய்தியைக் கூறி, ஆண்டவருடைய வார்த்தையை தொடங்க விரும்புகிறேன். அருட்திரு முனைவர் மார்ட்டின் லூத்தர் ஐயா அவர்கள் ஒரு கத்தோலிக்க மத துறவியாவார். அவருடைய காலத்தில் திருச்சபையானது சீரிழந்து, பல்வேறு விதமான சீர்கேடுகளை உடையதாகக் காணப்பட்டது. குறிப்பாக, பாவமன்னிப்புச் சீட்டு என அழைக்கப்பட்ட மன்னிப்புக் கடிதங்களை பெறுவதால் கிடைக்கும் இரட்சிப்பு என்பது பரலோகம் செல்வதற்கான பாஸ்போர்ட் ஆகும் என்ற தவறான செயல்பாடு காணப்பட்டது. இதைக்குறித்து அதிகமாக சிந்தித்துக்கொண்டு, வேதத்தை தியானித்துக்கொண்டு இருந்த லுத்தர் அவர்கள் மனதில், “விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்” (ரோம.1:17) என்ற வசனத்தின் கருத்து ஆழமாக பதிந்தது. வேதத்தின் துணைகொண்டு திருச்சபையை சீர்திருத்த வேண்டும் என்ற உன்னத நோக்கோடு ‘95 கோட்பாடுகள்’ என்னும் ஆராய்சிக் கொள்கையை உருவாக்கி, அதன் பிரதியை 15-10-1517 அன்று ஜெர்மனியிலுள்ள விட்டன்பர்க் கோட்டை தேவாலயத்தின் கதவில் ஆணிகளால் அடித்தார். ஆகவேதான் நாம் அக்டோபர் 31ம் நாளை சீர்திருத்த திருநாளாக ஆசரிக்கிறோம்.
‘SOLA SCRIPTURA’ என்பது லத்தீன் மொழியிலுள்ள ஒரு பதமாகும். அதற்கு ‘வேதம் மட்டுமே’ என்பது பொருளாகும். 508 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் மாபெரும் சீர்திருத்தத் திருச்சபபயில், இன்று வேதம் எவ்வகையில் சீர்திருத்தத்தின் சீரிய சின்னமாக காணப்படக்கூடும் எனபதை வேதத்தின் துணைகொண்டு தியானிப்போம்.
2ராஜா.22 மற்றும் 23 ஆகிய அதிகாரங்களில், யூதாவின் ராஜாவாகிய ஆமோன், கர்த்தருடைய வழியில் நடவாமல், தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டு விட்டான் என்று வேதம் சொல்லுகிறது. ஆயினும், அவனுடைய குமாரனாகிய யோசியா, கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழியிலெல்லாம் வலதுபுறம் இடதுபுறம் விலகாமல் நடந்தான். அக்காலத்தில், கர்த்தரின் ஆலயத்திலே நியாயப்பிரமாண புஸ்தகம் கண்டு எடுக்கப்பட்டது; அதன்பின் அடைந்த சீர்திருத்தத்தை சீராக தியானிப்போம்.
1. வேதம், ஆயனுடைய ஆவிக்குரிய ஜீவியத்தை சீர்திருத்துகிறது: எபி.4:12 (SCRIPTURE REFORMS THE SPIRITUALITY OF A SHEPHERD)
“தேவனுடைய வார்த்தையானது... ஆத்துமாவையும் ஆவியையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது” (எபி.4:12). “வேத வாக்கியங்களெல்லாம் சீர்திருத்தலுக்கும் பிரயோஜனம் உள்ளவைகளாய் இருக்கின்றன” (2தீமோ.3:16-17)
2ராஜா. 22 வசனம்-11, “ராஜா நியாயப்பிரமாண புஸ்தகத்தின் வார்த்தைகளை கேட்டார்" என்றும், வசனம்-19, “அதைக் கேட்டபோது அவன் இருதயம் இளகி, அவன் கர்த்தருக்கு முன்பாக தன்னை தாழ்த்தினான்" என்றும் சொல்கின்றன. யூதா ஜனத்தின் ஆயனான யோசியா ராஜா, கண்டெடுக்கப்பட்ட நியாயப்பிரமாண புஸ்தகத்தின் வார்த்தையை எப்போது கேட்டானோ, அப்போதே அவனுடைய ஆவிக்குறிய ஜீவியத்தில் சீர்திருத்தம் உண்டாகிறதை இங்கு நாம் காண்கிறோம். வசனம்-13, “நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் மட்டும் அல்லாமல் எனக்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்” என்று யோசியா ராஜா சொல்வதாகச் சொல்லுகிறது. ஆவிக்குரிய ஜீவியத்தின் உன்னத நிலை என்பது, தன்நிலை அறிவதே ஆகும். அதை நாம் யோசியாவினுடைய வாழ்வில், வேதத்தினால் வருகிற சீர்திருத்தத்தில் காண்கிறோம்.
2. வேதம், ஆடுகளின் ஆவிக்குரிய ஜீவியத்தை சீர்திருத்துதுகிறது: 2ராஜா.23:2,3
(SCRIPTURE REFORMS SPIRITUALITY OF THE SHEEP)
2ராஜா. 23:2-3 வசனங்கள், “ராஜாவும், அவனோடு யூதாவின் மனுஷர் யாவரும் எருசலேமின் குடிகள் அனைவரும்.. சிறியோர்
துவக்கிப் பெரியோர்மட்டுமுள்ள சகலரும்... ஜனங்கள் எல்லாரும் உடன்படிக்கைக்கு உட்பட்டார்கள்” என்று சொல்லுகின்றன.
நாம் நன்கு அறிந்திருக்கிறபடி, வேதத்தின் அடிப்படையில் ஆடுகள் என்பது ஜனங்களைக் குறிக்க பயன் படுத்தப்படுகிறது.
எப்போது ஒரு ஆயனுடைய ஆவிக்குரிய ஜீவியம் உயிர்பிக்கப்படுகிறதோ, அப்போதுதானே அவனுடைய ஆடுகளின் ஆவிக்குரிய ஜீவியமும்
உயிர்பிக்கப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இதன் அடிப்பபடயில் யோசியா ராஜாவின் சொற்கேட்டு ஜனங்கள் எல்லாரும் உடன்படிக்கைக்கு உட்படுகிறார்கள். 2ராஜா. 23:4-20 வசனங்கள், யோசியா ராஜா யூதா எங்கும் போய் ஜனங்களின் நடுவில் காணப்பட்ட ஆவிக்குரிய சீர்கேடுகளைக் களைகிறார் - குறிப்பாக, பாகாலுடைய விக்கிரகத் தோப்புக்கள், மேடைகள், பலிபீடங்கள், சிலைகள், கோயில்கள் ஆகிய அனைத்தை யும் தீட்டாக்கி, தகர்த்து, சுட்டெரித்துப்போட்டு எருசலேமுக்குத் திரும்பிவந்த செய்தியை விவரித்துச் சொல்கின்றன.
இதில் நாம் கவனிக்கவேண்டியது என்னவெனில், ஆயனோடு (மன்னனோடு) இணைந்து, ஆடுகள் அனைத்தும் (மக்களைனைவரும்) இத்தகைய ஆவிக்குரிய சீர்திருத்தத்தை, தேசத்தில் செய்துமுடித்த ஒரு மாபெரும் மகத்துவச் செயலாகும்.
சீர்திருத்தத்தின் சீரிய சின்னமாகிய வேதம், தனிப்;ட்ட ஒரு மனிதனை மாத்திரமல்லாமல் அவனைச் சூழ்ந்திருக்கிறவர்களையும் சீர்திருத்தத்துக்கு வழிநடத்துகிறது என்பது எத்தனை உண்மை. சீர்திருத்தத் திருச்சபையைச் சார்ந்த நாம், சீர்திருத்த திருநாளை நினைவுகூர்கிற இந்த வேளையில், யோசியாவை சீர்திருத்தத்திற்கு வழிநடத்திய வேதம், நம்முடைய தனிப்பட்ட வாழ்வில் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறதா? நம்முடைய சீர்திருத்தத்தின் வழியாக நமது குடும்பத்தில் மாற்றுருவாக்கம் ஏற்பட்டிருக்கிறதா? அதனைத் தொடர்ந்து நாம் இணைந்திருக்கிற திருச்சபையில் சீர்திருத்தம் காணப்படுகிறதா? என்பதனை சிந்தித்து செயல்பட அழைக்கப்படுகிறோம்.
தனிமனித வாழ்வில் சீர்திருத்தம் இல்லையெனில் குடும்பங்களில் சீர்திருத்தம் காண முடியாது, குடும்பங்கைளில் சீர்திருத்தம் காணப்படாவிட்டால் திருச்சபையில் சீர்திருத்தம் உண்டாகாது. எங்கிருந்தோ வருவது சீர்திருத்தம் அல்ல; பக்தன் பாடுவதுபோல,
“முழங்காலில் நிற்க வேதத்தை அறிய, தினந்தோறும் தேவா உணர்த்தும்; உமக்கும் எனக்கும் இடையில் எதுவும் என்றுமே வராமல் காத்திடும்”
என்ற பாடல் வரிகளுக்கேற்ப, வேதத்தை அறிந்துகொள்ள நம்மை முழுமையாய் அர்ப்பணிப் போம். ‘சீர்திருத்தத்தின் வேர், வேதமே.’ ‘SOLA SCRIPTURA’ – ‘வேதம் மாத்திரமே’ சீர்திருத்தத்தின் சீரிய சின்னமாகும்.
கர்த்தர்தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென், ஆமென்.
அருட்திரு. V. பால் சாமுவேல் பொன்சிங்,
சேகர குரு, சி.எஸ்.ஐ. பண்டாரவிளை
சேகரம்
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம்,
பண்டாரவிளை, தூத்துக்குடி மாவட்டம், தென்னிந்தியா.