October 2024

சிறப்பு தேவசெய்தி

சீர்திருத்தம் தரும் மாற்றங்கள்

எரேமியா-18:4

CHANGES BROUGHT ABOUT BY THE REFORMATION
Rev. J.A. Martin J. Philip

இயேசு கிறிஸ்துவின் இனிய திருப்பெயரில் அன்பின் வாழ்த்துக்கள். மனித வாழ்க்கை என்பது இன்பம்-துன்பம், வெற்றி-தோல்வி. விடுதலை-அடிமைத்தனம் மற்றும் அன்பு-வெறுப்பு இவற்றின் பின்னலாக அமைந்தது. நமக்கு சாதகமான சூழல் அமையும்போது மாற்றங்களைக் நாம் விரும்புவது இல்லை. அதே வேளையில் நமக்கு சாதகமில்லாத சூழல்கள் மாற்றங்களைக் கொண்டு வருவதுமில்லை. இருக்கின்ற அமைப்பு ஒன்று பாழடைந்து, அதன் அடிப்படையையே, கட்டமைப்பையே, தோற்றத்தையே மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம்தான் ‘சீர்திருத்தம்’ எனப்படுகிறது (எரே-18:4). இருப்பதை அழிப்பதல்ல சீர்திருத்தம்; மாறாக, புதிய சமத்துவ மதிப்பீடுகளுக்கு அழுத்தம் தந்து புதிய மாற்றத்திற்கு அழைத்துச் செல்வதே சீர்திருத்தம்.

சீர்திருத்தத்தின் தேவைகள்:

சீர்திருத்தம் தொடக்ககால திருச்சபையிலிருந்தே கிறிஸ்தவத்தின் மாபெரும் இயக்கமாக இருந்து வருகிறது. சீர்திருத்தத்தின் சிறப்பான காலம் 16-ம் நூற்றாண்டு ஆகும். ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் போப்பின் ஆட்சிக்காலத்தில் பாவமன்னிப்பு சீட்டு, மரித்தோரின் ஆன்மாவை புனிதப்படுத்தும் இடம், புனித பயணங்கள், புனிதருக்கு வழிபாடுகள், நினைவுச் சின்னங்களை வழிபடுதல் போன்ற திருமறைக்கு முரணான செயல்கள் மலிந்து காணப்பட்டன. இவைகளை எதிர்த்து குரல் கொடுத்த ஜான் விக்ளிப் (john wycliffe 1320-1384ad) ஜான் ஹஸ் (john huss 1360-1415 ad) போன்றோர் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

வான-தகப்பனால் நமக்கு அருளப்பட்ட ஞானத்தகப்பன் மார்ட்டின் லூதர் (martin luther), ஜெர்மனியிலுள்ள விட்டன்பர்க் (winttenberg) இறையியல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிவந்தார். திருச்சபையை சீர்திருத்துவதற்காக 31-10-1517ல் மார்ட்டின் லூதர் தமது 95-கருத்துரைகளை விட்டன்பர்க் ஆலயத்தின் கதவில் ஆணி அடித்து ஒட்டி வைத்தார். ‘சடங்கு’ போதையில் மயங்கிக் கிடந்த சபையை அடித்து எழுப்பிய இடி முழக்கமான இச்செயல் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி, வரலாற்றையே மாற்றி அமைத்தது. வியாபாரிகளின் கையிலிருந்த திருச்சபையை, விசுவாசிகளிடம் கொண்டு சேர்த்தவர் மார்ட்டின் லூதர்.

சீர்திருத்தவாதிகளான மார்ட்டின் லூதர், ஜான் கேல்வின் மற்றும் சுவிங்லி ஆகியோருக்கு ஆதாரமாக இருந்தது ஐந்து சோலாக்கள் எனலாம். சோலா (SOLA) என்ற லத்தீன் வார்த்தையின் பொருள் ‘மட்டுமே’ (ALONE) அல்லது ‘ஒரே-ஒரு’ (ONLY) என்பதாகும். இந்த 5-சோலாக்களும் சீர்திருத்தத்தின் வித்தாகும்.

சீர்திருத்தத்தின் தந்தை மார்ட்டின் லூதர்: (கி.பி.1488 - 1546)

ஜெர்மனியின் விட்டன்பர்க் நகர பேராலயக் கதவில் மார்ட்டின் லூதர் தனது 95-கருத்துக்களை ஆணி அறைந்து அறிவித்த 1517ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் நாளே சீர்திருத்த திருநாள் எனப்படுகிறது. மார்ட்டின் லுத்தரின் இச்செயல் சீர்திருத்தத்தை தூண்டியது. சில வாரங்களுக்குள் இந்த 95 கருத்துரைகள் ஜெர்மனி எங்கும் மொழிபெயர்க்கப்பட்டு பரப்பப்பட்டன.

மார்ட்டின் லூதர் ஏற்றின சீர்திருத்த நெருப்பு. உரோமை திருச்சபையின் முழு பலத்தையும் எதிர்த்து ஜெர்மனி முழுதும் பரவிற்று. அதைத் தொடர்ந்து சுவிட்சர் லாந்தில் ஸ்விங்லி, டென்மார்க்கில் டாசன். சுவீடனில் பீட்டர்சன். இங்கிலாந்தில் எட்டாம் ஹென்றி, பிரான்ஸில் ஜான் கால்வின் மற்றும் ஸ்காட்லாந்தில் ஜான் நாக்ஸ் போன்ற சீர்திருத்த தலைவர்களால் சீர்திருத்த இயக்கம் வலுப்பெற்றது.

பாரம்பரியம்’ அல்ல, திருமறையே மையம், என்ற விசுவாசக்கொள்கை வேகம் எடுத்தது. திருமறை மொழிபெயர்ப்பு அனைவர் கரங்களிலும் சென்றடைந்தது. கிறிஸ்தவர்கள் இரண்டு ஆணி அடித்த நிகழ்வுகளை எப்போதும் மறக்கக்கூடாது.

1) நம் பாவ-அழுக்கைப் போக்க இயேசுவின் கரங்களில் அடிக்கப்பட்ட ஆணி.
2) நம் அறியாமையை அகற்ற ஆலய-கதவில் மார்ட்டின் லூதர் அடித்த ஆணி


மார்ட்டின் லூதரின் ஐம்பெரும் கோட்பாடுகள்: ஐந்து - சோலாக்கள் (SOLAS)
1. திருமறையினால் மட்டுமே (by scripture alone - sola scriptura)
2. பற்றுறுதியால் (விசுவாசத்தினால்) மட்டுமே (by faith alone - sola fide)
3. கிருபையினால் மட்டுமே (by grace alone - sola gratia)
4. கிறிஸ்துவால் மட்டும் (though christ alone - solus christus)
5. கடவுளுக்கு மட்டுமே மகிமை (glory to god alone - soli deo gloria)

1. திருமறையினால் மட்டுமே (by scripture alone - sola scriptura)

சீர்திருத்த காலத்தில் கடவுள், உலகம், கிறிஸ்து, பாவம், மீட்பு. திருச்சபை மற்றும் கிறிஸ்தவ வாழ்வு ஆகிய உண்மைகளை புரிந்து கொள்வதற்கு திருமறை ஒன்றுதான் ஆதாரமாக இருந்தது. மனுக்குலம் மீட்கப்படுவதற்கும், பற்றுறுதி கொள்வதற்கும் கடவுளின் சித்தத்தை அறிவதற்கும், கடவுள் மனிதரிடம் எதிர் பார்க்கும் வேலைகளை அவர்கள் செய்வதற்கும், திருமறைதான் முழுமையான அதிகாரமுடையது என சீர்திருத்தவாதிகளான மார்ட்டின் லூதர், ஜான் கால்வின் ஆகியோர் வலியுறுத்தினர். அப்-2:42-ல் “அவர்கள் அப்போஸ்தலர்ருடைய உபதேசத்தில் உறுதியாய் தரித்திருந்தார்கள்.” என ஆதி-திருச்சபையின் விசுவாச-வாழ்வு குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சபையின் உண்மை-செயல்பாடு இங்கு சொல்லப்படுகிறது. சீர்திருத்தப்பட்ட திருச்சபை, சீர்திருத்தும் திருச்சபையாய் தொடர அப்-2:42-ன் அனுபவம் தேவை.

2தீமோ-3:14 “நீ கற்று நிச்சயத்துக் கொண்டவைகளில் நிலைத்திரு” என பவுல் தீமோத்தே யுவிற்கு அறிவுரை சொல்கிறார். மார்ட்டின் லூதர் திருமறையைப் படித்து, ‘விசுவாசத் தினாலே நீதிமான் பிழைப்பான்’ என்பதைக் கற்றுக்கொண்டார். பாவமன்னிப்புச் சீட்டை விலைகொடுத்து வாங்குவதின் மூலம் பாவமன்னிப்பை பெற முடியாது; இயேசுவின் சிலுவை-மரணத்தின் வழியாக மீட்பு இலவசமாக அனைவருக் கும் வழங்கப்பட்டுள்ளது என ஆணித்தரமாக வாதிட்டார். இத்தகைய கருத்தை திரும்பப்பெற வேண்டுமேன மார்ட்டின் லூதரிடம், பேரரசர் சார்லஸ் கி.பி.1521-ல் கேட்டபோது, “ஒருவேளை மரணமே வந்தாலும் அதை ஏற்றுக் கொள்வேனே தவிர நான் திருமறை யில் கற்றுத் தெளிந்ததிலிருந்து பின்வாங்க மாட்டேன்.” ‘HERE I STAND’ என்றார். இன்று நாமும் திருமறையில் கற்றுக் கொண்டவைகளில் உறுதியாய் நிலைத்திருக்க வேண்டும்.

2. விசுவாசத்தினால் (பற்றுறுதியால்) மட்டுமே: (by faith alone - sola fide)

ரோமன் கத்தோலிக்க திருச்சபை, ‘மீட்பைப் பெறுவதற்கு விசுவாசம் மட்டும் போதாது; நற்செயல்களும் வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால், சீர்திருத்தக் காரர்களோ, ~விசுவாசத்தினால் மட்டும் மீட்பை பெறமுடியும்’ என்றனர். அவர்களின் இக்கருத்துக்களை வலுப்படுத்துவதற்கு “கிருபையினால் விசுவாசத்தைக்கொண்டு ரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு. ஒருவரும் பெருமைப்படாத படிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல” (எபே-2:8) என்ற வசனம் உதவியது. “கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசத்தின் மூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவர்களாய் காணப்பட வேண்டும்” (பிலி-3:9) போன்ற வசனங்களைக் கொண்டு, நாம் பாவிகள்; கடவுளின் அழைப்பிற்கு ஏற்ற நிலையில் தூயவர்களாக வாழ இயலாதவர்கள், அப்படியிருந்தும் கடவுள் தமது கிருபையினால் நமக்கு மீட்பை இயேசுவின் பாடுகள், மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் வழியாக வழங்கினார். இந்த மீட்பு நமது நற்செயல்களால் ஆனதல்ல. விசுவாசத்தினால் மட்டும் அமைந்ததாகும் என அறிவுறுத்தினர். விசுவாசத்தினால் மட்டுமே நாம் கிறிஸ்துவுடன் இணைக்கப் பட்டுள்ளோம். ஆதித் திருச்சபையாரைப் போன்று ‘விசுவாசத்தினால் மட்டுமே’ என்ற போதகத்தில் உறுதியுள்ளவர்களாய் நிலைத்திருந்தால் மாத்திரமே நம் திருச்சபை சீர்திருத்தும் சபையாக வளர்ந்து பெருகும்.

3. கிருபையினால் மட்டுமே: (by grace alone - sola gratia)

மார்ட்டின் லூதர், கடவுளின் அருளினால் மட்டுமே மீட்புப் பெற முடியும் என்பதை, பல்வேறு செயல்பாடுகளுக்கு உட்படுத்தி தெளிவடைந்த பின்னர், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தவறான புரிந்து கொள்ளுதலுக்கு விடையளிக்கும் விதத்தில் heidelberg catechism என்னும் கோட்பாட்டுப் புத்தகம் வெளியிடப்பட்டது, அது, நற்செயல்களால் மீட்புப் பெற இயலாது. கடவுள் தம் அருளால் நம்மை மீட்டிருக்கிறார் என்பதை விளக்கிக் காட்டியது. இதற்கு சான்றளிக்க எபே-2:8-10 வசனங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. நாமும், கடவுளின் அருளைப் பெற்று அவரின் சாட்சியாக வாழ நம்மை அர்ப்பணிப்போம்.

4. கிறிஸ்துவால் மட்டும்: (though christ alone - solus christus) 

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் சாக்கிரமெந்துகளான திருமுழுக்கு (BAPTISM) பாவ நிவாரணம் (PENANCE) மற்றும் திருவிருந்து (EUCARIST) ஆகியவைகளால் மீட்பு என்றது. ஆனால் மார்ட்டின் லூதர் போன்ற சீர்திருத்தக்காரர்கள் கிறிஸ்து மட்டுமே மீட்பின் ஆதாரம் என்பதை தெளிவுபடுத்தினர். இயேசு கிறிஸ்து மட்டுமே விசுவாசிகளின் மத்தியஸ்தராகவும், மன்றாடுகிறவருமாய் இருக்கிறார் என்றனர். நாமும் நம் வாழ்வில் கிறிஸ்துவால் மட்டுமே மீட்கப் பட்டவர்களாய் சாட்சி பகர அழைக்கப்படுகிறோம்.

5. கடவுளுக்கு மட்டுமே மகிமை:  (glory to god alone-soli deo gloria)

கத்தோலிக்க திருச்சபை கடவுளிடம் நேரடியாக அல்லாமல், புனிதர்கள் மூலம் மன்றாட வலியுறுத்தியது. மீட்பை பெற்றுக்கொள்ள விலையுயர்ந்த பாவமன்னிப்பு சீட்டுக்களை வாங்க கட்டாயப்படுத்தியது. ஆனால் சீர்திருத்தக்காரர்கள், “நீங்கள் உண்டாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மகிமைக்கென்றே செய்யுங்கள்” (1கொரி-10:31) என்பதை வலியுறுத்தினர். “நான் கர்த்தர். என் மகிமையை வேறொருவருக்கும், என் துதியை விக்கிரகங்ளுக்கும் கொடேன்” (ஏசா-42:8) என்ற வசனத்தின்படி, மகிமை கடவுள் ஒருவருக்கே என்பதில் உறுதியாயிருந்தனர். ஆகவே, கடவுள் ஒருவரையே மகிமைப்படுத்துவது நமது அசைக்க முடியாத பற்றுறுதியாக (ரோம-11:36) இருக்கட்டும்.

திருச்சபையானது, திருமறைக்கு ஒவ்வாத வழிமுறைகளில் செயல்பட்டதால் மார்ட்டின் லூதர் அதை எதிர்த்தார். அவரது நோக்கம், திருச்சபையின் விழிப்புணர்வு மாத்திரமே என்பதை புரிந்துகொள்வோம். இன்றைய திருச்சபைக்கு ‘சீர்திருத்தம்’ தேவை என்பது மறுக்க முடியாத உண்மை. ஆகவே, தூய ஆவியானவரின் வழிநடத்துதலால் மாற்றம் பெற்று, புத்தெழுச்சி பெற்ற திருசபையாய் வாழ்வதற்கு நம்மை அர்ப்பணிப்போம்.

இறைமகன் இயேசுவின் இறையாசி உங்களுடனிருப்பதாக!


அருட்திரு. J.A. மார்ட்டின் J. பிலிப்



அருட்திரு. J.A. மார்ட்டின் J. பிலிப்,
ஆயர் மற்றும் தலைவர், சி.எஸ்.ஐ. இயேசு அன்பர் ஆலயம், பெசன்ட் நகர்,
அடையாறு, சென்னை-20, தென்னிந்தியா.