கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே! ஆண்டவரும் அருமை இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய திருப்பெயரில் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். செப்டம்பர் மாதம் என்றவுடனே நம் நினைவில் நிற்பது ஆசிரியர்தினம் ஆகும். ஆசிரியர் தினத்தைக் கொண்டாடுகிற இந்த வேளையில் உங்களில் ஆசிரியப்பணி செய்கிற ஒவ்வொருவருக்கும் எனதன்பின் ஆசிரியர் தின நல்வழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு, ஆசிரியர் என்பவர், தான் கல்வி கற்றுக்கொண்டதில் இருந்தும், தன் பெற்றோரிடம் பெற்றுக் கொண்டதில் இருந்தும், தன் மாணவர்களுக்கென பல்வேறு கொடைகளை விட்டுச்செல்பவர் என்ற கருத்தின் அடிப்படையில் ‘ஞானமுள்ள ஒரு ஆசிரியர் சம்பாதித்து வைத்துள்ள மரபுச்சொத்து’ என்ற பொருளை மையமாகக் கொண்டு நீதிமொழிகள் 4:1-9 வசனங்களின் துணைகொண்டு சற்று நேரம் திருமறையைத் தியானிக்க உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.
மாணவ மாணவிகளுக்கு, அவர்களுடைய ஆசிரியர்களிலெல்லாம் மூத்த ஆசிரியர் அவர்தம் தந்தை அல்லது தாய் ஆகியோரே. அவ்விதத்தில், சாலமோன் ஞானி, தன் தந்தையான தாவீது அரசனிடமிருந்து தான் கற்றுக்கொண்டதை (மரபுச் சொத்தை) அடுத்த தலைமுறைக்குக் கடத்துபவர் ஆகிறார். ஞானத்தை ஒரு விலைமதிப்பற்ற குடும்பப் பாரம்பரிய மரபுச் சொத்தாக கருதி, அதைப் பற்றிக்கொள்ளுமாறு அடுத்த தலைமுறையினரை அவர் இங்கு வலியுறுத்துகிறார்.
உலகில் வாழும் ஒவ்வொருவரும் ஒரு மரபுச் சொத்தை தன் வழிமரபினருக்கு விட்டுச் செல்கி றார்கள்; அது உலக பொருட்செல்வமாகவோ, உண்மையின் புதையலாகவோ அல்லது தூசியின் குவியலாகவோ இருக்கலாம். ஆனால், நீதிமொழிகள் 4:1-9 வசனங்கள், நமது பார்வையின் கோணத்தை மாற்றி, உலகப் பொருட்செல்வத்திடம் இருந்து தலைமுறை தலைமுறையாக நிலைத்து நம்மைத் தொடர்ந்து வரும் ஞானத்தின் பக்கம் திருப்புகின்றன. இங்கு சாலோமோன் ஞானியின் வார்த்தைகளின்படி, மரபுச்சொத்து என்பது, நாம், நம் பிள்ளைகளுக்கு விட்டுச்செல்லும் செல்வத்தால் அளவிடப்படுவதில்லை, மாறாக, அது நாம் அவர்களுக்கென விட்டுச்செல்லும் ஞானத்தால் மாத்திரமே அளவிடப்படுகிறது.
1. ஆசிரியர்களின் போதனைகளை பெற்றுக்கொள்ளுங்கள்: (வச. 1 - 4)
“பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள். நான் உங்களுக்கு நற்போதகத்தைத் தருகிறேன்.” (வச.1,2)
மாணவர்கள், தங்கள் ஆசிரியர்கள் கற்பிப்பதை கவனமுடன் கேட்டு அவற்றை புரிந்து கொள்ளவேண்டும். இங்கு, நமது மூத்த ஆசிரியர்களுள் ஒருவரான நம் தகப்பனின் போதனையை கேட்டு அதன்படி நடப்பதன் அவசியத்தை சாலோமோன் ஞானி வலியுறுத்துகிறார்.
ஞானத்தை பெற்றுக்கொள்வதற்கு, நன்கு கவனித்துக்கேட்டு கற்றுக்கொள்ளும் ‘செவி’ தேவை. அவ்வாறு, தகப்பனுடைய வார்த்தைகளைச் செவிசாய்த்து கேட்கும்போது நற்போதகத்தை (நல்ல போதனைகள்) பெற்றுக்கொள்ள முடியும். தாம் ஒரு காலத்தில் தன் தந்தையான தாவீது அரசருக்கு முன்பாக அமர்ந்திருந்த ஒரு கனிவான மகனாக இருந்ததை சாலமோன் தன் நீதிமொழிகளை கேட்போருக்கு நினைவூட்டுகிறார்.
ஒரு அறிவார்ந்த ஆசிரியர் தனது பலவீனங்களை உணர்ந்கவராய் இருக்கிறார். ஒரு மரபை, அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் பணியில், நமக்கே வழிகாட்டுதல் அவசியமாய் தேவைப் பட்டது என்பதை ஒப்புக்கொள்வது அதன் தொடக்கமாகும். அவிதத்திலேயே, சாலோமோன் ஞானி தன் தந்தையின் வழிகாட்டுதல் மற்றும் ஞானம் நிறைந்த நற்போதகம் தனக்கு கிடைத்ததை இங்கு பிரதிபலிக்கிறார்.
2. ஆசிரியர்களுடைய மரபுச்சொத்தின் மதிப்பை அறிதல்: (வச.5 - 7)
“ஞானத்தைச் சம்பாதி, புத்திiயுயும் சம்பாதி; என் வாயின் வார்த்தைகளை மறவாமலும் விட்டு விலகாமலும் இரு. அது உன்னைத் தற்காக்கும்; அதின்மேல் பிரியமாயிரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும்.” (வச.5 - 6)
ஒரு திறமையான ஆசிரியர் என்பவர் விலைமதிப்பிட முடியாத மரபுச் சொத்துக்களை உடையவர். அவர், தன் மாணவர்களை எழிதில்; விட்டுக்கொடுக்காதவர்; அவர், தன்னுடைய மாணவர்களை பாதுகாக்கும் துணிவுகொண்டவர் என்பதை சாலோமோன் ஞானி இங்கு வெளிப்படுத்துகிறார். ஞானம் ஒரு பாதுகாவலன் ஆகவும் கௌரவ மகுடமாகவும் உருவகப் படுத்தப்படுகிறது. அது உலக நாடுகளின் நாணயங்கள் அனைத்தையும் விட மிகவும் மதிப்பு வாய்ந்தது என்று நீதிமொழிகள் கூறுகின்றன. சந்தைகள் வீழ்ச்சியடையலாம், செல்வங்கள் கரைந்து போகலாம், ஆனால் இறைவனின் சத்தியத்திலும் தெய்வீக ஞானத்திலும் நிலைத்த மனம், வாழ்க்கையின் புயல்களுக்கு எதிராக மீள்திறனுடன் வாழ்வில் என்றென்றும் தலை நிமிர்ந்து நிலைநிற்கிறது.
3. ஆசிரியர்களிடம் கற்றவைகளை கடைபிடித்து கௌரவித்தல்: (வச.8,9)
“நீ ஞானத்தை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதைத் தழுவிக் கொண்டால், அது உன்னைக் கனம்பண்ணும். அது உன் தலைக்கு அலங்காரமான முடியைக் கொடுக்கும்; அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும்” (வச. 8, 9).
அறிவார்ந்த ஒரு ஆசிரியரின் மிக உயர்ந்த மரபு என்பது, மாணவன் சிறந்து விளங்குவதையும், நேர்மையுடன் நடப்பதையும், அதன் மூலம் மற்றவர்களைப் பயன்பெறுவதையும் காண்பதே ஆகும். அவ்விதமாகவே சாலோமோன் ஞானியும் தன் தகப்பனாகிய தாவீது அரசரை ஆசிரியராக ஏற்றுக்கொண்டு, தன் தகப்பனின் உன்னதமான மரபுச்சொத்துகளுக்குத் தகுதியுள்ளவராக நடந்துகொள்கிறார். இவ்வசனங்களில், நாமும் அவரைப்போல் நமது முதல்-ஆசிரியர்களான நம் பெற்றொர்களிடம் கற்றுக்கொண்டவைகளை வாழ்வில் கடைபிடிக்கும்படி அவர் நம்மை அறிவுறுத்துகிறார்.
நமக்கு கற்பிக்கப்பட்ட நற்போதனைகளில் அல்லது நாம் பெற்றுக்கொண்டிருக்கிற மரபுச்சொத்துக் களில் நிலைத்திருந்து வாழ்ந்து காட்டுவோம். ஒரு ஆசிரியருக்குக் கிடைக்கும் மிக உயர்ந்த மரியாதை என்பது, அவருடைய போதனைகளைக் முழுமையாகக் கடைப்பிடிக்கும் மாணவர் களைப் பெற்றிருப்பதே ஆகும்..
அன்பானவர்களே! இன்று நம்முடைய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் நமக்கு எவ்வெவெற்றை மரபுச்சொத்தாக விட்டுச்சென்றுள்ளனர் என்பதை ஆராய்ந்து பார்ப்போம். நாம், நமது ஆசிரியர் களிடம் கற்றுக்கொண்டதில் இருந்தும், நம் பெற்றோரிடம் பெற்றுக்கொண்டதில் இருந்தும் நம் பிள்ளைகளுக்கும் மாணவர்களுக்கும் என்னென்ன மரபுச்சொத்துக்களை விட்டுச்செல்கிறோம்? நமது அடுத்த தலைமுறைக்கு எதைக் கடத்துகிறோம்? என்பதையும் ஆராய்ந்து பார்ப்போம். கர்த்தருக்குப் பயப்படும் பயத்தை நம் அன்றாட வாழ்வின் அடித்தளமாக்கிக்கொள்ள உறுதி கொள்ளுவோம். அதன்மூலம், நம்மைப் பின்தொடர்பவர்களுக்கு நம்முடைய வாழ்க்கையே ஒரு வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயம் இல்லை. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா, ஆயர் மற்றும் ஊழிய இயக்குநர்,
நற்செய்தி வேதாகம அச்சுப்பதிவு, சாலிகிராமம், சென்னை-600 093. தென்னிந்தியா.