September 2025
ஆசிரியர் தின சிறப்பு தேவசெய்தி...

ஆசிரியர்களின் வார்த்தைக்கு ஆமென் சொல்லுவோம்;

AN ‘AMEN’ FOR TEACHERS
Rev. S.J.D. Dharmaraja

இயேசு கிறிஸ்துவின் இனிய திருப்பெயரில் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள் மற்றும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள். ஆசிரியர் தினத்தைக் கொண்டாடும் இந்த காலகட்டத்தில், ஆசிரியர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பது குறித்து தியானிக்க அழைக்கப்படுகிறோம். மழலை-பள்ளி ஆசிரியர்கள் அ என்பது அம்மா, ஆ என்பது ஆடு, இ என்பது இலை என நமக்குக் கற்றுக் கொடுகிறார்கள். தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நமக்குப் எண், எழுத்து படிக்கவும் எழுதவும், கற்றுக்கொடுத்து அறிவையும் திறனையும் வழங்குகிறார்கள். உயர்கல்வி-பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், வாழ்க்கையின் ஏன்? எப்படி? போன்ற கேள்விகளுக்கு விடை களை அறிந்துகொள்ளவும், அறிவியல்-சமூக-பெருளாதார உலகைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறார்கள். அவர்கள் நமக்குக் கற்பித்த வாழ்வுக்கான பாடங்கள், ‘முயற்சி செய்வோர் அனைவரும் வெற்றிபெற முடியும்’ என்ற உண்மையை உணர்த்துகின்றன. எனவே, ஆசிரியர் தினத்தை கொண்டாடுகிற இந்த வேளையில் ஆசிரியர்களுக்கு, நமது விலைமதிப்ப்பற்ற நன்றியைத் தெரிவிப்பது நமது கடமை ஆகும். ஆசிரியர்கள் நமக்கு வழங்கும் அறிவு, மதிப்புகள் மற்றும் திறன்களுக்காகவே இந்த நன்றி.

நாம் நமது நன்றியை ஆசிரியர்களுக்குத் தெரிவிப்பது என்பது, நாம்-அவர்கட்கும், அவர்கள்-நமக்கும், கடவுள்-நம்மனைவருக்கும் உண்மையாய் திகழ்வதைக் கொண்டாடும் ஒரு நிகழ்வாகும்.

இன்று, விசுவாசமுள்ள மக்களாக, நமது ஆசிரியர்களையும் அவர்களின் போதனைகளையும் நாம் எவ்வாறு கொண்டாட முடியும்? என்பதற்கான மூன்று காரணங்களை வேதவசனங்கள் வழங்குகின்றன.

1. ஆசிரியப்பணி என்பது கடவுள்-வழங்கிய பணி: (எரே 1:4-10)

நமக்கு கற்பிக்கும்படி ஆசிரியர்களை அனுப்பியவர் கடவுளே. நீங்கள் ஏன் கற்பிக்கிறீர்கள்? என நம் ஆசிரியர்களிடம் கேட்டால், அவர்கள், ‘’இது எனது தொழில்’’ என்று கூறுவார்கள். ஆனால், தொழில்கள் யாருக்கும் திடீரென்று கிடைப்பது இல்லை; அவை எப்போதும், ஒவ்வொரு வருக்கும் கடவுளால் வழங்கப்படுபவை. எரேமியா 1:4-10 வசனங்கள் தொழில் என்ற பரிசைப் பற்றியது. கடவுள், எரேமியாவை ஒரு தீர்க்கதரிசியாக, தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டும் என்றும்; அவருடைய வார்த்தைகள் யாவும் கடவுளின் வார்த்தைகளாக இருக்கும் என்றும் சொல்வதைக் காண்கிறோம். இங்கு தீர்க்கத்தரிசியை (ஆசிரியரை) படைகிறவர் (வச-5), உருவாக்குகிறவர் (வச-6,7மு), அனுப்புகிறவர் (வச-7பி), பலப்படுத்துகிறவர் (வச-8) எல்லாம் கடவுளே என்று நாம் காண்கிறோம்

கற்பிக்கும் பணி தீரிக்கதரிசனப் பணியிலிருந்து வேறுபட்டதல்ல. விசுவாசக் கண்களால் பார்க்கும்போது, கற்பித்தல் என்ற தொழில், கடவுளின் வார்த்தையில் உருவாகிறது என்பதைக் காணமுடியும். இது, ஒவ்வொரு ஆசிரியரும் பெற்று அனுபவிக்கும் ஒரு நன்மை ஆகும். இந்த நன்மையை அடக்கவோ அல்லது அடைத்து வைக்கவோ முடியாது; இந்த அனுபவம், ஒரு ஆசிரியரை தன்னலமற்ற பகிர்வின் சக்தியாக மாற்றுகிறது. ஆசிரியர்கள் வழங்கும் அறிவுரைகள், மதிப்புகள் மற்றும் திறன்கள் அவர்களில் ஊற்றெடுத்து பிரவாகிப்பவை. அவற்றை அவர்கள் மீண்டும் மீண்டும் மாணவருக்குக் கொடுக்க விரும்புவது தவிர்க்க முடியாதது என்பதை ஆசிரியர்களே அறிவார்கள்.

ஆசிரியர்கள், இவ்விதத்தில் அர்ப்பணிப்போடு பணியாற்றும்போது, எரேமியாவைப் போலவே, மாணவர்களுக்கு ஞானமுள்ள, உயிரூட்டும் வார்த்தைகளை வழங்க முடியும். கற்பிப்பதற்கான அழைப்பு என்பது இயேசுவின் பணியேயன்றி வேறல்ல (மத். 11:29) என்பதையும் ஆசிரியர்கள் உணரவேண்டும்.

ஆகவே, கடவுளால் அனுப்பப்பட்ட ஆசிரியர்களின் வார்த்தைகளை மதித்து அவற்றை ஆமோதிப்போம். அப்படியே ஆகட்டும், ஆமென்! என்போம்.

2. ஆசிரியப்பணி என்பது ஒரு தீர்க்கதரிசியின் பணியாகும்: (மத்.5:13-16)
கடவுள் எரேமியாவை கற்பிக்கும் பணிசெய்ய அனுப்புகிறார். மக்களிடையே கடவுளின் வார்த்தையை அவர் அறிவிக்க வேண்டும். அவர் திருத்தவும் மாற்றவும் மட்டுமல்ல, கட்டவும் நடவும் வேண்டும். அதாவது, கடவுளில் புதிய வாழ்க்கையை அவர்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். “இதோ, என் வார்த்தைகளை உன் வாயிலே வைக்கிறேன். பார், பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் உன்னை ஏற்படுத்தினேன்” (வச-9,10). சங்கீதம்-34 நமக்கு நினைவூட்டும் புதிய காரியம்: கடவுளை நோக்கிப்பார்த்து கற்றுக்கொண்டோர் பிரகாசம் அடைந்தார்கள் (சங்.34:5). அவ்வாறே, மாணவர்களும் கடவுளால் அனுப்பப்பட்ட ஆசிரியரை நோக்கிப்பார்த்து கற்றுக்கொள்ளும்போது பிரகாசமான எதிர்காலத்தைப் பெறுவர். மாணவர்கள் ஆசிரியரிடம் அனுபவித்து, உணர்ந்து கற்றுக்கொள்வதை இது குறிக்கிறது. ‘தீர்க்கதரிசனம் சொல்லுதல்’ என்பது கடவுள் நம் மத்தியில் இருக்கிறார் என்பதை உணர்த்த உதவுவதாகும். ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்குவித்து, அவர்களுக்கு சவால் விடுத்து, அவர்களை வெற்றி வாழ்வுக்கு வழிநடத்தும் போது இது நிகழும். இதனால்தான் கற்பித்தலை தீர்க்கத்தரிசனப் பணிக்கு சமமானது என்கிறோம். ஆகவே, பிரியமானவர்களே! நீங்களும் நானும், பெற்றோர்களாக, மாணவர்களாக ஆசிரியர்களின் வார்த்ததையை கடவுளின் வாக்காக ஏற்றுக்கொண்டு, அப்படியே ஆகட்டும், ஆமென்! என்று சொல்லுவோம்.

3. ஆசிரியப்பணி என்பது உலகை ஒளிரச்செய்யும் பணி: (மத்.5:13-16)

மாணவர்களை மாற்றுருவாக்கி அவர்களை உலகிற்குள் அனுப்புவது, குறிப்பாக, மறக்கப் பட்டவர்கள் மற்றும் மதிப்பிழந்தவர்கள் வாழ்வில் மாற்றுருவாக்கத்தை ஏற்படுத்துவது ஆசிரியர்களின் குறிக்கோளாக எப்போதும் இருக்கவேண்டும். மத்தேயு 5:13-16 நற்செய்தி பகுதியில் இதை நாம் பார்க்கிறோம். கடவுளின் அன்பால் உலகை ஒளிரச் செய்வதே இயேசுவின் நோக்கம். அவர் இப்பணியை கற்பித்தலில் வழியாகவே செய்தார்.

பள்ளியில், கல்லூரியில் கற்பிப்பது என்பது இயேசு செய்தது போல், உலகை ஒளிரச் செய்வதாகும். ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் அறிவுத்திறன்களை ஒளிரச் செய்வது என்பது, அவர்களின் ஆர்வங்களைத் தூண்டுவது ஆகும். இவ்வாறு, இதயங்களை எரியச் செய்து, அவர்கள் வாழ்வை வளப்படுத்துவதன. மூலம் உலகை ஒளிரச் செய்யலாம். இன்று, கற்பதும், கற்பிப்பதும் இயேசுவின் பணியின் ஒரு பகுதியாக இருப்பதைக் எண்ணி கொண்டாடுவோம். உலகை ஒளிரச் செய்வதற்கான கற்பித்தல் குறித்து வேதத்தை ஆராய்வோம். உயிர்த்தெழுந்த இயேசு எம்மாவூர் செல்லும் வழியில் இரண்டு சீடர்களுக்கு செய்த போதனையில் அவரது வார்த்தைகள் இதற்குப் பதிலளிக்கிறது. இயேசுவின் வார்த்தையாகிய அக்கினி, அவர்கள் ஆன்மாவுக்கு புத்துணர்ச்சியூட்டி, அவர்கள் இதங்களை கொளுந்துவிட்டு எரியச்செய்து, புத்துயிரூட்டி, உயிர்த்தெழுதலின் செய்தியை அறிவிக்க அவர்களைப் பலப்படுத்தியது. இவ்வாறாக, ஆசிரியர்கள் கற்பிக்கும்போது கடவுளின் பிரசன்னம் அவர்கள் மூலம் ஒளிர்வதை மாணவர்கள் அனுபவிக்கிறார்கள்.

அன்பான விசவாசிகளே! இன்று ஆசிரியர்களுக்கு நாம் சொல்லும் நன்றி, ஒரு நீண்ட சொற்றொடராக இல்லாமல் ஒரே ஒரு சிறிய வார்த்தையாகக்கூட இருக்கலாம். ஆனால் அது கொண்டாட்டத்துக்கான, ஒரு ஆக்கபூர்வமான இறைவார்த்தையாக இருக்கட்டும். ஆம், ‘ஆமென்!’ என்றே சொல்லுவோம். இதை விட சிறந்த வார்த்தை எதுவும் இருக்க முடியாது: அப்படியே ஆகட்டும், ஆமென்! என்போம். கர்த்தர் உங்களை ஆசீர்;வதிப்பாராக. ஆமென்.




அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா,
ஆயர் மற்றும் ஊழிய இயக்குநர், நற்செய்தி வேதாகம அச்சுப்பதிவு பதிப்பகம்),
சாலிகிராமம், சென்னை. தென்னிந்தியா.