August 2026
சிறப்பு தேவசெய்தி…...

விடுவிக்கும் ஆண்டவர்

ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். திரு.பா (சங்).146:8
THE LORD WHO DELIVERS
Rev. C. Samuel Jebakumar

ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரில் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்! கடந்த மாதம் முழுவதும் நம்மை பாதுகாத்து, ஆசீர்வதித்த ஆண்டவர் இந்த புதிய மாதத்திலும் நம்மோடிருந்து நம்மை வழிநடத்த சித்தம் உடையவராக இருக்கிறார். ஆகஸ்டு மாதம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது இந்தியாவின் விடுதலைத் திருநாள் (சுதந்திர தினம்) தான். எனவே, விடுதலை வாழ்வு குறித்த கருத்தை மையமாகக்கொண்ட 146வது திருப்பாடலின் 8வது திருமொழியை ஆதாரமாகக்கொண்டு சற்றுநேரம் தியானிக்க அழைக்கப்படுகிறோம்.

“ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். (சங்).திரு.பா.146:8.

இந்த திருவசனத்தை இந்த மாதத்தின் இறைவார்த்தையாக பெற்றுக்கொண்டு ஆசீர்வாதம் பெற உங்களை அன்புடன் வாழ்த்துகிறேன்.

சங்கீதம்-146 என்பது ஒரு ‘அல்லேலூயா சங்கீதம்’ ஆகும். . ‘அல்லேலுயா| என்ற துதி-ஒலியில் தொடங்கி ‘அல்லேலுயா’ என்ற துதி-ஒலியில் முடியும் சங்கீதங்கள் ‘அல்லேலூயா சங்கீதங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.சங்கீத புத்தகம் நூலில் உள்ள கடைசி ஐந்து ‘அல்லேலுயா’ சங்கீதங்களில் இச்சங்கீதம், முதலாவது ஆகும். இந்த ஐந்து சங்கீதங்களிலும் தொடக்கத்திலும் முடிவிலும் ‘அல்லேலுயா’ இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். 146-வது திருப்பாடல் என்பது பாபிலோனிய சிறையிருபுக்குப் பிறகு எழுதப்பட்டிருக்கலாம் எனவும், அந்த காலகட்டத்தில் இருந்த அரசியலின் நிலையற்ற தன்மையால் மக்கள் பல்வேறு கடினப்பாடுb களையும், சிக்கல்களையும் சந்தித்தனர் எனவும் திருமறை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இத்தகையதான ஒரு சூழலில், மக்களுக்குக் கிடைக்கும் விடுதலையைக் குறித்து விளக்கும் வசனமாக இவ்வசனம் அமைந்துள்ளது.

1. ஆன்மீக விடுதலை: SPIRITUAL FREEDOM

இந்த சங்கீதம் நன்றி மற்றும் புகழ்ச்சி பாடலாக அமைந்துள்ளது. இதன் 8வது வசனத்தின் முதல் பகுதி, ‘ஆண்டவர், பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்’ என சொல்லுகிறது. திருமறை யில் ‘பார்வையற்றோர்’ என குறிப்பிடப்பட்டுள்ளது வெறும் உடல்ரீதியான பார்வையற்ற நிலையை மட்டுமல்லாமல், ஆன்மீக பார்வையற்ற நிலைமையும் குறிப்பதாக உள்ளது. இஸ்ரயேல் மக்கள் அனுபவித்த பல்வேறு அடிமைத்தனங்களும், துன்பங்களும், உபத்திரவங்க ளும், போராட்டங்களும் அவர்;களின் ஆன்மீக பார்றையற்ற நிலையால்தான் ஏற்பட்டது. யாவே கடவுளை விட்டுவிட்டு வேற்று தெய்வங்கள் பின்னே அவர்கள் சென்றதே இதற்குக் காரணம். இன்றைய சுதந்திர இந்தியாவிலும், மக்கள் பல்வேறு குருட்டுத்தனங்களை (கண்மூடித்தனமான மூடப் பழக்கவழக்கங்கள்) நம்பி குருடர்களாக உள்ளனர். ஆனால் ஆண்டவர் இந்நிலையிலிருந்து மக்களுக்கு விடுதலை தருகிறார். நாமும் கூட, கடவுளின் இருப்பு நிலையையும், அவருடைய விடுவிக்கும் ஆற்றலையும் உணர்ந்தவர்களாக கடவுள் தரும் உண்மையான ஆன்மீக விடுதலையை பெற்றுக்கொள்ள நம்மை அர்ப்பணிப்பதற்கு அழைக்கப்படுகிறோம்.

2. சமூக விடுதலை: SOCIAL FREEDOM

இந்த வசனத்தின் (வசனம்-8) அடுத்த பகுதி, ‘ஆண்டவர் தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்’ எனச் சொல்லுகிறது. அன்றைய யூத சமூகத்தில் பல்வேறு தரப்பிலான மக்கள் பல்வேறு நிலைகளில் பாதிப்புக்குள்ளாகி ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டனர். பலர், சமூக பொருளாதார காரணங்களால் தாழ்வானவர்களாக கருதப்பட்டனர். இன்றைய 79 ஆண்டு கால சுதந்திர இந்தியா விலும், பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு தரப்பிலான மக்கள், நெருக்குதல்களுக்கு உள்ளாகி, தாழ்வு நிலைகளில் வாழவேண்டிய நிலை உள்ளது. நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, அத்தகைய மக்களை விடுவித்து உயர்த்த வல்லவராக இருக்கிறார். ஆங்கிலத் திருமறையில் ‘LIFT’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது; அதனை, ‘தூக்கிவிடுதல்’ எனவும் புரிந்துக்கொள்ளலாம். இன்று நம்முடைய வாழ்வை நாம் முழுமையாக கடவுளின் கரங்களில் அர்ப்பணிக்கும்போது, அவர் நம்மையும் சமூகத்தின் தாழ்வான நிலைகளிலிருந்து தூக்கி எடுக்க அல்லது உயர்த்த வல்லவராய் இருக்கிறார். இதைத் தெளிவுபடுத்தும் விதமாகவே, நாசரேத் பிரகடனத்தில் இயேசு,

“கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார்.” (லூக்.4:18,19)

3. அன்பின் விடுதலை: LOVABLE FREEDOM

சங்.146:8 வசனத்தின் கடைசி பகுதி, ‘ஆண்டவர் நீதிமான்களில் அன்பு கொண்டுள்ளார்’ எனச் சொல்லுகிறது. இதில் இரண்டு கூறுபாடுகள் உள்ளன, ஒன்று ‘நீதிமான்கள்’ மற்றது ‘கடவுளின் அன்பு’. பல்வேது சமூக அநீதிகள் நிறைந்த இவ்வுலகில், நீதிமானாய் வாழ்வது என்பது எளிதான ஒரு காரியம் அல்ல. கடவுளின் பார்வையில் நீதிமான் என்பவர், கடவுளின் விருப்பம் அதாவது கடவுளின் சித்தத்தை நிறைவேற்றுபவர் ஆவார். அப்படிபட்ட மக்கள் மீதே, ஆண்டவர் அன்பு கூருகிறவராக இருக்கிறார். கடவுளின் அன்பு என்பது, கடவுளின் கரிசனையையும், உறவையும் அவற்றின் வழியாய் கிடைக்கும் அனைத்து ஆசீர்வாதங்களையும் உள்ளடக்கியதாக உள்ளது. தீமைகள் நிறைந்த இந்த உலகில் கடவுளின் அன்பானது நீதிமான்களுக்கு அரணாக இருந்து விடுதலையை வழங்குகிறது. நாமும் நீதியுள்ள வாழ்வு வாழும்போது கடவுள் நம்மீதான தம் கோபத்தை விலக்கி நம்மில் அன்பு செலுத்துவார் நாமும் விடுவிக்கப்படுவோம் என்பதைத் திருமறை பின்வருமாறு சொல்லுகிறது.

“இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே” (ரோம.5:9).

மட்டுமல்ல, கடவுள் மக்கள் மீது அன்புகொண்டிருப்பதாலேயே அவர்களை விடுவிக்கிறார்; என்பதை கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு அளித்த விடுதலை வழியாய் திருமறை பின்வருமாறு விவரிக்கிறது:

“கர்த்தர் உங்களில் அன்புகூர்ந்ததினாலும், உங்கள் பிதாக்களுக்கு இட்ட ஆணையைக் காக்கவேண்டும் என்பதினாலும்; அவர் அடிமைத்தன வீடாகிய எகிப்தினின்றும் அதின் ராஜாவான பார்வோனின் கையினின்றும் உங்களை மீட்டுக்கொண்டார்.” (உபா.7:8)

அன்பானவர்களே! நாட்டின் 79-ஆம் ஆண்டு விடுதலைத் திருநாளைக் கொண்டாடுகிற இந்த நேரத்தில், கடவுளின் பார்வையில் நீதிமான்களாக வாழ்ந்து, அவர் தரும் ஆன்மீக விடுதலை, சமூக விடுதலை மற்றும் அன்பின் விடுதலையை பெற்றுக்கொண்டவர்களாக வாழ நம்மை அர்ப்பணிப்போம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்



அருட்திரு. செ. சாமுவேல் ஜெபக்குமார், ஆயர் மற்றும் குருசேகரத் தலைவர்,
தெ.இ.தி. போரூர் குருசேகரம் (சென்னை பேராயம்), போரூர், சென்னை, தென்னிந்தியா.