August 2025
தேவசெய்தி...

மெய்யான விடுதலை

THE TRUE FREEDOM
Rev. D. Simon Samuel

இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரில் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர், சர். வின்ஸ்டன் சர்ச்சில் இந்திய விடுதலை குறித்து அனுமானமாகக் கூறியது: “இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டால், ஆட்சி, அயோக்கியர்கள் மற்றும் சுயநலமான கொள்ளையர்களின் கைகளுக்குச் செல்லும்; இந்தியத் தலைவர்கள் அனைவரும் குறைந்த திறன் கொண்டவர்களாகவும், வேடிக்கை மனிதர்களாகவும் இருப்பார்கள். இனிமையான நாவுகளும், கள்ள நெஞ்சமும் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்களுக்குள் அதிகாரத்திற்காக சண்டையிட்டுக் கொள்வார்கள், அரசியல் சச்சரவுகளில் இந்தியா தொலைந்து போகும். இந்தியாவில் காற்றுக்கும் தண்ணீருக்கும் கூட வரி விதிக்கப்படும் நாள் வரும்.”

நம் நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகளை கடந்து வைர விழாவை கொண்டாடும் தருணத்தில் சர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்கள் இந்தியாவின் விடுதலை குறித்து அனுமானித்து கூறிய அனைத்தையும் நம்மால் கண்கூடாக பார்க்கமுடிகிறது. இதன் ஒற்றை காரணம், நாம் மெய்யான விடுதலையை அடையாததேயாகும். ‘வெள்ளையனே வெளியேறு’ என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் எல்லாருமே கொள்ளையர்கள் என்பது தாமதமாகவே நமக்கு புரிகிறது. அடுத்தவர் ஆட்சியை குறைசொல்லி, “அக்குறைகளைத் தீர்ப்போம்” என்று வாக்கு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர்களிடம் குறைதீர்க்கப் போனால், ஏன்? கடந்த ஆட்சியில் இந்த குறை இல்லையா? என்று மக்களையே குறைசொல்லுகிறார்கள். நம்மைப்போலவே, வஞ்சிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்த யோவான்-சமுக மக்களுக்கு இயேசுவின் வெளிப்பாடு, வாழ்வு மற்றும் திருப்பணி மெய்யான விடுதலையை அளித்தது. அதில் குறிப்பிடத்தக்க மூன்று பகுதிகளை யோவான் நற்செய்தி வழியாக தியானித்து, அவை எவ்வாறு நம் வாழ்வுக்குப் பொருந்தி, மெய்யான விடுதலையை தருகின்றன என்பதை அறிந்துகொள்வோம்.

வழிபாட்டில் மெய்யான விடுதலை - அறியாமை களைதல்

யோவான் சமூகம் எதிர்கொண்டதும், நம் இந்திய சமூகம் எதிர்கொள்ளுகிறதுமான முதலாம் பிரச்சனை ‘வழிபாட்டில்’ துவங்குகிறது. யோவான் சமூகத்தினர், ‘மேசியா’ யார், ‘குமாரன்’ யார், என்று தெரியாமல்; யாரை வழிபடவேண்டும், எங்கு வழிபடவேண்டும் எனத் தெரியாமல், அறியாததை வழிபட்டு அறியாமையில் வாழ்ந்தனர். படைத்தவரை விடுத்து படைப்புகளை வழிபட்டனர். பொதுமக்கள், பரிசேயன் நிக்கொதேமு, சமாரியப் பெண், சதுசேயர்கள், இயேசுவின் சீடர்கள் என, அனைத்து தரப்பின் வழிபாட்டிலும் அறியாமை-இருள் காணப்பட்டது. இந்த அறியாமை இருளை களையவே இயேசு கிறிஸ்து, “நான் உலகத்திற்கு ஒளியாயிருகிறேன்” (யோவா.9:5) என்று உறுதியாக அறிவித்தார். இதைத்தான், “உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி” (யோவா.1:9) என்று யோவான் நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார்.

நம் இந்திய சமுகத்தில், இவை இருவேறு பிரச்சனைகளாக இருக்கின்றன. ஒன்று, நற்செய்தி அறிவிப்பதில் உள்ள மந்த நிலையால், மெய்யான கடவுளை அறியாது பொய்யானதை வழிபடுதல். இரண்டு, வலுதுசாரி கொடுங்கோல் ஆட்சியால், மெய்யான கடவுளை அறிந்து கொண்டாலும், அவரை விடுதலையோடு வழிபட முடியாத நெருக்கடியான சூழலில் அகப்பட்டிருப்பது. ‘நிர்பந்தமான மனுஷன் நான்’ (ரோம.7:24) என்று கூறும் பவுலடிகளார், அந்த நிர்பந்த நிலையிலிருந்து மெய்யான விடுதலை அடையும் வழியை போதிக்கிறார். அதாவது முன்பு கற்களில் எழுதப்பட்ட ஒழிந்துபோகக்ககூடிய வார்த்தைகள், இப்பொழுது ஆவியானவரால் இருதயத்தில் எழுதப்பட்டுள்ளது; எனவே, ஆவியானவரே நம்முடைய வழிப்பாட்டில் மெய்யான விடுதலை தருகிறார் என்பதை, “கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு” (2கொரி.3:7, 17) என்று உறுதியாக போதிக்கிறார்.

வழக்கில் மெய்யான விடுதலை - ஆற்றாமை நீக்கல்
யோவான் சமூகம் எதிர்கொண்டதும், நம் இந்திய சமூகம் எதிர்கொள்ளுவதுமான இரண்டாம் முக்கிய பிரச்சனை ‘வழக்குகள்|’ தேவ ஆட்டுக்குட்டியை அறிவித்த யோவான் ஸ்நானகன்மேல் வழக்கு, இயேசுவை குற்றப்படுத்த, பெண் மீது போடப்பட்ட பாரபட்ச ‘விபச்சார’ வழக்கு, இயேசுவை ‘கிறிஸ்து’ என்று அறிக்கை யிட்டால், ஜெபஆலயத்திற்கு புறம்பாக்கும் நூதன வழக்கு; ஓய்வுநாளில் ஊழியம் செய்து, கடவுளை தன் தந்தை என்று அழைத்ததற்கு இயேசுவின்மீது வழக்கு. இவை எல்லாவற்றிலும் இயேசு கிறிஸ்து ‘சத்தியமே’ உருவானதால் எல்லா வழக்கு களிலுமிருந்து தனது வாதத்திறமையால் மெய்யான விடுதலை பெற்றார். ஒரு சிலருக்கு இயேசுவானவர் வாதிட்டு விடுதலை பெற்றுத்தந்தார். எனினும், யூத மத மற்றும் சமுக சட்டங்களைக்கொண்டு போடப்பட்ட வழக்குகள் காரணமாக அநேகரால் மெய்யான விடுதலை பெறமுடியவில்லை.

இந்திய சமுகத்தில் நம்முடைய பல்பரிமாண ஆற்றாமையால், வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. ஒன்று, சாதிய அடிப்படையில், பட்டியல் சமூகம் என்பதால், செய்யாத தவறுக்கு பாயும் வழக்கு. இரண்டு, பொருளாதார அடிப்படையில், பிணை பெற வாய்ப்பிருந்தும், பண வசதி இல்லாததால், வழக்குரைஞர்கள் வாதாட முன்வராததால், பாயும் வழக்கு. மூன்று, சாதியும், பணமும் சாதகமாய் இருந்தும் சட்டம் (சத்தியம்) அறியாத சதியால் பாயும் வழக்கு. நீதியின் ஆட்சியை நிலைநாட்ட உருவாக்கப்பட்ட சட்டங்கள் (சத்தியம்), இன்று, சட்டத்திலுள்ள ஓட்டைகள் (இணை சத்தியம்) சாமானியரை ஒடுக்கும் வகையில் சாதியவாதிகளுக்கும், பணக்காரர்களுக்கும் புகலிடமாகி விட்டது. ஒருவேளை, நீதி கிடைத்தாலும், அது பொய்யான மற்றும் பொருள்சார்ந்த நீதியாகவே இருக்கிறது. இந்தசூழலில், சத்தியத்தை (சட்டத்தை) அறிந்து நாம் வாதிடும்போது, இயேசு வானவரை விடுவித்த அதே சத்தியம், நம் ஆற்றாமையில் நம்மையும் மெய்யாய் விடுவிக்கும்.

வழிகாட்டலில் மெய்யான விடுதலை - அமைதி அளித்தால்
யோவான் சமூகம் எதிர்கொண்டதும், நம் இந்திய சமூகம் எதிர்கொள்ளுவதுமன மூன்றாம் பிரச்சனை, ‘வழிகாட்டல்’. யோவான் ஸ்நானன் வழியை ஆயத்தம் செய்தாலும்; வரும் கோபத்துக்குத் தப்பித்துக்கொண்ட விரியன் பாம்பு குட்டிகளான, பரிசேயர், சதுசேயர், வேதபாரகர் ஆகியோர், அவ்வழிகளை அடைத்துவிட்டனர். குருடருக்கு வழிகாட்டவேண்டியவர்கள் பார்வை யுள்ளோருக்கே தடைகளாயினர். சிறுபிள்ளைகளுக்கு இடங்கொடுக்க வேண்டியவர்கள், எந்திரக் கல்லை கழுத்தில் கட்டிக் கொண்டு கடலில் குதிக்கத் துணிந்தனர். இயேசுவின் சீடர்களும் வழி அறியாமல் கலக்கமுற்று, ‘வழியை அறியோமே’ என்றபோது, “நானே வழி; என் வழியாய் பயணிப்பவர்கள் நிறைவாழ்வை அடைவர்” (யோவா.4:5,6) என்றார்.

நம் இந்திய சமுகத்தில் இந்த வழிகாட்டல் இரண்டு வகையில் செயல்படுகிறது. ஒன்று, தவறான மற்றும் தெரியாத வழியை காட்டும் ஒரு கூட்டம்; இரண்டு, சுய-லாபம் கருதி வழிகாட்டும் ஒரு கூட்டம். நமது வாழ்வின் பயணத்தில் வழிகாட்டல் இன்றி;, பாதையில் இருமனமுள்ளவர்களாய் இருப்போமானால் நிலையற்று அலைகிறவர்களாய் இருப்போம். இப்படிப்பட்ட அமைதியற்ற சூழலில், “நானே வழி, நானே வாசல்” என்று சொல்லி, நிறைவாழ்வை அருளும் இயேசுவை நோக்கிப் பார்ப்போம்.

அன்பானவர்களே! நாடு விடுதலை அடைந்துவிட்டது! சர்.வின்ஸ்டன் சர்ச்சில் சொன்னதும் நிறைவேறிவிட்டது. ‘வழிபாடு’ அதிகாரத்திற்கும், ‘வழக்கு’ ஆதிக்கத்திற்கும், ‘வழிகாட்டல்’ அநீததிற்கும் உட்பட்டவைகளாய் மாறிவிட்டன. காற்றுக்கு மட்டும் இன்னும் வரி விதிக்கப்பட வில்லை. மெய்யான விடுதலையை நாடுவோம்! மெய்யான விடுதலையைப் பெறுவோம். அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.




அருட்திரு. D. சைமன் சாமுவேல்,
ஆயர் மற்றும் குருசேகரத் தலைவர், தெ.இ.தி. இரா. கி. பேட்டை குருசேகரம்,
சென்னைப் பேராயம் திருவள்ளுர் மாவட்டம். தென்னிந்தியா.