July 2026
சிறப்பு தேவசெய்தி…...

இரட்சிப்பின் மகிழ்ச்சி

பூமியின் எல்லைகளெல்லாம் இரட்சிப்பைக் கண்டது. பூமியின் குடிகளே, எல்லாரும் ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்; கர்த்தரை நோக்கி முழக்கமிட்டு கெம்பீரமாய் பாடுங்கள். சங்.98:3பி 4
THE JOY OF SALVATION
Rev.S.J.D. Dharmaraja

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே!
ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய திருப்பெயரில் உங்களை அன்புடன் வாழ்த்துகிறேன். மீண்டுமாக கடவுளின் வார்த்தையை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். சங்கீதம் 98, ஒரு வெற்றிப் பாடலாகவும் தேவனுடைய வெற்றியைக் கொண்டாட சர்வ சிருஷ்டிக்கும் விடப்படும் ஓர் அழைப்பாகவும் விளங்குகிறது. கடவுளின் மாறாத அன்பும் நீதியான நியாயத்தீர்ப்புகளும் உற்சாகமான துதிக்கு அடிப்படை என்பதை அது மீட்கப்பட்டவர் களுக்கு நினைவூட்டுகிறது. எனவே, இரட்சிப்பின் மகிழ்ச்சி என்ற செம்பொருளை இந்த சங்கீதத்தில் அடங்கியுள்ள வேத-வசனங்களின் துணைகொண்டு சற்று நேரம் தியானிப்போம்.

1. கடவுளின் அற்புத செயல்களும் இரட்சிப்பும்: (வச.1 - 3)

சங்கீதக்காரர் ஒரு தெளிவான கட்டளையுடன் தொடங்குகிறார்: “கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலதுகரமும், அவருடைய பரிசுத்த புயமும், இரட்சிப்பை உண்டாக்கினது.”

கடவுளுடைய கிருபையின் ஒவ்வொரு புதிய வெளிப்பாடும், அது சரீரப்பிரகாரமான விடுதலை யாகவோ ஆவிக்குறிய எழுப்புதலாகவோ அல்லது அனுதின கிருபையாகவோ எதுவாக இருந்தாலும், அது நன்றியுணர்வுள்ள ஒரு புதிய பாடலாக வெளிப்படுவதற்குத் தகுதியானது. தேவனுடைய ‘பரிசுத்த புயம்’ இந்த வெற்றியைக் கொண்டுவந்தது என சங்கீதக்காரர் கோடிட்டுக் காட்டுகிறார். மீட்கப்பட்டவர்கள் பாடுகிறார்கள், ஏனென்றால் அவர்களால் தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்ள முடியாத நிலை இருப்பதை அவர்கள் அறிவார்கள். தேவன் போர்க்களத்தில் தலையிட்டு, வெற்றியை உறுதி செய்தார்.

தேவன் அருளிய இந்த வெற்றி, ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமல்ல. ‘பூமியின் எல்லைகள் எங்கும்’ இந்த வல்லமை நிறைந்த வெற்றிக்குச் சாட்சிகள் உண்டு என குறிப்பிடுகிறார்.

இங்கு வெற்றி அல்லது விடுதலை என்பதை குறிப்பிடுவதற்கு சங்கீதக்காரர் ‘இரட்சிப்பு’ என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். ஒரு முறை மாத்திரமல்லாமல், மூன்று முறை ‘இரட்சிப்பு’ (SALVATION) என்ற பதத்தை உபயோகிப்பது, உலகப்பிரகாரமான மற்றும் சரீரப்பிரகாரமான விடுதலையோடு கடவுள் தரும் ஆவிக்குறிய விடுதலையையும் குறிப்பதாக உள்ளது.

2. ஓர் மகிழ்ச்சியான சமுதாயத்தின் ஆரவாரம்: (வச.4-6)

“பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைநோக்கி ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டுக் கெம்பீரமாய்ப் பாடுங்கள். சுரமண்டலத்தால் கர்த்தரைக் கீர்த்தனம் பண்ணி, கீதசத்தத்தால் அவரை மகிமைப்படுத்துங்கள்.”

இங்கு சங்கீதக்காரர் சொல்லும் துதியானது, அமைதியாகவோ அல்லது தாழ்ந்த சத்தத்துடனோ அல்லது தயக்கத்துடனோ அல்லாமல், அது ஆராவாரம் நிறைந்ததும், உரத்த சத்தமுள்ளதும், செயலூக்கமுள்ளதும், எல்லா மக்களையும் உள்ளடக்கியதாகவும் அமைந்திருக்கிறது.

இங்கு, ‘கீர்த்தனம்பண்ணுங்கள்’ ‘ஆர்ப்பரியுங்கள்’ என்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள எபிரேய வார்த்தையானது, வெற்றி பெற்ற அரசனுக்காக ஒரு விளையாட்டு அரங்கம் ஆரவாரம் செய்வதைப் போன்ற, வெற்றிக் கொண்டாட்ட முழக்கத்தைக் குறிப்பதாக இருக்கிறது. யாழ், கொம்பு, எக்காளம் போன்ற இசைக்கருவிகள் எழுப்பும் இன்னிசையும், பாடகர்குழுவிரின் பாடலில் தொனிக்கும் பன்முக குரல்களும் அரசராகிய ஆண்டவருக்கு அவர்கள் எழுப்பும் ஆரவாரங் களுடன் கலந்து வருமாறு சபை மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது

துதி அல்லது ஆராதனை என்பது தனி நபர்களின் செயல்பாடு அல்ல, அது அனைத்து தரப்பு மக்களும் ஒருமித்த குரலில் பாடும் ஒரு ஏகோபித்த அனுபவம் அல்லது திருச்சபையின் கூட்டு ஆராதனை, என்பது சங்கீதக்காரருடைய வார்த்தைகளின் வெளிப்பாடு ஆகும்.

3. கடவுள் தரும் வெற்றி, படைப்புகள் அனைத்தின் மகிழ்ச்சி: (வச.7-8)

“சமுத்திரமும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதின் குடிகளும் முழங்குவதாக. கர்த்தருக்கு முன்பாக ஆறுகள் கைகொட்டி, பர்வதங்கள் ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடக்கடவது.”

படைப்பனைத்தும், இயற்கை முழுமையும் தங்கள் எல்லையைத் தாண்டி தேவாலய பாடகர் குழுவில் சேருவதாக சங்கீதக்காரர் இங்கு குறிப்பிடுகிறார். ஆர்ப்பரிக்கும் கடல், கைதட்டும் ஆறுகள், பாடும் மலைகள், நடனமாடும் குன்றுகள், ஆரவாரம் செய்யும் பூமியின் குடிகள், புகழ்ந்துபோற்றும் தேவாலய பாடகர் குழு, இன்னிசை எழுப்பும் கீத-வாத்தியங்கள் என, அண்ட சராசரத்திலுள்ள அனைத்து படைப்புகளும் படைப்பாளரின் பிரசன்னத்தில் மகிழ்ந்திருப்பதாகச் இங்கு சித்தரிக்கப்பட்டுள்ளது.

கடவுளின் வாக்களிக்கப்பட்ட புதுப்பித்தலிலும் சமத்துவமான ஆட்சியிலும் தனது இறுதி நம்பிக்கையை வைத்து, நீதிக்காக ஏங்கித்தவித்த இந்த படைப்புகள், இன்று தேவன் அருளிய இரட்சிப்பில் மகிழ்ந்து களிகூறுவது இங்கு ஒரு வியத்தகு நிகழ்ச்சியாகும்.

4. தேவனுடைய நீதியான நியாயத்தீர்ப்பு: (வச.9)

“அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; பூலோகத்தை நீதியோடும் ஜனங்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார்.”

இந்த சங்கீதத்தின் உச்சக்கட்டம், தேவன் உலகத்தை நியாயந்தீர்க்க வருவதை மையமாகக் கொண்டுள்ளது. நியாயத்தீர்ப்பு என்பது ஒரு பயங்கரமான நிகழ்வாக இருக்கக்கூடும் என்றாலும், மீட்கப்பட்டவர்களுக்கு அது ஆழ்ந்த மகிழ்ச்சிக்கான ஒரு காரணமாகும். தேவன் உலகத்தை நீதியுடனும் நியாயத்துடனும், மக்களை நேர்மையுடனும் சமத்துவத்துடனும் நியாயந்தீர்ப்பார். அவர் ஒவ்வொரு தீமையையும், அநீதியையும் களைந்து, ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கி, தமது பரிபூரணம் நிறைந்த அரசை நிலைநாட்டுவார்.

இரட்சிப்பின் மகிழ்ச்சியை ஏற்றுக்கொள்ளுதல்: நீக்க முடியாத நித்திய மகிழ்ச்சியை ஏற்றுக் கொண்டு கொண்டாடுவது விசுவாசிகள் வாழ்வில் இன்றியமையாததாகும். மீட்கப்பட்டவர்கள், தங்கள் பரிபூரணத்தில் மாத்திரம் பாடுவதில்லை; தேவன் பரிபூரணமாக இருப்பதால் அவர்கள் பாடுகிறார்கள்.

இரட்சிப்பின் அனுபவம் தரும் மகிழ்ச்சியை ஏற்றுக்கொண்டு, நீதி நிறைந்த வாழ்வு வாழ பயிற்சி எடுப்போம். “நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீரசத்தம் உண்டு” என்ற வேத வசனத்தை நம் வாழ்வில் நிறைவேற்றிக் காட்டுவோம். மகிழ்ச்சி எனும் உறுதியான அடித் தளத்தைக் கட்டுவதற்கு, வேத வசனங்களை தியானிப்பதை ஒரு பழக்கமாக ஆக்கிக்கொள்வோம்;.

இந்த கிருபையின் காலத்தில், நம் துதிகளை ஆண்டவருக்குச் செலுத்துவோம். நம்முடைய துதி-ஆராதனை தேவனுக்குச் செலுத்தப்படும் ஒரு அழகான, கனம் தரும் காணிக்கை என்பதை நினைவில் கொள்ளுவோம். இரட்சிப்பின் மகிழ்ச்சியைப் பெற்றுக்கொண்டவர்களாய் மாத்திர மின்றி, இரட்சிப்பின் மகிழ்சியை பிரதிபலிக்கிறவர்களாகவும் வாழ நம்மை அர்ப்பணிப்போம். கர்த்தர்தாமே நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.




அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா, ஆயர் மற்றும் உழிய இயக்குநர்,
நற்செய்தி வேதாகம அச்சுப்பதிவு, சாலிகிராமம், சென்னை. தமிழ்நாடு, தென்னிந்தியா