கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
மகதலேனா மரியாளின் நினைவுநாளை ஜூலை-22ம் நாள் ஆசரிக்கிறோம். இவ்வேளையில், மகதலேனா மரியாளின் வாழ்விலிருந்து சில காரியங்களை கற்றுக்கொள்வது நமக்கு பிரயோஜன மாய் இருக்கும் என நம்புகிறேன்.
வேதாகமத்தில் ‘மரியாள்’ என்ற பெயருடைய அநேகர் உள்ளனர். மகதலேனா மரியாளுக்கு அவருடைய பிறப்பிடமான ‘மகதலா’விலிருந்து தான் இந்தப் பெயர் வந்தது. இயேசு மரியாளிடமிருந்து 7-பிசாசுகளை துரத்தியதை லூக். 8:2ல் வாசிக்கிறோம். அதன் பின்னரே மகதலா மரியாள் இயேசுவின் சீடரானார்.
இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது அருகில் நிற்றுகொண்டிருந்த பெண்களில் இவரும் ஒருவர் என யோவான் நற்செய்தி நூல் நமக்குச் சொல்கிறது: “இயேசுவின் சிலுவையின் அருகே அவருடைய தாயாரும், அவருடைய தாயின் சகோதரியும், கிலேயோப்பாவின் மனைவி மரியாளும், மகதலேனா மரியாளும் நின்று கொண்டிருந்தார்கள்” (யோவா. 19:25).
உயிர்த்தெழுதலுக்கு முதல் சாட்சியாக மகதலேனா மரியாள் இருந்தார். “மரியாள் கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள். அவள் அழுதுகொண்டே, கல்லறைக்குள் குனிந்து பார்த்தாள். இயேசுவின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் வெண் வஸ்திரம் தரித்த இரண்டு தேவதூதர்கள் அமர்ந்திருப்பதைக் கண்டாள், ஒருவர் தலைப் பக்கத்திலும், மற்றொருவர் கால் பக்கத்திலும் அமர்ந்திருந்தார்கள்.” “பெண்ணே, ஏன் அழுகிறாய்?” என்று அவர்கள் அவரிடம் கேட்டார்கள். “என் ஆண்டவரை யாரோ எடுத்துச் சென்றுவிட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை.” என்று மரியாள் பதிலளித்தார். அப்போது, அவர் திரும்பிப் பார்த்து, இயேசு அங்கே நிற்பதைக் கண்டார், ஆனால் அவர் இயேசு என்பதை அவர் அறியவில்லை. இயேசு, “பெண்ணே, ஏன் அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?” என்று அவரிடம் கேட்டார். அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து, “ஐயா, நீர் அவரை எடுத்துச் சென்றிருந்தால், அவரை எங்கே வைத்தீர்கள் என்று சொல்லுங்கள், நான் அவர் உடலை எடுத்துக்கொள்வேன்” என்றார் மரியாள்.
இயேசு அவரை நோக்கி, “மரியாளே! என்றார். மரியாள் அவரை நோக்கித் திரும்பி, அரமேய மொழியில், “ரப்பூனி! என்றார்.” (யோவா. 20:11-16). இயேசுவின் மீது மரியாளுக்கு இருந்த பக்தி, சுவிசேஷங்களில் உள்ள பல கதைகளில் அவரை முன்னிலைப்படுத்தியது. மகதலேனா மரியாளின் வாழ்க்கையும் அவருடைய விசுவாசமும் இயேசுவை பின்பற்றுவது பற்றிய பல பாடங்களை நமக்குக் கற்பிக்கின்றன. மகதலேனா மரியாளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக் கூடிய மூன்று பாடங்கள் இங்கே தியானிப்போம்
1. நமது கடந்த காலம் நம்மை வரையறுக்க அனுமதிக்க வேண்டாம்:
மரியாளின் பின்னணி குறித்து நிறைய ஊகங்கள் உள்ளன. லூக்.7:36-50ல் உள்ள பாவமுள்ள பெண்ணுடன் மரியாளை மக்கள்
இணைத்துப் பேசுகிறார்கள். பலர் அவள் ஒரு விபச்சாரி அல்லது கெட்ட பெயர் பெற்ற பெண் எனக் கருதுகிறார்கள். ஆனால்,
அவரை அப்படி சித்தரிப்பதற்கு உண்மையில் எந்த அடிப்படை ஆதாரமும் வேதாகமத்தில் இல்லை.
லூக்கா நமக்குச் சொல்வது போல், மரியாளிடமிருந்து ஏழு பேய்கள் துரத்தப்பட்டன. அவருடைய பின்னணி என்னவாக இருந்தாலும்,
அவர் தன் இரட்சகரைச் சந்திப்பதற்கு முன்பு துன்பப்பட்டார். ஆனால், இயேசுவை சந்திக்கும் முன்னர் அவர் யாராக
இருந்தார் என்பதன் மூலம் மரியாள் வரையறுக்கப்படாமல், இயேசுவை சந்தித்தபின் அவர் எப்படிபட்டவராக இருந்தார் என்பதே
முக்கியத்துவம் பெறுகிறது.
மரியாளைப் போலவே, நம் கடந்த காலம் நம்மை எப்படிப் பார்த்தது என்பதைக் குறித்து நாம் கவலைகொள்ள வேண்டியதில்லை. பவுல் இதை இவ்வாறு விளக்குகிறார்: “ஒருவன் கிறிஸ்து வுக்குள் இருந்தால், புது சிருஷ்டியாய் இருக்கிறான். பழையவை ஒழிந்துபோயின. எல்லாம் புதிதாயின.” (2கொரி. 5:17)
2. இயேசு, நம் வாழ்வின் மையமாக இருக்க அனுமதிப்போம்:
மரியாளும் இயேசுவும் முதன்முதலில் சந்தித்த
பிறகு, மரியாள், இயேசு என்னும் சூரியனை சுற்றிவரும் ஒரு விண்-கோளாக மாறிவிட்டார். மகதலேனா மரியாள், இயேசுவையும்
சீடர்களையும் பின்தொடர்ந்தது ஊர் ஊராகச் சென்றது மட்டும் அல்லாமல், கிறிஸ்துவுக்கும் அவரது சீடர்களுக்கும் நிதி
உதவிசெய்து ஆதரித்திருக்கிறார். இந்த நிதி உதவி, இயேசுவின் ஊழியம் முழுதும் தொடர்ந்தது. லூக்கா சொல்கிறார்: “இயேசு
கிராமம்-கிராமமாகச் சென்று, தேவனுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்தார். 12-சீடரும் அவரோடு இருந்தார்கள்.
7-பிசாசுகளிடமிருந்து விடுதலைபெற்ற மகதலேனா மரியாள், ஏரோதின் வீட்டு மேலாளரான கூசாவின் மனைவி யோவன்னா, சூசன்னா
ஆகிய பெண்கள் தங்கள் சொந்த நிதியிலிருந்து இயேசுவின் ஊழியங்களுக்கு உதவினார்கள்” (லூக். 8:1-3).
மாத்திரமல்ல, இயேசுவின் ஊழியத்துக்கு உதவிசெய்ய, கலிலேயா வரை அவர்கள் அவரைப் பின்சென்றார்கள் என்றும், இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது இப்பெண்கள் உடன் இருந்தார்கள் என்றும் மத்தேயு சொல்கிறார்: “அங்கே பல பெண்கள் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின்தொடர்ந்து சென்று அவருடைய ஊழியத்தேவைகளைப் பூர்த்தி செய்தார்கள். அவர்களில் மகதலேனா மரியாள், யாக்கோபு மற்றும் யோசேப்பின் தாயாகிய மரியாள், செபதேயுவின் மகன்களின் தாய் ஆகியோர் அடங்குவர்” (மத். 27:55-56).
இயேசுவின் ஊழியம் மற்றும் உயிர்த்தெழுதலின் மையத்தில் மகதலேனா மரியாள் இருக்கிறார். நாம் இந்த முன்மாதிரியைப் பின்பற்ற அழைக்கப்படுகிறோம். இயேசுவை நாம் சந்திக்கும்போது, நாம் விட்டுவந்த பழைய வாழ்க்கைக்குத் திரும்பக்கூடாது. மரியாளைப் போலவே, நமது வாழ்வும் இயேசுவிடமிருந்து பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்ததாக, நமது முழு வாழ்க்கையும் அவரைப் பின்பற்றி சேவை செய்வதாக மாற நம்மை அர்ப்பணிக்கவேண்டும்.
3. பலவீனரான நாம் பலசாலிகளை மேற்கொள்ள தைரியம் பெறுவோம்:
பெண்கள், சுதந்திரம் இல்லாமல் 2ம் நிலை
குடிமக்களாகக் காணப்பட்ட காலத்தில், இயேசு பெண்கள் மீது மென்மையையும் அக்கறையையும் காட்டி, பெலவீனரான அவர்களைத்
தெரிந்துகொண்டார். 1கொரிந்தியர் நிரூபத்தில் காணப்படும் பவுலின் கூற்றுப்படி: “ஞானிகளை வெட்கப்படுத்த கடவுள்
உலகத்தின் முட்டாள்தனமான காரியங்களைத் தேர்ந்தெடுத்தார்; பலசாலி களை வெட்கப்படுத்த கடவுள் உலகத்தின் பலவீனமான
காரியங்களைத் தேர்ந்தெடுத்தார். உள்ள வற்றை அழிக்கும்படிக்கு கடவுள் உலகத்தின் தாழ்ந்த காரியங்களையும் இழிவான
மற்றும் இல்லாத காரியங்களையும் தேர்ந்தெடுத்தார், இதனால் யாரும் அவருக்கு முன்பாக பெருமை பேசக்கூடாது”
(1கொரி.1:27-29). உயிர்த்தெழுதலுக்குப்பின் தன்னை வெளிப்படுத்துவதற்கு முதலாவ தாக இயேசு, மகதலேனா மரியாளைத்
தேர்ந்தெடுத்ததில் இதைக் காண்கிறோம்.
பிரியமானவர்களே! வரலாற்றில் இது மிக முக்கிய நிகழ்வு. அன்று இயேசு ‘மரியாள்’ என்ற ஒரு பெண்ணை முதல்-சாட்சியாகவும், சீடர்களுக்கு நற்செய்தி சொல்லும் ‘அப்போஸ்தலரின் அப்போஸ்தலர்’ஆகவும் ஆக்கினார் (யோவா.20:17). மகதலேனா மரியாளின் வாழ்விலிருந்து பாடம் கற்றுக்கொள்வோம். அன்று, மகதலேனா மரியாள் மூலம் செய்த அதே பணியை, இன்று, நம் மூலமாக கடவுள் செய்ய நம்மை நாமே கடவுளுக்கு அர்ப்பணிப்போம். கர்த்தர் உங்களை ஆசீர்வாதிப்பாராக. ஆமென்.
அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா
அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா,
ஆயர் மற்றும் உழிய இயக்குநர்,
நற்செய்தி வேதாகம அச்சுப்பதிவு ஊழியங்கள்,
சாலிகிராமம், சென்னை. தென்னிந்தியா.