June 2026
புதிய கல்வியாண்டு: சிறப்பு தேவசெய்தி…...

ஞானத்தின் எதிரிகள்

உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர். சங். 73:24
NEW ACADEMIC YEAR: THE ENEMIES OF WISDOM
Rev.S.J.D. Dharmaraja

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! ஆண்டவரும் அருமை இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து வின் இனிய திருப்பெயரில் உங்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டும் ஜுன் மாதம் வந்துவிட்டது, புதிய கல்வியாண்டு ஆரம்பமாகியது, பள்ளிகள்-கல்லூரிகள் திறக்கப்பட்டுவிட்டன, மாணவர்கள்-ஆசிரியர்கள் மீண்டும் வகுப்பறையில் தங்கள் பணிகளை தொடங்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில் ‘கற்பித்தல்-கற்றல் ஆகிய செயல்முறைகளில் கடவுள் தரும் ஞானத்தை மையப்படுத்துவது அவசியம்’ என்கிற சிந்தனையை மனதில் கொண்டவர்களாய் சங்கீதம் 73ன் துணையுடன் ‘ஞானத்தின் எதிரிகள்’ என்ற கருப்பொருளில், பொறாமை, அசுத்தம், துர்-ஆலோசனை ஆகிய களைகளை அகற்றி ஞானம் என்னும் பயிரை எவ்வாறு அறுவடை செய்வது என்பரை வேதவசனங்களின் துணையுடன் தியானிக்க அழைக்கப்படுகிறோம்.

உலகத்தின் மீதிருக்கும் நம் கவனத்தை, கடவுளின் பிரசன்னத்தின் பக்கம் திருப்புவதில்தான் உண்மையான ஞானம் அடங்கியுள்ளது என சங்கீதம் 73 நமக்குக் கற்பிக்கிறது. பிறர் மீதுள்ள பொறாமை காரணமாக சங்கீதக்காரரான ஆசாப்பின் விசுவாசம் இடறியபோது, அவர் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசித்தார்; இவ்விதமாய், ‘தேவனுடைய அருகாமையே ஞானம் என்னும் வெகுமதி’ என்பதை உணர்ந்து, தன் நிலையை உறுதிப்படுத்திக்கொண்டார்.

1. ‘பொறாமை’ என்னும் ஞானத்தின் எதிரி: (வசனங்கள் 1-14)

சங்கீதக்காரரான ஆசாப் தன்னைச் சுற்றிப் பார்த்தபோது, தீயவர்களின் சுகவாழ்வைக் காண்கிறார். அவர்கள், எந்தவித பின்விளைவுகளையும் சந்திக்காமல் ஆரோக்கியம், செல்வம், செல்வாக்கு ஆகிய உலகப்பிரகாரமான செழிப்பை அனுபவித்து வருவதைக்கண்டு அவர்கள் மீது அதிகமாக பொறாமை கொள்கிறார். மட்டுமல்ல, தான் கடவுளுக்குக் கீழ்ப்படிந்ததின் மதிப்பைக் குறித்துக் கேள்வி எழுப்பி, “நான் என் இருதயத்தைச் சுத்தமாக வைத்திருந்தது வீண்தான்” என்று புலம்பு கிறார். இங்கு பொறாமையானது களைபோல் வளர்ந்து அவரது ஞான-வளர்ச்சியை தடுக்கிறது. பொறாமை, அவருடைய ஞானத்தை சிதைத்தது. “சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ, எலும்புருக்கி” (நீதி.14:30) என்ற சாலோமோன் ஞானியின் நீதிமொழி, இங்கு எத்தனை அர்த்தம் நிறைந்ததாய் இருக்கிறது.

நம் வாழ்விலும், நாம் நமது வெற்றிகளை உலகப்பிரகாரமான செழிப்பினால் அளவிட்டு பிறர்மீது பொறாமை கொண்டு, தேவனுடைய கிருபையை இழந்து, அவர் நமக்குத் தந்த நன்மையான ஈவுகளை சந்தேகிக்கத் தொடங்குகிறோம். இன்று ‘பொறாமை’ என்பது, நாம் ஞானமடைவதற்கு தடையாய் இருக்கிறது என்பதை நம் குடும்பத்திலுள்ள ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோ ரும் உணர்ந்து பொறாமையை விட்டொழிக்க அவர்களுக்கு உதவிசெய்வோம்

2. ‘அசுத்தம்’ என்னும் ஞானத்தின் எதிரி: (வச. 15-20)

சங்கீதக்காரராகிய ஆசாப் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்திற்குள் சென்றபோது அவருடைய கண்ணோட்டம் முற்றிலும் மாறியது. கடவுளின் தூய பிரசன்னத்தில், ‘துன்மார்க்கரின் கவலையற்ற வாழ்வு’ எனும் மாயை தகர்க்கப்படுகிறது. அவர்களுடைய செழிப்பு தற்காலிகமானது என்றும், விழித்தவுடன் மறைந்துவிடும் ஒரு கனவைப் போன்றது என்றும் ஆசாப் உணர்ந்துகொள்ள முடிந்தது. அசுத்த உலகிலிருந்து பரிசுத்தமான கடவுளின் திருமுன் ஆசாப் சென்றபோது அவர் ஞானத்தைக் கண்டடைந்தார்.

இன்று நாமும் அசுத்தத்திற்கு விலகுவதன் வழியாய் பரிசுத்தத்திற்குள் நுழைந்து கடவுள் அருளும் ஞானத்தைப் பெற்றுக்கொள்ள நம் பிள்ளைகளையும் ஆசிரியர்களையம் உற்சாகப் படுத்துவோம். ‘கர்த்தருக்கு பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம’ (சங்.111:10, நீதி.1:7) என்றும், ‘கர்த்தருக்கு பயப்படுகிற பயம் சுத்தமும் நிலையானதுமாய் இருக்கிறது’ (சங்.19:9) என்றும் வேதம் சொல்லுகிறது. எனவே, ஞானத்தை வாஞ்சிப்பவர்கள் அசுத்தம் நீக்கி பரிசுத்தத்ததில் நிலைத் திருக்க அழைக்கப்படுகிறார்கள். ஞானத்தைப் பெறுவதற்கு ஒரு நித்திய கண்ணோட்டம் தேவை; அசுத்தம், பொறாமை, மற்றும் கசப்புணர்வை நீக்கி, கர்த்தருடைய பரிசுத்தத்துக்குள் நம்மை கொண்டுவந்து, தேவஞானம் நம்மை வடிவமைப்பதற்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டும்.

3. ‘துர்-ஆலோசனை’ என்னும் ஞானத்தின் எதிரி: (வச. 21-28)

ஆசாப் தன் அறிவின்மையையும் புத்தியின்மையையும் உணர்ந்து, தன் கசப்புணர்விலிருந்து மனந்திரும்புகிறார். அவர் தனது ஆன்மாவை தேவனுடைய தொடர்ச்சியான ஆலோசனையிலும், வழிகாட்டுதலிலும் தமது இறுதி மகிமையிலும் நிலைநிறுத்துகிறார்: “ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர். உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர். பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.” (வச.23,24,25).

உண்மையான ஞானம் என்பது பூலோகத்தின் துர்-ஆலோசனையில் அல்லாமல், அது தேவ ஆலோசனையில் கிடைக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளும் விதமாக சங்கீதக்காரர், “உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.” (சங். 73:24) என்று சொல்கிறார்.

இவ்வாறாக உலக மற்றும் மனித ஆலோசனைகள், தேஞானத்தை பெறுவதற்குத் தடையாக இருக்கிறதை சங்கீதக்காரர் சுட்டிக்காட்டுகிறார். ஆகவே, கடவுளின் அருகாமையே நாம் பெறக் கூடிய மிகப்பெரிய ஞானம் என்பதை உணர ஆசிரியர்களாக, மாணவர்களாக, பெற்றோராக நாம் அழைக்கப்படுகிறோம்.

அன்பானவர்களே! நாமும் நம் இருதயங்களை ஆராய்ந்து பார்ப்போம். நம் வாழ்க்கையை மற்றவர்களுடன் ஒப்பிட்டு, பிறருடைய ஆசீர்வதங்களின் மீது பொறாமை கொண்டு, அதனால் நம் இருதயத்தில் மனக்கசப்பு பெருக அனுமதிக்க வேண்டாம். அழுக்கடைந்த உலகிலிருந்து, தூய்மை மிக்க கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் சென்றவுடன் தன்னுடைய மனக்கசப்பை, ஞானமின்மையை உணர்ந்த ஆசாப்பைப்போல் நாமும் நம் வாழ்வின் தூய நிலைக்குள் அடி யெடுத்து வைப்போம், நம் உள்ளத்தின் அழுக்குகளைக் களைந்துபோடுவோம். கடவள் அருளும் தெய்வீக ஞானத்தைப் பொற்றுக்கொள்வோம்.

மட்டுமல்ல, கடவுளின் பிரசன்னத்தைத் தேடுவோம். ஜெபம் மற்றும் வேதவாசிப்பு மூலம் தேவபிரசன்னத்தில் தஞ்சம் புகுவதை பழக்கமாக்கிக் கொள்ளுவோம். இவ்விதமாக நாம் உலக மனிதர்களின் துர்-ஆலோசனைகளைத் தவிர்த்து. கடவுளின் தூய-ஆலோசனைகளை பெற்று, தேவஞானத்தைக் கண்டடைவோம்.

ஜெபம்: ஆண்டவரே! சக-மனிதர் மீதான என் பொறாமையை நீக்கிப்போடும். அசுத்த உள்ளம் கொண்ட என்னை அணைத்துக்கொண்டு, என் உள்ளத்தின் அழுக்குகளை நீக்கி உமது ஞானத்தால் அதை நிரப்பும். நீரே என் விருப்பமும் என் பங்குமாயிருக்கிறீர்; உலக ஆலேசனைகளை வெறுத்து உம்முடைய ஆலோசனைகளால் ஞானத்தைப் பெற்றுக்கொள்ள எனக்கு உதவிசெய்யும். இயேசுவின் நாமத்தில். ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்;வதிப்பாராக.




அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா, ஆயர் மற்றும் உழிய இயக்குநர்,
நற்செய்தி வேதாகம அச்சுப்பதிவு, சாலிகிராமம், சென்னை. தமிழ்நாடு, தென்னிந்தியா