June 2025
புதிய கல்வியாண்டு தேவசெய்தி...

ஒவ்வொரு நாளும்

கடவுளின் குடையின் கீழ்

EVERYDAY
UNDER THE UMBRELLA OF GOD
Rev. S.J.D. Dharmaraja

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! இந்தச் செய்தியை வாசிக்கிற நீங்கள் மாணவர்களாகவோ, பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளாகவோ, ஒருவேளை ஆசிரியர்களாகவோ இருக்கிறீர்கள். இம்மாதத்தில் பள்ளிகளும் இன்னும் ஓரிரு வாரங்களில் கல்லூரிகளும் திறக்கப்படுகின்றன. நம் பிள்ளைகள் கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் செல்லும்போது, புதிய மாணவர்கள், புதிய ஆசிரியர்கள் என பள்ளிகளும் கல்லூரிகளும் புதுமை நிறைந்த இடமாக மட்டுமல்ல குழப்பம் மற்றும் சோகம் நிறைந்ததாகவும் இருக்கும். இவை எல்லாவற்றின் மத்தியில், புதிய கல்வி யாண்டில் நீங்கள் கடைபிடிக்கவேண்டிய சில காரியங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

வேதம் சொல்லுகிறது: நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, என் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி, ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களை தேடுகிறது போல் தேடுவாயாகில், கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய். நீதி-2:1-5

1. இயன்றவரை சிறந்த செயல்களை முழுமனதுடன் செய்யுங்கள்:
மாணவர் அனைவரும் எல்லா பாடத்திலும் திறமைசாலிகளாக இருக்க முடியாது அல்லது ஒவ்வொரு தேர்விலும் தேர்ச்சி பெற முடியாது. பொதுவாக, சில நாட்கள் நாம் சிறந்ததைக் கொடுக்கும் நாட்களாக இருக்கும்; சில நாட்கள் பலன்கள் இருக்காது. இது பள்ளியிலும், குடும்ப வாழ்விலும், பணித்தளத்திலும் இருப்பது இயல்புதான். இந்;நிலையில் நாம் அனுதினமும் நம்மால் இயன்றதை, சிறந்ததை செய்ய அழைக்கப்படுகிறோம். வேதம் சொல்லுகிறது: செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய். பிர.9:10. ‘கடவுள் முயற்சிக்கு வெகுமதி அளிக்கிறார்; வெற்றிக்கு அல்ல’ என்பதை நாம் உணரவேண்டும். நாம் சிறந்ததைக் கொடுத்திருந்தால் நன்று; முடிவுகள் சிறப்பாக இல்லாவிட்டால் வருத்தப்படவோ அல்லது குற்ற உணர்ச்சியடையவோ எதுவும் இல்லை. எனது பள்ளி பருவத்தில், நான் எவ்வளவு கடினமாக முயற்சித்தாலும், கணக்குப் பாடத்தில் குறைந்த மதிப்பெண்களே பெற்றேன். எனக்கு எல்லா பாடங்களிலும் திறமை இருந்தது, ஆனால் கணக்குப் பாடத்தில் இல்லை. உங்களுக்குங் கூட இத்தகைய அனுபவம் இருந்திருக்கலாம். எப்படியாயினும், உங்கள் சிறந்ததைக் கொடுங்கள், நீங்கள் அதைச் செய்தவுடன், உங்கள் மனதை நிதானப்படுத்துங்கள். வேதம் சொல்லுகிறது: “வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதை மனுஷருக்கென்று செய்யாமல் அதை இயேசுவின் நாமத்தினாலே கர்த்தருக்கென்று மனப்பூர்வமாய் செய்யுங்கள்.” (கொலோ.3:17,24) எல்லா செயல்களையும் நாம் கடவுளை மையப்படுத்தி, நம்மால் இயன்றவரை சிறந்ததைச் செய்யம்போது, பரி.பவுலைப்போல், “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.” (பிலி.4:13) என நாம் தைரியமாகச் சொல்ல முடியும்.

2. ஒழுக்க உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்:
வகுப்பறைகளில் ஒழுக்கமின்மை என்பது கவனச்சிதறலுடன் தொடர்புடையதாகும். கவனச் சித றல் ஒழுக்கத்தை மிகவும் சவாலானதாக ஆக்குகிறது. கவனச்சிதறல் என்பது சுயக்கட்டுப்பாடு இல்லாத நிலையை காட்டுகிறது. தன் மனதை தன் சிந்தையை தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் நிலையைக்குறித்து வேதம், “தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம் போல் இருக்கிறான்.” (நீதி.25:28) என்று சொல்லுகிறது. 45 ஆண்டுகளுக்கு முன்பு நான் மாணவனாக இருந்தபோது, வீட்டில் தொலைபேசி இல்லை. என்னிடம் செல்போன் இருந்ததில்லை, “கூகிள்’ அல்லது ‘அலெக்ஸா’ இல்லை. ஃபேஸ்புக், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் இல்லை. ஆனால், அந்நாட்களில் திரைப்படங்கள், வகுப்பறை மற்றும் ஸ்டடி-ஹவர்ஸில் கவனச்சிதறல் ஏற்படுத்தி சுய கட்டுப்பாட்டிற்கு தடையாக இருந்தன. அதனால் என் சிந்தனைகள் தடைபட்டன. நான் தொடர்ந்து அந்த தடைகளை ஒதுக்கிவிட்டு என் படிப்பைத் தொடரும் நிலை இருந்தது. இந்நாட்களில், நமது அனைத்து தொழில்நுட்பம், மொபைல்-ஃபோன், சமூக-வலைதளங்கள் நமக்கு கவனச்சிதறல் ஏற்படுகின்றன. ஒரு தற்காலிக கவனச் சித றல் பல மணி நேரத்திற்கு நமது படிப்பை அல்லது பணியை தடுக்கிறது. பெரும்பாலான மக்கள் பணிகளைச் செய்வதைவிட அதிக நேரத்தை மொபைல் போனுக்கும், சமூக வலைதளங்களுக்கும் செலவு செய்வதற்கு திசைதிருப்பப்படுகிறார்கள். இதற்கு மாற்று மருந்து சுய கட்டுப்பாடு மற்றும் சுய-ஒழுக்கமே. தொடர்ந்து அலைபேசியைப் பார்க்காமல் ஒழுக்கமாக இருங்கள். அலைபேசியை குறிப்பிட்ட மணி நேரங்களுக்கு அணைத்து வையுங்கள்; அல்லது, சில மணிநேர படிப்பு அல்லது வேலை செய்த பிறகு அதற்கு வெகுமதியாக சில நிமிடங்கள் மொபைல் பார்க்க பழகிக்கொள் ளுங்கள். இப்படி நான் சொல்வது உங்களுக்கு வெறுப்பாக அல்லது கசப்பாக காணப்படலாம் காரணம், நல்லொழுக்கத்துக்கான அறிவுறை முதலில் கடினமாகவே தோன்றும். வேதமும் அதையே சொல்லுகிறது, “எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்” (எபி.12:11)

3. ஒவ்வொரு நாளையும் கடவுளின் குடையின் கீழ் வையுங்கள்:
கல்வியாண்டு தொடங்கியவுடன், கல்விநிலையம் செல்வதற்காக, நேரத்திற்குள் எழுந்து, காலைக் கடன்களை முடித்து, உணவு தயார் செய்து, வகுப்பிற்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு, வீட்டைவிட்டு வெளியேறுவது ஒரு ஒழுக்கம். இவற்றிற்கும் முன்னதாக அதிகாலையில் விழிக்கும் வகையில் கடிகாரத்தில் அலாரம் அமைத்து, எழுந்திருந்து கடவுளுடன் 15 நிமிடங்கள் தனியாக செலவிட்ட பின் உங்கள் நாளைத் தொடங்குங்கள். நாள் தொடங்கும்போது, “இன்று நான் திறமையாகவும் நம்பிக்கையுடனும் இருக்க உதவுங்கள்” என்று கடவுளிடம் ஜெபியுங்கள். கடவுளுடைய ஆசியின்கீழ் அந்த நாளை அமைத்துக் கொள்ளுங்கள். அது நம்மை, திறமையும் நம்பிக்கையும் உடையவர்கள் ஆக்குகிறது. கடவுளுடன் நாம் பேசும் பேச்சும், அவரை நோக்கி நாம் ஜெபிக்கும் ஜெபமுமே, நம் நாளை கடவுளின் குடையின் கீழ் வைப்பதாகக் கருதப்படுகிறது. கடவுள் நம்மை தம் குடையின் கீழ் வைத்து காத்து, நமக்கு ஞானம் தர வாக்களிக்கிறார். “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நாட்டுவேன், உங்களைப் பிடுங்கமாட்டேன்; நான் உங்களுக்குச் செய்யவிருந்த தீங்குக்கு மனஸ்தாபப்பட்டேன். நீங்கள் பயப்படாதிருப்பீர்களாக. உங்களை இரட்சிக்கும்படிக்கும், உங்களை தப்புவிக்கும்படிக்கும் நான் உங்களுடனே இருந்து, உங்க ளுக்கு இரக்கஞ்செய்வேன்.” (எரே-42:9-12) என எரேமியா தீர்க்கரால் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுக்கப்பட்ட கடவுளின் குடையை நமதாக்கிக்கொள்வோம்.

கடைசி சிந்தனை: கால்பந்து விளையாட்டில், ‘பொறுமையாக ஓடும் வீரர்கள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். 22 பேர் விரைவாக ஓடி, அவசர கதியில் பந்தை நகர்த்தும் கால்பந்து விளையாட்டில் எப்படி பொறுமை இருக்க முடியும்? பதில் என்னவென்றால், ‘பொறுமையாக ஓடும் வீரர்கள்’ இதுபற்றி கவலைப்படுவதில்லை; அவர்கள், பந்து செல்லும் இடைவெளியைக் கண்ணால் காணும் வகையில் ‘மெதுவாக’ ஓடுவதால், எங்கு ஓடவேண்டும் என்பதை நன்கு அறிவார்கள். நாமும்கூட பிரார்த்தனையுடன் நாளைத் தொடங்கும்போது, அது நம் வேகத்தைக் குறைக்கிறது; வேகத்தைக் குறைப்பது நம்மை மேலும் பொறுமையாக்கி கால்பந்து விளையாட் டில் ‘மெதுவாக ஓடும் வீரரை’ போன்று சிறந்த முடிவுகளை எடுக்கும் ஞானம் மற்றும் சகிப்புத் தன்மை நமக்;குத் தருகிறது. பிரியமானவர்களே! உங்களால் இயன்றதைச் செய்யுங்கள். ஒழுக்கமாயிருங்கள். ஜெபம்பண்ணுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.


அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா



அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா,
ஆயர் மற்றும் உழிய இயக்குநர், நற்செய்தி வேதாகம அச்சுப்பதிவு ஊழியங்கள்,
சாலிகிராமம், சென்னை. தென்னிந்தியா.