May 2026
பெந்தெகொஸ்தே திருநாள்...

உணர்வுள்ள பாவிக்கு உன்னதத்தின் ஆவி

நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். சங்கீதம்-51:10பி
PENTECOST: THE SUBLIME SPIRIT TO THE SENSIBLE SINNER
Rev.S.J.D. Dharmaraja

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
பெந்தெகொஸ்தே திருநாளை கொண்டாடும் இந்நாட்களில், சங்கீதம் 51:10-13 வசனங்களில் நாம் காணும் ஆவிக்குறிய புதுப்பித்தலுக்கான மன்றாட்டையும், அப்போஸ்தலர் 2ல் நாம் காணும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையளிக்கும் வாக்குறுதியையும் இணைத்து சிந்திக்க அழைக்கப் படுகிறோம். இது தாவீதின் நொறுங்குதலிலிருந்து பிறந்த மனந்திரும்புதலுக்கான ஒரு ஜெபம். இறையியலாளர்கள் பலர் சங்கீதம்-51க்கு, ‘ஆழத்திலிருந்து வரும் தாவீதின் கூக்குரல்’ என தலைப்பு வழங்கியுள்ளனர்; எனினும் இது, பரிசுத்த ஆவியானவர் தரும் ஆவிக்குரிய மாற்றத்தைப் பெறுவதற்காக சுத்தமான இருதயத்தை பெறுதல், தேவசமூகத்தை அடைதல், மீட்பின் மகிழ்ச்சியை பெறுதல் ஆகியவற்றிற்கான ஒரு ஆழ்ந்த ஏக்கமாகவும் இருக்கிறது.

சங்கீதம்-51:10-13ஐ அடிப்படையாகக்கொண்ட இந்த தியானம், தோல்விக்குப் பிறகு தேவனிட மிருந்து உள்ளான புதுப்பித்தலைத் தேடும் நிலையைப் பிரதி பலிக்கிறது. இது உறுதியான ஆவி (தளராத அர்ப்பணிப்பு), பரிசுத்த ஆவி (தெய்வீக வல்லமை) மற்றும் மனப்பூர்வமான ஆவி (தேவனுக்குக் கீழ்ப்படியும் ஆர்வம்) ஆகியவற்றின் அவசியத்தை எடுத்துரைக்கிறது.

1. உறுதியான ஆவி: (வசனம்.10)

“தேவனே, சுத்த இருதயத்iதை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்” (சங்கீதம்-51:10). தன் மீறுதல்கள் வெறும் தவறுகள் மட்டுமல்ல, அவை தன் உள்ளத் தின் அடிப்படையான சீர்கேடுகள் என்றும், அதைத் தேவனால் மட்டுமே சரிசெய்ய முடியும் என்றும் அறிந்திருந்த தாவீது, கடவுள் தரும் மனவுறுதியின் ஆவிக்காக இங்கே கெஞ்சுகிறதை நாம் பார்க்கிறோம்.

காற்று மற்றும் நெருப்பின் வடிவில் வந்து சீடர்களை மாற்றிய அதே தூய ஆவியானவர் நம் இருதயங்களிலும் பிரவேசித்து, கடினமான, பாவமுள்ள நம் இருதயங்களை மாற்றி, தேவ சித்தத்தை விரும்பும் மென்மையான இருதயத்தை நமக்குள் உண்டாக்கி, ஆவிக்குரிய அறுவைசிகிச்சை செய்ய விரும்புகிறார்.

கடவுள் முன்பாக வருவதற்கு முன்பு நீங்கள் உங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ள எப்போதாவது முயற்சித்ததுண்டா? நாம் நொறுங்கிய ஆவியோடும் மனந்திரும்பிய இருதயத் தோடும் வந்து, அவர் நம்மைத் தூய்மைப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று சங்கீதம்-51 நமக்குப் போதிக்கிறது.

உண்மையான மாற்றம் என்பது வெறும் புறத்தோற்ற மாற்றங்களில் இருந்து வருவதல்ல; மாறாக அது, கடவுளின் கிருபையால் தூய்மையாக்கப்பட்ட உள்ளத்தில் இருந்தே தொடங்குகிறது. தாவீது அரசர் இங்கு குறிப்பிடும் ‘நிலைவரமான ஆவி’ அல்லது ‘உறுதியான ஆவி’ என்பது கீழ்ப்படியாமைக்குள் வழிதவறிச்செல்லும் தூண்டுதலை எதிர்த்து, தேவசித்தத்துக்கு நம்மை அர்ப்பணிக்கும் ஒரு நிலையான மற்றும் அசைக்கமுடியாத அர்ப்பணிப்பைக் குறிக்கிறது.

2. பரிசுத்த ஆவி: (சங். 51:11; யோவா. 14:16-17)

“உமது சமூகத்திலிருந்து என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்” (சங்.51:11). சவுல் ராஜாவின் கீழ்ப்படியாமை தேவனுடைய ஆவியை இழக்கச் செய்வதை தாவீது கண்டிருந்தார்; அதனால், பாவத்தின் காரணமாகவே, தான் தேவனுடைய பிரசன்னத்திலிருந்து தள்ளிவிடப்பட்டேனோ என எண்ணி அவர் அஞ்சினார். உண்மையான ஆன்மீக பலமும் கடவுளுடனான நெருக்கமும் பரிசுத்த ஆவியானவர் மூலமாக மட்டுமே கிடைக்கும் என்பதை தாவீது உணர்ந்துகொண்டார்.

பழைய ஏற்பாட்டில், மக்கள்மீது தற்காலிகமாக தேவ ஆவி வந்ததைப்போல் அல்லாமல், இயேசுவின் மூலம் பரிசுத்த ஆவியானவரின் வாக்குறுதி இப்போது நிரந்தரமானது. தேற்றர வாளன் என்றென்றும் நமக்குள் நிலைத்திருப்பதை இந்த ‘பெந்தேகோஸ்தே-அனுபவம்’ உறுதி செய்கிறது (யோவா. 14:16-17).

அன்பானவர்களே! மனந்திரும்புதலானது, கடவுளுடைய பிரசன்னம் குறித்ததான நமது உணர்வை மீட்டெடுத்து, நமது கவனத்தை, பாவம் உருவாக்கும் குற்ற உணர்விலிருந்து நமக்குள் வாசம் செய்யும் கடவுளுடைய ஆவியின் பக்கமாய்த் திருப்புகிறது. இவ்வாறாக, கடவுளுடனான அந்த நெருங்கிய உறவை இழப்பதைத் தவிர்த்து, தேவபக்தி நிறைந்த வாழ்க்கையை வாழ்வதற்கு பரிசுத்த ஆவியின் தெய்வீகப் பிரசன்னமும் வல்லமையும் அவசியம் என்பதை தாவீது அரசனின் இந்த மன்றாட்டு வெளிப்படுத்துகிறது.

3. மனப்பூர்வமான ஆவி: (சங். 51:12)

“உமது இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்” (சங்.51:12) பாவம் என்பது இரட்சிப்பின் மகிழ்ச்சியைத் திருடும் ஒரு திருடன். நாம் பாவத்தைப் பற்றிக் கொண்டிருக்கும்போது, நமது மகிழ்ச்சியையும் சாட்சிபகரும் வல்லமையையும் குறைக்கும் ஒரு பெரும் சுமையைப் பற்றிக்கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை. பரிசுத்த ஆவியானவர் ‘சுதந்திரமான’ அல்லது ‘விருப்பமுள்ள’ ஆவி என்றும் அழைக்கப்படுகிறார், ஏனென்றால் அவர் பாவத்தின் அடிமைத்தனத்தை முறித்து, தேவனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதற்கான சுதந்திரத்தையும் மனவிருப்பத்தையும் (மனப்பான்மையையும்) நமக்குத் தருகிறார். அவர் நம்மை ‘இரட்சிப்பின் மகிழ்ச்சியால்’ நிரப்புகிறார், அதுவே திருச்சபை ஊழியத்தின் ஒரு மாபெரும் உந்துசக்தியாகும்.

உற்சாகமான ஆவி அல்லது மனப்பூர்வமான ஆவி|யை வேண்டுவது என்பது, கட்டாயப் படுத்தப்படுவதற்குப் பதிலாக தேவனுக்குக் கீழ்ப்படிய ஆர்வமுடைய, சுதந்திரமான, மனமுவந்த ஓர் ஆவிக்கான வேண்டுகோள் ஆகும். இது தேவனுக்கு ஊழியம் செய்வதில் மகிழ்ச்சியைக் கண்டடைவதையும், விசுவாசத்தில் உறுதியாக நிலைத்து இருப்பதற்கான தெய்வீக பெலனைப் பெறுவதையும் குறிக்கிறது.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!

“அப்பொழுது நான் பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன், பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள்.” (சங்.51:13) என்ற தாவீதின் அறிக்கையானது பெந்தேகோஸ்தேவுக்கான ஒரு சாட்சியாகும். தனது மீட்பு தனக்காக அல்ல, தேவனுடைய மகிமைக்காகவே என்று தாவீது முடிவு செய்கிறார். மன்னிக்கப்பட்ட பாவியாகிய அவர் ஒரு சக்திவாய்ந்த சாட்சியாக மாறுகிறார்.

பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் பொழிந்தருளப்பட்டவுடன், முன்பு பயத்தில் நடுங்கி பதுங்கிக்கொண்டிருந்த இயேசுவின் சீடர்கள், துணிச்சல் மிக்க சாட்சிகளாக மாறினார்கள். ஒரு சுத்தமான இருதயத்தின் இறுதி நோக்கம், தேவநீதியைப் போதிப்பதும், பாடித்துதிப்பதும், அநேக ஆத்துமாக்களை மீட்டெடுக்க உதவுவதுமே ஆகும். வாழ்வில் நீங்கள் நொறுக்கப்பட்டு, பின்னர் ஆவியானவரால் சீர்படுத்தப்பட்ட உங்கள் அனுபவமே, கிறிஸ்துவுக்கான உங்கள் வலிமையான சாட்சியாகும். அனைவருக்கும் பெந்தெகொஸ்தே திருநாள் நல்வாழ்த்துக்கள். கர்த்தர்தாமே உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. அல்லேலூயா. ஆமென்.




அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா, ஆயர் மற்றும் உழிய இயக்குநர்,
நற்செய்தி வேதாகம அச்சுப்பதிவு, சாலிகிராமம், சென்னை. தமிழ்நாடு, தென்னிந்தியா