May 2025
மே-தின சிறப்பு தேவசெய்தி...

கடவுளை மையமாகக்கொண்ட

உழைப்பின் ஆசீர்வாதங்கள்

சங்கீதம்-127:1,2

MAY DAY
BLESSINGS OF THEOCENTRIC LABOR
Rev. S.J.D. Dharmaraja

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்தவின் இனிய திருப்பெயரில் அன்பின் வாழ்த்துக்கள். உழைப்பாளர் தினத்தை மே-தினமாக நாம் கொண்டாடுகிறோம். நம் உழைப்பில் கடவுளின் செயல்பாட்டிற்கு தொடர்பு இருக்கிறது (சங்.127, 128) என்பதை நாம் உணர்ந்திருக்கிறோமா? கடவுளை மைய்யப்படுத் தும் உழைப்பின் மூன்று ஆசீர்வாதங்களை (சங்.127:1, 2) இவ்வேளையில் தியானம் செய்ய அழைக்கப்படுகிறோம்.

1. வம்சாவழி ஆசீர்வாதம்: (சங். 127:1மு) (சங். 127:2)
முதலாவதாக, கடவுளை மையப்படுத்தாத உழைப்பின் பயனற்ற தன்மையைச் இச்சங்கீதம் குறிப்பிடுகிறது (சங்.-127:1மு). வீடு கட்டுதல் பற்றிப் பேசும் இச்சங்கீதம் ஒரு வீட்டைக் கட்டுவதைப் பற்றிப் பேசவில்லை, மாறாக ஒரு வம்சபரம்பரையை குறித்து பேசுகிறது. பண்டைய இஸ்ரேலில், ‘வீடு’ என்பது ஒரு நபர் தனது வாரிசுகளுக்கு வைத்துப்போகும் உழைப்பின் சொத்தாகும். உதாரணமாக, ‘தாவீதின் வீடு’ என நாம் வேதத்தில் படிப்பது, தாவீது நிறுவியதும் தன் வாரிசுகளுக்குக் கொடுத்ததுமான ராஜ்யத்தைக் குறிக்கிறது.

சங்கீதம் 128ல் கடவுளை மைய்யப்படுத்திய உழைப்பின் ரகசியம் குறித்து சங்கீதக்காரர் பேசுகிறார். ஒரு நபர் கடவுளுக்குப் பயந்தால்.. அவருடைய உழைப்பு பலனளிக்கும் (வச.2), அவருடைய மனைவியின் உழைப்பு பலனளிக்கும் (வச.3மு), அவருடைய பிள்ளைகளின் உழைப்பு பலனளிக் கும் (வச.3பி). இந்த ஆசீர்வாதம், ஒரு மரபுவழி ஆசீர்வாதம். கடவுளை மையப்படுத்துகிற ஒரு தெய்வீகக் குடும்பத்திற்கு இது உண்மையிலேயே மதிப்புமிக்கது என்பதை கடவுளின் வார்த்தை யாக இச்சங்கீதம் நமக்குச் சொல்கிறது. இந்த ஆசீர்வாதம், கடவுளுடனும், நாம் நேசிக்கும் நம் குடும்பத்துடனும், மனைவி-பிள்ளைகளுடனும் நாம் மகிழ்ச்சியுடன் வாழும் வாழ்க்கை ஆகும். இந்த வாழ்க்கை கடவுளுடனும் குடும்பத்துடன் நாம் அனுபவிக்கும் அன்பு மற்றும் நெருக்கத்தின் மூலம் நாம் பெறவிருக்கும் நித்திய வாழ்வுக்கான் முன்னறிவிப்பு ஆகும்.

குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு, தந்தை-தாய் ஆகவும் தாத்தா-பாட்டியாக வாழும் ஆசீர்வாதத் துடன் ஒப்பிடக்கூடிய ஆசீர்வாதம் வேறு எதுவும் இல்லை என்பது இச்சங்கீதத்தின் சாராம்ச மாகும். இந்த மகிழ்சி, இந்த ஆசீர்வாதம் இத்துடன் முடிந்துபோவது அல்ல; இது, கடவுளின் பரலோக குடும்பத்தின் ஒரு பகுதியாக இருக்கும் முடிவில்லாத நித்திய மகிழ்ச்சியாய் என்றென்றும் தொடர்வதாகும்.

இயேசு சொன்னார்: என் நாமத்தினிமித்தம் தன் வீட்டையோ, சகோதர-சகோதரிகளையோ, தகப்பனையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நிலங்களையோ விட்டவன் எவனோ, அவன் நூறுமடங்கு பெற்று, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக் கொள்வான். (மத்-19:29) இயேசு சொன்னதின் அர்த்தம், இவ்வுலகில் கடவுளை மைய்யப்படுத்திய உழைப்பில் ‘வீடு’ ‘குடும்பம்’ இழக்கப்படும்போது, நித்தியத்தில் ஒரு ‘பெரிய வீடு’ மற்றும் ‘ஒரு பெரிய பரம்பரைச் சொத்து’ நமக்காக சேர்க்கப்படுகிறது. நமது ‘தெய்வீக உழைப்பு’ என்பது துரு, பூச்சி, திருடர்களால் அழிக்கப்படும் பொருட்களுக்காக அல்ல, கிறிஸ்துவின் உடல் என்னும் குடும்பத்தில் இணைந்து உன்னத ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள உழைப்பதாகும்.

2. பாதுகாப்பின் ஆசீர்வாதம்: (சங்.-127:1பி) (சங்.-127:2)
இரண்டாவதாக, கடவுள் இல்லாமல் பாதுகாப்பைப் பெற உழைப்பதன் பயனற்ற தன்மையை இச்சங்கீதம்; குறிப்பிடுறது (சங்.127:1பி). பண்டைய காலத்தில், எந்த நேரத்திலும் கொள்ளையரோ தீவிரவாதிகளோ மக்களுக்குச் சொந்தமான அனைத்தையும் பறித்துச் செல்லக்கூடிய கொடூரமான நிலை இருந்தது. இதனால்தான் மதில்களைக் கட்டி, காவலர்களை நியமித்தனர். இருப்பினும், கடவுள் நகரத்தை காக்கவில்லை எனில், இதுபோன்ற அனைத்து உழைப்புகளும் பயனற்றவை என்று சங்-127:1பி கூறுகிறது. நம்மை பாதுகாப்பதற்கு கடவுளால் எழுப்பப்பட்டுள்ள சுவர் என்ன? அது என்ன ஆசீர்வாதம்?

இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாய் இருக்கிறார்கள். அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான்; அவர்கள் நாணமடையாமல் ஒலிமுக வாசலில் தங்கள் சத்துருக்களோடே பேசுவார்கள் (சங்.127:3–5).

இந்த வசனங்கள் ‘குழந்தைகள்’ என்னும் ஆசீர்வாதத்தைப் பற்றியதாகும். குழந்தைகள் ஒரு ஆசீர்வாதம் என்பதற்கான காரணம், அவர்கள் (வாலிபர்) பண்டைய உலகில் பெற்றோருக்கும், பெரியோருக்கும் பாதுகாப்பைக் கொடுத்தது தான். பண்டைய உலக வாழ்வு மிகக் கொடூரமான தாக இருந்தது, ஒரு நபர் வயதாகும்போது அவர்களுக்கு மகன்களும் பேரக்குழந்தைகளும் இல்லையெனில், அவர்கள் தலைநிமிர்ந்து வாழ முடியாது. இதைத்தான், சங்-127:5ன் கடைசி பகுதி, “அவர் (மகன்களைக் கொண்ட மனிதர்) நகர-வாசல்களில் தனது எதிரிகளுடன் பேசும்போது அவமானப்படமாட்டர்” என்கிறது.

இந்த நவீன காலத்திலும், வயது-முதிர்ந்து பலவீனமடைகையில், மோசடி பேர்வழிகள் தொலை பேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகளில் ஏடிஎம் நம்பர், சிவிவி நம்பர், ஓடிபி நம்பர் கேட்டு ஏமாற்றுவது குறிப்பிடத்தக்கது. இது கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு சோகம் ஆகும். பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளே உலகத்தின் மோசடிகளிலிருந்து முதியவர்களுக்கு பாதுகாப்பு தரும் கவசம் ஆகிறார்கள். எனவே, பிள்ளைகள் கடவுள் தரும் பாதுகாப்பின் ஆசீர்வாதம். இத்தகைய பாதுகாப்புச் சுவர்களைக் நமக்காகக் கட்டித்தருவது கர்த்தர்தான் என்பதை நாம் ஒருபோதும் மறந்துபோகக்கூடாது.

3. சமாதானத்தின் ஆசீர்வாதம்: சங்கீதம் 127:2பி
மூன்றாவதாக, கடவுள் தரும் உழைப்பின் ஆசீர்வாதம் ‘சமாதானம்’ அல்லது ‘அமைதி’. சங்.127:2பி, “அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்” என்கிறது. கடவுள், தாம் நேசிக்கிறவர்களுக்கு தூக்கத்தைக் கொடுக்கிறார். இங்கு, ‘கடவுளுடன் இணைந்த உழைப்பு’ ‘அமைதியான தூக்கம்’ ஆகியவை சமாதானத்தின் ஆசீர்வாதமாக முக்கியத்துவம் பெறுகின்றன. அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் செழிப்பிற்கு காரணம், ‘கடின உழைப்பு’ ஆகும். கடின உழைப்பு அவர்களுக்கு நல்ல தூக்கத்தை கொடுக்கும் என நாம் நினைக்கிறோம்; ஆனால், அவர்களுடைய இரவுகள் பதட்டம் நிறைந்தவை என ஆய்வுகள் சொல்கின்றன. திருமறையின் துணையுடன் ஆராயும்போது, இந்த தேசங்களைப்போலவே அநேக தேசங்களின் மக்கள் கடவுள் இன்றி உழைத்து, தூக்கம் இன்றி தவிக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. மலைப் பிரசங்கத்தில், இயேசு, ‘கடவுளற்ற உழைப்பு’ குறித்து நம்மை எச்சரிக்கிறார். நம்முடைய உழைப்பில் முன்னுரிமையை தேவனுக்குத் தரவேண்டும் என்பதை, “ஆகையால், என்னத்தை உண்போம்? என்னத்தை குடிப்போம்? என்னத்தை உடுப்போம் என்று (உழைப்பைக்குறித்து) கவலைப்படாதிருங்கள். இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்” என்ற வசனத்தில் இயேசு விளக்குகிறார் (மத்.6:31–33).

பிரியமானவர்களே! உழைப்பு என்பது கடவுளின் மகிமைக்காக கடவுளின் வல்லமையால் செய்யப்பட்டால் மட்டுமே நமக்கு ஆசீர்வாதமாக இருக்கும் என்பதை உணர்ந்து நாம் கடவுளைப் பற்றிக்கொள்வோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.


அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா



அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா,
ஆயர் மற்றும் உழிய இயக்குநர், நற்செய்தி வேதாகம அச்சுப்பதிவு ஊழியங்கள்,
சாலிகிராமம், சென்னை. தென்னிந்தியா.