கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, இயேசுவின் பாடு, மரணம், உயிர்த்தெழுதலை ஆசரிக்கிற இத்தருணத்தில் ‘கல்வாரிப் பயணம் - மீட்பின் வழி’ என்ற கருத்தைத் தியானிக்க அழைக்கப் படுகிறோம். மனிதவாழ்வு மரணத்தில் முடிவது இயற்கை. ஆனால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மரணத்தில் முடிந்துவிடாமல், உயிர்த்தெழுதலில் புதிய ஆரம்பத்தைத் தந்தது. வெற்றியை மட்டுமே இவ்வுலகம் கொண்டாடும்; ஆனால் இயேசுவின் பாடு; மற்றும் மரணத்தைக் கொண்டாடப் பணிக்கிறது கிறிஸ்துவின் சிலுவை. இயேசுவின் பாடுகள், நமது மீட்புக்காக கொடுக்கப்பட்ட விலை ஆகும்; இயேசுவின் மரணம், பிதாவோடு நம்மை ஒப்புர வாக்கிய பலி; இயேசுவின் உயிர்த்தெழுதல், சாத்தானின் தலையை நசுக்கிய வெற்றி. இந்த மூன்று நிலைகளையும் நாம் தியானிப்போம்.
1. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பாடுகள்:
கிறிஸ்துவின் பாடுகள், பாவ-மரணத்திலிருந்து நம்மை மீட்பதற்காக அவர் கொடுத்த அன்பின் விலை ஆகும். இயேசுவின் சிலுவைபப்பாடுகள் குறித்து சங்கீதக்காரர் தீர்க்கத்தரிசனமாகச் சொல்வதை பின்வரும் வசனங்களில் காண்கிறோம்: “என் எலும்புக ளெல்லாம் கட்டுவிட்டது, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று. என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல் வாயோடே ஒட்டிக் கொண்டது; என்னை மரணத்தூளிலே போடுகிறீர். பொல்லாத வர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களை யும் உருவக் குத்தினார்கள்.” என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்.” (சங்.22:14-17). இயேசு சிலுவையில் அனுபவித்த உடல் மற்றும் மன ரீதியான வேதனைகள் சங்கீதம்-22ல் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன. மக்கள் அவரைப் பரியாசம் செய்ததையும், அவருடைய உடல் தளர்ந்து போனதையும் தீர்க்கதரிசனமாக சங்கீதக்காரர் கூறுவது குறிப்பிடத்தக்கது. மட்டுமல்ல, இயேசு வின் பாடுகள் குறித்து, “அவர் நம்முடைய மீறுதல்களினிமித்தம் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் நொறுக்கப்பட்டார்.” என ஏசாயா சொன்ன தீர்க்கத்தரிசனமும் (ஏசா.53:5) சிலுவையில் நிறைவேறுவதை நாம் வேதத்தில் காண்கிறோம். இயேசு கெத்சமனே தோட்டம் முதல் கல்வாரி மலை வரை, சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தார். அவர் நமக்காக பட்ட காயங்கள் நம் ஆத்துமாவின் காயங்களை ஆற்றும் மருந்தாகும். இயேசுவின் பாடுகள் உடல் ரீதியானவை மட்டுமல்ல, அவை மன ரீதியான வேதனைகளும் ஆகும். பாவத்தின் பாரத்தை அவர் தன்மேல் ஏற்றுக்கொண்டார். அவர் அடிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு, காயப்படுத்தப்பட்டார். எபிரெயர் 4:15-ன்படி, அவர் நம்முடைய எல்லா பலவீனங்களையும் அறிந்தவராக நம்முடைய பாடுகளில் பங்கேற்றார்.
வாசனைத்திரவியம் தயாரிக்கப்பட வேண்டுமானால், மலர்களின் இதழ்கள் நசுக்கப்பட வேண்டும். அந்த மலர்கள் எவ்வளவு அதிகமாக நசுக்கப்படு கின்றனவோ, அவ்வளவாய் நறுமணம் வீசும். அதுபோலவே, இயேசுவின் பாடுகள் உலகிற்கு இரட்சிப்பு எனும் நறுமணத்தைக் கொண்டு வந்தது.
அன்பானவர்களே, இயேசு கிறிஸ்து நமக்காக அனுபவித்த பாடுகளைச் சற்று சிந்திப்போம். அவர் சரீரத்தில் ஏற்ற ஒவ்வொரு காயமும் ஒவ்வொரு தழும்பும், நம் மீறுதலுக்காகவே ஏற்பட்டது. இன்று உங்கள் இருதயம் வேதனையினால் காயப்பட்டிருக்கிறதா? மனிதர்களால் நீங்கள் புறக்கணிக்கப்பட்டு, ‘நசுக்கப்பட்ட’ அனுபவத்தோடு வந்திருக்கிறீர்களா? அப்படியானால், இந்த பாடுகளுக்காக நன்றி ஆண்டவரே, உம்முடைய தழும்புகளால் என் வாழ்வின் காயங்களை ஆற்றும் என்று சொல்லி உங்களை அர்ப்பணியுங்கள்.
2. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மரணம்:
தமது மரணம் குறித்து இயேசு சிலுவையில் முதலாவது குறிப்பிட்டது “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளை கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?” (சங்.22:1) என்பதேயாகும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மரணத்தைக் குறிக்கும் வகையில் சங்கீதக்காரர் பயன்படுத்தியுள்ள ‘கைவிட்டீர்’ ‘தூரமாயிருக்கிறீர்’ ஆகிய வார்த்தைகளை இயேசு, சிலுவையில் சொல்வதை நாம் காண்கிறோம். சிலுவையில் இயேசு தம் ஜீவனை விட்டபோது, நம்முடைய பாவக்கடன்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டன. மரணம் ஒரு முடிவல்ல, அது நித்திய வாழ்விற்கான வழி என்பதை சிலுவை மரணம் நிரூபித்தது. சிலுவையில் இயேசு மரணத்தைச் சந்தித்தபோது, உலகத்தின் பாவங்கள் அனைத்தையும் சுமந்ததினால், பிதாவாகிய தேவன் அவரை கைவிட வேண்டிய திருந்தது. இது மரணத்தின் உச்சக்கட்டம் ஆகும். மேலும், இயேசுவின் உடைகளுக்காகச் சீட்டுப் போட்டதையும் சங்.22:18ல் தீர்க்கத்தரிசனமாக நாம் காண்கிறோம். “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி ஜீவனை விட்டார்." (லூக்.23:46). இயேசுவின் மரணம், ஒரு தோல்வியல்ல அது நமது மரணதண்டனையை ஏற்றுக்கொண்டு, நித்தியஜீவனை நமக்குக்கொடுத்த ஒரு பரிமாற்றம் (EXCHANGE).
ஒரு நீதிமன்ற வழக்கில், குற்றவாளிக்கு அவன் கட்ட முடியாத அளவு பெரிய தொகை அபராதமாக விதிக்கப்படுகிறது. அவன் சிறைக்குச் செல்லவேண்டிய நேரத்தில், வேறொருவர் வந்து அந்த அபராதத்தொகை முழுவதையும் செலுத்தி அவனை விடுவிக்கிறார். அதைப்போன்றது தான் இயேசுவின் மரணமும்; அது, நாம் செலுத்தவேண்டிய தண்டனைத்தொகையை செலுத்தி நம்மை விடுவித்தது.
அன்பானவர்களே, நமது எல்லா பாவக்கடனையும் இயேசு சிலுவையில் இரத்தம் சிந்தி, செலுத்திவிட்டார்; இனி நாம் விடுவிக்கப்பட்டவர்கள். ஆகவே, ‘ஆண்டவரே, என் பாவக்கடன்களை தீர்த்ததற்காக உமக்கு நன்றி, இன்று நான் ஒரு புதுவாழ்வு வாழ உம்மிடம் வருகிறேன்’ என்று சொல்லி அர்ப்பணிப்போம்.
3. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்:
“இயேசு, இங்கே இல்லை, அவர் தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்." என தேவதூதன் சொல்கிறான் (மத்.28:6). கிறிஸ்தவ விசுவாசத்தின் அஸ்திவாரமே உயிர்த்தெழுதல்தான். இயேசுவின் உயிர்த்தெழுதல் மரணத்தின் மீதான வெற்றி ஆகும். இயேசு உயிர்த்தெழுந்ததால், நாமும் உயிரோடு எழும்புவோம் என்ற நம்பிக்கை நமக்கு கிடைத்தது. இயேசு உயிர்தெழவில்லை என்றால் நம்முடைய பிரசங்கமும் விசுவாசமும் வீணாகப் போயிருக்கும். “என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும். என் ஆத்துமா வைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவான் அழிவைக் காணவொட்டீர்" (சங்.16:9,10) இந்த வார்த்தைகளை இயேசு சிலுவையில் நிறைவேற்றிக்காட்டினார்.
ஒரு பட்டாம்பூச்சியின் வளர்ச்சியை பாருங்கள். அது ஒரு கூட்டுப்புழுவாகும்போது, கூடு, ஒரு கல்லறை போல மூடிக்கொள்கிறது. பார்ப்பதற்கு அது செத்துப்போனது போலத் தெரியும். ஆனால், குறித்த நேரத்தில் கூட்டை உடைத்துக்கொண்டு, அழகான வண்ணத்துப்பூச்சியாக அது வானில் பறக்கிறது. அதைப்போலவே, இயேசுவின் உயிர்த்தெழுதல் நம்முடைய பெலவீனமான வாழ்வை மகிமையுள்ள வாழ்வாக மாற்றும் வல்லமை கொண்டது.
அன்பானவர்களே! உயிர்த்தெழுந்த ஆண்டவர் இன்று நம் நடுவில் நிற்கிறார். ‘மரித்தாலும் பிழைப்பாய்’ என்று சொல்லி ஒரு புதிய ஆரம்பத்தைத் தந்தவர், இன்று செத்துப்போன நம் சூழ்நிலைகளை உயிர்ப்பிக்கப்போகிறார். கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலின் வல்லமையால் உங்கள் தோல்விகள் வெற்றிகளாக மாறட்டும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Rev.G. Sam Immanuel, Chairman, Palayapettai Pastorate
CSI Tirunelveli Diocese, Tirunelveli-5, South India