1 கொரிந்தியர்:-15:12-19
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் என்பது கிறிஸ்தவ விசுவாசத்தின் கருவாகும். உயிர்த்தெழுதல் இல்லாமல் கிறிஸ்தவம் இல்லை. இயேசு கிறிஸ்து வின் உயிர்த்தெழுதலில் கிறிஸ்தவ விசுவாசம் முழுமை அடைகிறது என்றால் அது மிகை யாகாது. சுருங்கச்சொன்னால் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் குறித்த நம்பிக்கை இல்லையெனில் கிறிஸ்தவம் இல்லை. வேதம் சொல்லுகிறது:
கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள் (1கொரி-15:17) கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா.(1கொரி-15:14)
மீண்டுமாக ஒரு ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுகிற நாம், இந்தக் கருத்தை மையமாகக் கொண்டு 1கொரிந்தியர் 15:12-19 வசனங்களின் துணையுடன் வேத வசனங்களைத் தியானிப்போம்.
கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் பலர் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை உறுதியாய் விசுவாசிப்பதில்லை. இயேசு கிறிஸ்து மரித்தோரி லிருந்து எழுப்பப்பட்டார் என்பதையும், இந்த உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிற மற்றும் வாழ்ந்து மறைந்த அனைவருக் குங்கூட உயிர்த்தெழுதல் காத்திருக்கிறது என்பதையும் அநேக கிறிஸ்தவர்கள் நம்புவதில்லை.
இயேசு கிறிஸ்துவுக்குள் நித்திய ஜீவனை பெறுவதற்காகவோ அல்லது பாவத்தின் பலனாக நித்திய தண்டனையைப் பெறுவதற்காகவோ மனுக்குலத்தார் அனைவரும் உயிர்த்தெழுப்பப்படுவது நிச்சயம் என்பதை நன்கு புரிந்துகொண்டு
விசுவாசிப்பதற்கு இன்று நாம் அழைக்கப்படுகறோம். தியானத்திற்காக தெரிந்து கொள்ளப்பட்ட இந்த வசனங்களில் அப்போஸ்தலனாகிய தூய. பவுல் இது குறித்து என்ன சொல்கிறார் என்பதைச் சற்றே நாம் தியானிப்போம்.
1. உயிர்த்தெழுதலை நம்பாதவர்களை பவுல் கண்டிக்கிறார்:
இந்தப் பகுதியிலுள்ள வசனங்கள் 12 மற்றும் 13ல், தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொண்டு, உயிர்த்தெழுதலில் நம்பிக்கை கொள்ளாத சிலருக்கு பவுல் கடும் கண்டனம் தெரிவிக்கிறார். பவுல் சொல்கிறார்:
“கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோ ரின் உயிர்த்தெழுதலில்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம். மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்க வில்லையே” (1 கொரி-15:12,13)
ஒரு நபர் சரீர உயிர்த்தெழுதல் இருப்பதை நம்பவில்லை என்றால், அவர் கிறிஸ்தவத்தைப் பற்றி என்ன நினைக்கிறார் என்ற கேள்வி எழுகிறது அல்லவா?
கிறிஸ்தவம் என்பது நல்ல செயல்கள் மற்றும் மறு கன்னத்தைத் திருப்பிக் காட்டுவது போன்ற நல்ல தத்துவம் மட்டுமே அல்ல. இந்த விஷயங்கள் ஒரு நபர், தாம் கிறிஸ்தவராக இருக்கும் போது கடைபிடிக்கவேண்டிய செயல்பாடுகளின் ஒரு பகுதியேயன்றி, அவை கிறிஸ்த்தவத்தின் அடிப்படை அல்ல. கிறிஸ்தவம் அல்லாத பல பிற-மதங்களும், பல பொய்-மதங்களும்கூட நல்ல செயல்களுக்கான அவசியத்தையும், பிறர் மீது காட்டவேண்டிய அக்கறை குறித்து போதிக்கின்றன.
மாறாக, கிறிஸ்தவம் கடவுள் மீதான நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. மேலும், கடவுள் தனது மகன் இயேசு கிறிஸ்துவை பலியாக தந்ததன் மூலம் மனிதகுலத்திற்கு சம்பாதித்த மீட்பின்மீது நம்பிக்கை வைப்பதாகும். இது நல்ல செயல்களைப் பற்றியது அல்ல; மாறாக, ஒரு நபரின் நம்பிக்கை பற்றியதாகும்.
கிறிஸ்த்தவத்தின் அடிப்படையானது, இறந்தவர்களின் உயிர்த்தெழுதலின் மீது உள்ள நம்பிக்கை யாகும். இந்த ஒரு நம்பிக்கை கிறிஸ்தவத்தை மற்ற எல்லா மதங்களிலிருந்தும் பிரிக்கிறது. கிறிஸ்தவர் அல்லாதவர்களில் பெரும்பான்மையோர் சரீர உயிர்த்தெழுதல் இருப்பதாக நம்புவ தில்லை; துரதிர்ஷ்டவசமாக, சில கிறிஸ்தவர்களும் உயிர்த்தெழுதலை நம்புவதில்லை. உயிர்த்தெழுதல் இல்லை என்று கற்பிக்கும் சில பிரசங்கிமார்கூட இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களைத்தான் தூய. பவுல் இங்கே கண்டித்து எழுதுகிறார்.
இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டரில் நாம் இயேசுவின் மரணத்தை நினைவுகூர்கிறோம், அவரது உயிர்த்தெழுதலை அறிக்கையிடுகிறோம். மேலும் இயேசு நமக்காக செய்த தியாகத்தை நினைவுகூர்ந்து அப்பம் பிட்டு, அவரது உயிர்த்தெழுதலை கொண்டாடுகிறோம்.
2. உயிர்த்தெழுதலை நம்பாவிடில் எங்கள் உண்மை-சாட்சி பொய்யாகும்:
உயிர்த்தெழுதலை குறித்து தாங்கள் கண்டதும், கேட்டதுமான சாட்சிகள் அவை இருக்கிறவண்ண மாகவே அங்கீகரிக்கபடித்தக்க உண்மையானவை என்பது பவுலின் கருத்தாகும்.
பவுல் சொல் கிறார்: “கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாச மும் விருதா. மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத
கிறிஸ்துவை அவர் எழுப்பி னாரென்று நாங்கள் தேவனைக் குறித்துச் சாட்சி சொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே. மரித்தோர்
உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்க வில்லை” (1கொரி-15:14,15,16).
உண்மையில் உயிர்த்தெழுதல் இல்லை என்றால், கிறிஸ்தவத்தைப் பிரசங்கிப்பது அர்த்தமற்றது மற்றும் வீண் என்பதைக் காண்கிறோம் (வச-14). உண்மை அல்லாத ஒன்றைப் பற்றி பிரசங்கிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை, எனவே அதைச் செய்பவர்கள் தங்கள் நேரத்தையும் முயற்சியை யும் வீணாக்குகிறார்கள். உயிர்த்தெழுதல் இல்லை என்று அவர்கள் நம்பினால், உண்மையான தல்லாத ஒன்றைப் பிரசங்கிப்பதில் முயற்சியையும் சக்தியையும் வீணாக்குவதற்குப் பதிலாக அவர்கள் வேறு ஏதாவது செய்யலாம்.
மேலும், உயிர்த்தெழுதல் இல்லை என்றால், நாம் சொல்வது வீண் மட்டுமல்ல, அது, கடவுளை நாம் தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதும் ஆகும். கடவுள், கிறிஸ்துவை எழுப்பினார் என்றும் நியாயத்தீர்ப்பு நாளில் மனுக்குலத்தார் அனை வரையும் உயிரோடெழுப்புவார் என்றும் நாம் கூறுகிறோம். உயிர்த்தெழுதல் இல்லை என்று நாம் கூறினால், கடவுள் செய்யாத ஒன்றை அவர் செய்தார் என்று கூறுவதன் மூலம், நாம் அவரைப் பொய்யர் ஆக்குகிறோம் அல்லவா?
உயிர்த்தெழுதலை நம்பாத கிறிஸ்தவர்களுக்கு, மற்றொருபடியாக, அவர்கள் கடவுளையும் இயேசு கிறிஸ்துவையும் நிராகரிக்கிறார்கள், ஏனெனில், கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் கிறிஸ்தவத்தின் மையத்தை பிரதிபலிக்கும் அவர்கள் கிறிஸ்தவத்தை நிராகரிக்கும்போது இயேசு கிறிஸ்துவின் உண்மையை நம்பாமல், பொய்யையே நம்புகிறார்கள்.
கிறிஸ்து எழுந்திருக்காவிடில் கிறிஸ்தவ மதம் (விசுவாசம்) செத்தது:
உயிர்த்தெழுதல் இல்லாவிட்டால் கிறிஸ்தவ மதம் இறந்துவிடுகிறது என்பதைக் காண்கிறோம். உயிர்த்தெழுதல் என்பது கிறிஸ்தவத்தின் மையநம்பிக்கை, அதுவல்லாமல் கிறிஸ்தவ விசுவாசம் இல்லை.
இந்தப் பிரிவின் கடைசி சில வசனங்களில் பவுல் இந்தக் கருத்தை பின்வருமாறு வலியுறுத்துகிறார்:
“கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள். கிறிஸ்துவுக்குள் நித்திரை அடைந்த வர்களும் கெட்டிருப்பார்களே. இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத் தக்கவர்களாயிருப்போம்” (1கொரி-15:17,18,19)
பவுல் கூற வரும் கருத்து என்னவென்றால், உயிர்த்தெழுதல் இல்லாவிட்டால், நாம் நம்பும் அனைத்தும் பயனற்றது மற்றும் வீண். ஏன்?... ஏனென்றால், கிறிஸ்தவர்களாகிய நாம் நம்பும் அனைத்தும், விசுவாசத்தின் மீது, குறிப்பாக கடவுளால் செயல்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் பற்றிய விசுவாசத்தின் மீது சார்ந்துள்ளது.
கிறிஸ்து உயிர்த்தெழுப்பப்படவில்லை என்றால், நாம் இன்னும் நம் பாவங்களில் இருக்கிறோம் என்பதாக பவுல் சொல்லுகிறார் (1கொரி-15:17)
கிறிஸ்து உயிர்த்தெழுந்ததால்தான், நாம் பாவத்திலிருந்தும், நியாயப்பிரமாண சட்டத்திலிருந்தும், மரணத்தில் இருந்தும் விடுதலை பெற்றுள்ளோம்.
ஏற்கனவே நம்பிக்கையின்றி இறந்துபோன அனைவரும் உயிர்த்தெழுதல் இல்லை யென்றால் நித்தியமாக அழிந்திருப்பார்கள் என்பதை பவுல் 1கொரி-15:18ல் விளக்குகிறார். கிறிஸ்துவின் மூலம் நாம் விசுவாசிகளின் உயிர்த்தெழுதல் இன்னும் வரவிருக்கும் நித்திய ஜீவனுக்கு உண்டு என்று நம்புவதால் அவர் இதைச் சொல்கிறார். ஆனால் உயிர்த்தெழுதல் இல்லையென்றால், அது ஒரு பயனற்ற நம்பிக்கையாக இருக்கும்.
உயிர்த்தெழுதல் இல்லையென்றால், இன்று உயிருடன் இருக்கும் கிறிஸ்தவர் களான நாமும்கூட எல்லா மனிதர்களையும் விட பரிதாபத்திற்குறியவர்களாவோம் என்று பவுல் கூறுகிறார் (1கொரி-15:19), ஏனென்றால் நாம் பொய்யான ஒன்றை நம்புகிறோம். உயிர்த்தெழுதல் இல்லையென்றால் நம்பிக்கையற்ற ஒன்றை நம்பியிருந்திருப்போம். உயிர்த்தெழுதல் இல்லாதிருந்தால், கிறிஸ்தவர் களாக நாம் போராட்டங்கள் மற்றும் துன்பங்களை சந்தித்து சகிப்பதைவிட கிறிஸ்துவை மறுதலித்து உலக வாழ்வை அனுபவித்து மகிழ்ந்திருந்திருக்கலாம்.
4. கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் குறித்த நமது பற்றுறுதி (விசுவாசம்):
கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று நாம் நம்புகிறோம், அதை நாம் நன்கு அறிவோம். கடவுளின் அனைத்து வாக்குறுதிகளும் அவரில் நிறைவேற்றப்படுகின்றன
என்று நாம் நம்புகிறோம். கிறிஸ்துவுக்குள் நித்திய ஜீவனுடன் நாமும் உயிர்த்தெழுப்பப்படுவோம் என்பதை யும் நாம் நம்புகிறோம். நாம் பெற்றிருக்கிற கடவுளின் வாக்குறுதிகள்
அனைத்தும் இயேசு கிறிஸ்துவின் மூலம் நமக்கு நிறைவேறும் என்றும் நாம் நம்புகிறோம்.
பிரிய விசுவாசிகளே! கிறிஸ்தவத்தில் உள்ள பற்றுறுதிகள் அனைத்தும் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை அடித்தளமாகக் கொண்டுள்ளன. எனவே, உயிர்த்தெழுதலே கிறிஸ்தவத்தின் அஸ்திபாரம். உயிர்த்தெழுதல் இல்லையேல், கிறிஸ்தவம் இல்லை. இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதை நாம் நன்கு அறிந்திருப்பதால், அவருடைய இரட்சிப்புக்காக எதிர்நோக்குடன் காத்திருப்போம். கர்த்தர் உங்களை ஆசீர்;வதிப்பாராக. அனைவருக்கும் ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள்
அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா
அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா,
ஆயர் மற்றும் உழிய இயக்குநர்,
நற்செய்தி வேதாகம அச்சுப்பதிவு ஊழியங்கள்,
சாலிகிராமம், சென்னை. தென்னிந்தியா.