March 2026
தபசு காலம்: சிறப்பு தேவசெய்தி...

மனந்திரும்புதல் என்பது மீண்டும் வாழத் தொடங்குதல்

REPENTENCE IMPLIES BEGINNING TO LIVE AGAIN
Rev. S.J.D. Dharmaraja

இயேசு கிறிஸ்துவின் இனிய திருப்பெயரில் அன்புடன் உங்களை வாழ்த்துகிறேன். யோபுவின் புத்தகத்தைப் பலமுறை படித்திருக்கிறோம். யோபு தன் வாழ்வில் போராடுவதையும், தனது நண்பர்களுடன் வாக்குவாதம் செய்வதையும், இறுதியாக அவர் கடவுளை நேருக்குநேர் சந்தித்து மனந்திரும்புவதை நாம் இதில் வாசிக்கிறோம். கடவுளுடனான ஒரு சந்திப்பிற்குப் பிறகு, கடவுள் அவரது செல்வத்தை இரட்டிப்பாக மீட்டுக்கொடுக்கிறார். மேலும் 7 மகன்கள் மற்றும் 3 மகள்கள் கொண்ட மற்றொரு சரியான குடும்பத்தையும் அவருக்குக் கொடுக்கிறார். ஆறுதல் தேறுதலோடு யோபு, இன்னும் 140 ஆண்டுகள் வாழ்கிறார்.

யோபு மீண்டும் பல குழந்தைகளைப் பெற்றிருப்பது நல்லது, எனினும், யோபுவின் மனந்திரும்பு தல் இங்கு முக்கியமானது. அவருடைய மனந்திரும்புதல் என்பது அவர் வாழத் தொடங்கிய புதிய வாழ்வு என்ற புரிதலுடன் இம்மாதத்தின் தபசுகால தியானத்துக்கு அழைக்கப்படுகிறோம்.

இழந்த உறவுகளுக்காக ஈடுசெய்ய முடியாது:

யோபு, தன் 10பிள்ளைகளை பறிகொடுத்த ‘புயல் நினைவு நாளை’ சோகத்துடன் நினைவுகூர்ந்திருப்பார் என்பது திண்ணம். யோபு தன் வாழ்நாள் முழுவதும் தனது குழந்தை களின் மரணத்திற்காக துக்கம் அனுசரித்தார் என்று இறையியல் அறிஞர்கள் கூறுகின்றனர். நாம் இழந்துபோகும் நம் குடும்பத்துக்காக எவரும், ஒருபோதும், எந்த ஈடும் செய்ய முடியாது என்பதை யோபுவின் இந்த துக்கம் காட்டுகிறது. இந்த வாழ்க்கையில் நம் அனைவருக்கும், துக்கம் ஒரு நிலையானது. நாம் ஒரு குழந்தையை இழந்திருந்தாலோ, வாழ்க்கைத் துணையை இழந்திருந்தாலோ அல்லது பெற்றோரை இழந்திருந்தாலோ மாத்திரமே யோபுவின் துக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும். வாழ்வின் அதிக்கப்படியான துக்கத்திற்கான குரலை யோபு பின்வரு மாறு கொடுக்கிறார். “ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும், சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான். ஒரு பூவைப் போல பூத்து அறுப்புண்கிறான்; நிழலைப் போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான்.” (யோபு.14:1,2) ஆயினும், துக்கம் என்பது ஒரு கதையின் முடிவு அல்ல. துக்கத்துக்கு ஒரு பயனுள்ள நோக்கம் உண்டு. அது என்னவெனில், துக்கம் என்பது நாம் இழந்தவர்களிடம் நம் இதயங்கள் ‘தொடர்ந்து நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று சொல்ல உதவுகின்றன. துக்கம் என்பது நம்பிக்கைக்கு நம் இதயத்தைத் திறக்கும் கதவு. எனவே நாம், நம் அன்புக்குரியவர்களை நினைவில் கொள்ளும் போது நித்திய ஜீவனின் நம்பிக்கையையும் உறுதியாகப் பற்றிக் கொள்கிறோம்.

இழப்புக்குப் பிறகு, வாழ்க்கை மீண்டும் தொடங்குகிறது:

ஒருவரை இழந்த பிறகு வாழ்க்கை ஒருபோதும் ஒரே மாதிரியாக இருக்காது என்றாலும், அது மீண்டும் தொடங்குகிறது. யோபு, இறுதியில் பெற்ற 10 குழந்தைகள் அவர் இழந்த குழந்தை களுக்கு ஈடு செய்யாது. இருப்பினும், அவர்கள், யோபு தன் புதிய வாழ்வை மீண்டும் தொடங்குவதற்கான ஒரு ஆசீர்வாதமாக அமைந்தனர். பேராசிரியர் கேத்தரின் ஷிஃபர்டெக்கர் கூறும்போது, “யோபுவின் இழப்புகள் மத்தியில் அவர் மீண்டும் வாழத் தேர்வு செய்கிறார். அவர் அதிக குழந்தைகளைப் பெற்று அவர்களுக்கு ஒரு ஆசீர்வாதமாய் வாழும் தியாகத்தை மனமுவந்து எடுத்துக்கொள்கிறார்.” என்கிறார்.

நாம் இழப்பை அனுபவிக்கும்போது, மரண குழிக்குள் ஊர்ந்து இறக்குவதைத் தேர்வு செய்ய லாம்; அல்லது முன்னேறிச் சென்று ஒரு நல்ல வாழ்க்கையை உருவாக்க, மற்றவர்களுக்கு இரக்கம் காட்டத் தேர்வு செய்யலாம். யோபு, இங்கே, மீண்டும் தொடங்கும் புதிய வாழ்வை எடுத்துக் கொண்டார், மேலும் அவர் இரக்கத்தையும் காட்டினார். யோபு 42:8ல், தன்னை சபித்து நெருக்குதல் செய்த மனிதர்களுக்காக ஜெபித்து பலிகளைச் செலுத்துகிறார். தன்னை அவமானப் படுத்த முயன்றவர்களிடமும் யோபு இரக்கம் காட்டுகிறார்.

யோபு தனது நண்பர்களுக்காக ஜெபித்ததற்காகவே கடவுள் அவரை மீட்டெடுத்தார் என்பது சுவாரஸ்யமாக உள்ளது. நண்பர்களுக்காக அவர் செய்த பரிந்துரைக்காக மாத்திரமே கடவுள் யோபுவை மீட்டெடுக்கவில்லை. மாறாக, கடவுளின் மாறாத இரக்கம் மாத்திரமே யோபுவின் மீட்சிக்கான சான்றாகும்.

இழப்பு நமது மனோபாவத்தை மாற்றுருவாக்குகிறது:

யோபு ஒரு புதிய குடும்பத்தைத் தொடங்கியபோது அவருக்கு மீண்டும் 7 மகன்களும் 3 மகள் களும் இருந்தனர். இருப்பினும், சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்தப் பகுதியில் 7 மகன்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை, ஆனால் அது 3 மகள்களின் பெயர்களைக் கொடுக் கிறது. பழைய ஏற்பாட்டில் சில இடங்களில் மாத்திரமே பெண்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் எனினும், அவர்கள் பெயர்கள் குறிப்பிடப்படுவது அரிது. எனவே, இங்கு யோபு வின் மகள்களின் பெயர்களைக் கொடுப்பது அசாதாரணமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. யோபு தனது மகள்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தினார் என்பதை இந்தப் பெயர்கள் காட்டுகின்றன.

யோபு தனது பின்வாழ்வில், தனது 3 மகள்களுக்கும் பரம்பரைச் சொத்தை வழங்கினார் என்பது சிறப்பான ஒன்று. மகள்களுக்கு பரம்பரைச் சொத்தை வழங்குவது யோபுவின் காலத்தில் (முற்பிதாக்கள் காலத்தில்) இல்லாத ஒன்றாகும். அவர் தன் முன்வாழ்வின் 3 மகள்களுக்கு பரம்பரைச் சொத்தைத்; தரவில்லை . எனவே, அவரைச்சூழ்ந்து வாழ்ந்த மக்களை மாத்திரமின்றி நம்மையும் இது ஆச்சரியப்படுத்துகிறது. யோபு, தன் சமகால சமூக விதிகளை மீறியே இதைச் செய்கிறார். அவரது மகள்களுக்கு இது ஒரு சிறப்பு ஆசீர்வாதம் ஆகும். கடவுளுடனான யோபுவின் சந்திப்பு, அவரது குழந்தைகள் அனைவரும் சமமானவர்கள் என்ற அவரது மாற்றுருவாக்கத்துக்கு வழிவகுத்தது,

கடவுளுடன் நெருங்கிய தொடர்புகொண்ட எவரையும் ஒரு இழப்பு என்பது மாற்றுறுவாக்குகிறது என்பது திண்ணம். உங்கள் குடும்பம், உங்கள் நண்பர்கள் மற்றும் வாழ்வைக்கூட உங்கள் இழப்புகள் மதிப்புமிக்கதாக மாற்றுருவாக்கும்.

மனந்திரும்புதல் என்பது மீண்டும் வாழத்தொடங்குவது:

யோபு கடவுளிடம், “இப்போது, என் கண்களால் உம்மை காண்கிறேன்; ஆகையால், நான் என்னை வெறுக்கிறேன், மனந்திரும்புகிறேன்" என்று கூறினார். முன்னதாக, யோபு கடவுளை அநீதியானவர் என்று குற்றம் சாட்டினார். ஆனால், அவர் கடவுளைச் சந்தித்தபிறகு, “நீர் தேவன், நீர் சர்வவல்லவர், அது எனக்குப் போதும்; நான் கரைந்து மனந்திரும்புகிறேன்.” என்கிறார் கடவுளின் முன்னிலையில் கரைவது என்பது ஒரு கம்பளிப்பூச்சி பட்டாம்பூச்சியாக மாறுவதைப் போன்றது. அது சாதாரண மாற்றமல்ல; மாறாக, கம்பளிப்பூச்சியின் உடல் கரைந்து முதலில் ஒரு திரவ ‘சூப்’ ஆக மாறுகிறது. இந்த சூப்பில் இருந்து ஒரு பட்டாம்பூச்சி வடிவம் பெறுகிறது. யோபுவின் வாழ்வுpலும் இதுதான் நடந்தது. அவர் தன் மனந்திரும்புதல் மூலமாக கரைந்து போனார். மட்டுமல்ல, கடவுளுக்குள் புதுப்பிக்கப்பட்ட வாழ்வில் பட்டாம்பூச்சியாக மாறினார்.

அன்பானவர்களே! நாமும், நம் வாழ்வில் இழப்புகளைச் சந்திக்கும்போது, கடவுளுடனான சந்திப்பின் மூலம் கரைந்து புதியவர்களாக மாற்றுருவாகி. அதன்மூலம் ஆபத்துக்களை துணிவுடன் எதிர்கொண்டு புதுவாழ்வு வாழக் கற்றுக்கொள்வோம்.

கர்த்தர் உங்களை ஆசீர்;வதிப்பாராக. ஆமென்.




அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா, ஆயர் மற்றும் உழிய இயக்குநர்,
நற்செய்தி வேதாகம அச்சுப்பதிவு, சாலிகிராமம், சென்னை. தமிழ்நாடு, தென்னிந்தியா