March 2025
சிறப்பு தேவசெய்தி

லெந்து காலம்

சிலுவையை புரிந்துகொள்வோம்

1 கொரிந்தியர்-1:18

THE LENTEN SEASON
CROSS: A CHRISTIAN INSIGHT
Rev. Samuel Selvakumar

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! இயேசு கிறிஸ்துவின் திருப்பெயராலே உங்கள் யாவரையும வாழ்த்துகிறேன். மனம் திரும்புதலுக்கான அழைப்பை பெற்றுக்கொள்ளவும், ஆண்டவர் இயேசுவின் பாடு மரணத்தைத் தியானிக்கவும், வாய்ப்பாக உள்ள லெந்து காலத்துக்காக கடவுளுக்கு நன்றி சொல்லுகின்றேன்.

லெந்து காலங்களில் சிலுவை தியானத்தை பாரம்பரியமாகக் கொண்டுள்ளோம். ஆனால், மூன்றாம் நான்காம் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் சிலுவையை தங்கள் அடையாளமாக கொள்ளவில்லை. மாறாக. மீன் வடிவத்தை அடையாளமாக பயன்படுத்தினார்கள். கிரேக்கத்திலே மீன், ‘இக்தூஸ்’ (I-CH-TH-U-S) என்று அழைக்கப்படுகிறது. இத்துஸ் என்பதற்கு ‘இயேசு கிறிஸ்து கடவுளின் மைந்தர்; எங்கள் மீட்பர்’ என்பது பொருளாகும். ஆதித் திருச்சபையில் ஒரு ரகசிய கிறிஸ்தவர் இன்னொரு கிறிஸ்தவருக்கு தானும் கிறிஸ்தவர் என்பதை உணர்த்த, தரையிலே பெருவிரலாலே மீன் வடிவத்தை வரைந்து காட்டுவது பாரம்பரியம் ஆகும். கான்ஸ்டன்டைன் பேரரசரின் காலத்துக்குப் பின்னர், கிறிஸ்தவர்கள் சிலுவையை தங்கள் அடையாளமாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

சிலுவை குறித்த சிந்தனைகளும், தியானங்களும் சொகுசு வாழ்க்கை வாழும் அனேகருக்கு விருப்பம் இல்லாத ஒன்றாக இருக்கலாம். ஒருவேளை சிலுவை, கழுத்திலே தொங்கவிடும் அழகு சாதனமாக இருக்கலாம். சிலுவையை தவிர்த்து, ஆசீர்வாதத்தை மாத்திரம் போதிக்கிற சபைகளைத் தேடி இறைமக்கள் இன்று சென்றுகொண்டிருக்கலாம். ஆனால், சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர்களுக்கு பைத்தியமாய் இருக்கிறது; இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாய் இருக்கிறது| (1கொரி-1:18) என திருமறை சொல்லுகிறது. அன்றும் இன்றும், மனந்திரும்புதலையும் இரட்சிப்பையும் விரும்புகின்ற மக்களுக்கு மாற்றுறுவாக்கத்தின் கருவியாக இந்த சிலுவை அமைந்திருக்கிறது.

இரண்டு கோணங்களில் சிலுவையை நாம் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.

கடவுள் பார்வையில் சிலுவை:
கடவுளுடைய பார்வையிலே சிலுவை எத்தகையது? ஏன் சிலுவை தேவை?
Cross is necessary to reveal God’s evaluation of human life:
சிலுவை மனித வாழ்வை மதிப்பீடு செய்யும் கடவுளின் கருவி:
கடவுள் மனித வாழ்வை எவ்வளவு உயர்வானதாக கருதுகிறார் என்பதற்கு சிலுவை ஒரு அடையாளமாக அமைந்திருக்கிறது. ஆண்டவர் இயேசு வாழ்ந்த காலத்திலே மனித உயிர்கள் மதிக்கப்படவில்லை. மனித உயிர்கள் மலிவானதாக எண்ணப்பட்டன. குழந்தைகளை பலியிடுவதும், அடிமைகளை வாங்கி விற்பதும் அதிகரித்திருந்தது. இப்படிப்பட்ட சூழலில் தான் மனித வாழ்வின் உன்னதத்தை சுட்டிக் காட்டுவதற்காக கடவுள் சிலுவையில் தன் உயிரை தியாகம் செய்தார்.

இன்றைக்கும் மனித உயிர்களை மலிவானதாக கருதுகின்ற சூழல் இருந்து கொண்டுதான் இருக்கிறது. மக்களிடையே ஏற்ற தாழ்வுகளை உருவாக்கி, மக்களைப் பிளவுபடுத்தி, அப்பாவி மக்களை கொன்;று குவித்துக் கொண்டிருக் கிறது இவ்வுலகம். ஆனால், இயேசுவின் சிலுவை மனித உயிர்களின் மாண்பு மற்றும் கடவுள் மனுக்குலத்தின்மேல் மீது கொண்டுள்ள அன்பை சுட்டிக்காட்டியது.

செஞ்சிலுவை சங்கத்தினர், சிவப்பு சிலுவையை சுமந்து கொண்டு மாளும் மனித உயிர்களை மீட்க செல்கிற காட்சியை இன்றும் நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். எந்த சிலுவை உயிரை கொல்லுவதற்கு பயன்படுத்தப் பட்டதோ, அதே சிலுவை போர்க்களத்திலே மாண்டு கொண்டிருக்கிற மக்களுக்கு உயிர் கொடுக்கும் கருவியாக செஞ்சிலுவை சங்கத்தாரால் பயன்படுத்தப் படுகிறது. கடவுளின் பார்வையிலே, அன்றும் இன்றும சிலுவை ஒன்றுதான்.

Cross is necessary to reveal god’s estimation of sin:
சிலுவை பாவத்தின் கொடூரத்தை வெளிப்படுத்துவது:
இயேசுவின் சிலுவை பிரதான ஆசாரியர், பரிசேயர், வேதபாரகர், ஏரோது, பிலாத்து, ஆகியேரின் கொடூர பாவங்களை வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டியது. பாவம்தான் இயேசுவை காரித் துப்பியது. பாவம் தான் இயேசுவை தலையில் குட்டியது. பாவம் தான் அவருடைய தலையிலே முள்முடியை சூட்டினது. பாவம் தான் அவரை வாரினால் அடித்து. துடிக்க துடிக்க ஆணிகளை கடாவி சிலுவையில் அறைந்தது. இயேசுவை சிலுவையில் அறைந்தவர்கள் எப்படி தாங்கள் செய்த பாவத்திற்கு பல்வேறு விளக்கங்களை கொடுத்தார்களோ, அதே விளக்கங்களை நாமும் இன்று நம் பாவங்களுக்கு கொடுக்கிறோம். தெரியாமல் செய்து விட்டோம், எங்கள் பலவீனம், எங்கள் பழக்க வழக்கம் என்கிறோம். நாம் என்ன நியாயம் கற்பித்தாலும் பாவம் கொடூரமானதுதான். நாம் செய்கிற பாவங்கள் நம்மை மாத்திரமின்றி அநேகரைப் பாதிக்கிறது. அன்று, பாவமற்ற கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார். இன்றைக்கும் அநேகம் அப்பாவிகள் கொல்லப்படுகிறதை நாம் பார்க்கிறோம். இவர்களும் இயேசுக்களே. தெரிந்தோ தெரியாமலோ வாய் மூடி, மவுனமாய் இருக்கிற நாமும் அதற்கு ஒரு காரணமாய் இருக்கிறோம். அன்றைக்கு ஒரு சிலரின் பாவம் இயேசுவை சிலுவையில் அடித்தது என்று சொல்கின்ற நமது பவங்கள், இன்று அனேகர் கொல்லப்படுவதற்கு காரணமாய் இருபப்பதை நாம் உணராதிருக்கிறோம்.

Cross is necessary to understand the attributes of god’s:
சிலுவை கடவுளின் குணாதிசயங்களை நாம் புரிந்துகொள்ள உதவும் சாதனம்:
1யோவ-4:8ல், கடவுள் அன்பாயிருக்கிறார் என்று நம் வாசிக்கிறோம். கடவுள் தமது ஒரே மகனை அனுப்பி அவருடைய ஜீவனை நமக்கென கொடுத்ததன் வழியாக அவர் நம் மீது அன்பாய் இருக்கிறார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. நாம் பாவிகளாயிருக்கையிலேயே கிறிஸ்து நமக்காக மரித்தார். நாம் மனம் மாறுவோமோ? மாட்டோமோ? என்பதுகூட அவருக்கு தெரியாது. ஆனாலும் கிறிஸ்து நமக்காக மரித்தார். தாய் அன்புள்ளவள் என்பதை நாம் எப்படி சொல்லுகிறோம்? தன்னுடைய உதிரத்தால் நமக்கு உயிர் கொடுக்கிறார். பிறந்த பிறகும் தமது உதிரத்தையே அமுதாக ஊட்டுகிறார். எனவே தாய் அன்புள்ளவள். ஆண்டவர் அன்புள்ளவர் ஏனென்றால் தன்னுடைய உயிரையே நமக்காக சிலுவையில் கொடுத்தார். இந்த சிலுவை இல்லாமல் இந்த அன்பின் ஆழத்தை நம்மால் புரிந்து கொண்டிருக்கவே முடியாது.
மனிதர் பார்வையில் சிலுவை:
மனிதருடைய பார்வையிலே சிலுவைஎத்தகையது? ஏன் சிலுவை தேவை?

Cross is a challenge or a counter argument before our Sinful hearts:
சிலுவை நம் பாவமுள்ள இருதயத்தைக் கேள்வி கேட்கும் சக்தி:
சுpலுவை என்று ஒன்று இல்லாதிருந்தால் நம்முடைய பாவத்திற்கு எதிர் கேள்வி என்றே ஒன்று இருந்திருக்காது. ஆண்டவருடைய சிலுவை என்று ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் நாம் இன்னும் பாவத்திலேயே மூழ்கி போயிருந்திருப்போம். இந்த சிலுவைதான் நம்மையும் நம்முடைய நடத்தையையும், நம்முடைய சிந்தனையையும், நம்முடைய வாழ்வு முறையையும் எதிர்த்து கேள்வி கேட்கிறது. எனவே, சிலுவை மனிதருக்கு அவசியமான ஒன்றாகும். இயேசு கொலை செய்யப்பட்டார், இயேசுவின் சீடர்கள் கொலை செய்யப்பட்டனர், கோடிக்கணக்காக ரத்தசாட்சிகள் கொல்லப்பட்டனர். இன்றைக்கும் அநியாயமாய் கொல்லப்படுகிற குழந்தைகள், எளியோர்கள், ஏழை விவசாயிகள், ஏழைத் தொழிலாளர்கள் ஏராளம் ஏராளம். இத்தகைய அநீதிகள் நடந்து கொண்டிருக்கும் போது இவற்றை குறித்து எந்த சிந்தனையும் இல்லாமல் இருக்கிறாயே? இந்த கொலைகள், இந்த அநீதியெல்லாம் உன் கண்களுக்குத் தெரியவில்லையா? அதுகுறித்து உனக்கு அக்கறையே இல்லையா? இது நியாயமா? என்ற கேள்விகளை சிலுவைதான் நமக்கு முன் வைக்கிறது. இந்த கேள்வியை கேட்கக்கூடிய தகுதி சிலுவைக்கு மட்டுமே உண்டு.

நீங்கள் பக்தி என்று சொல்லி எதை எதையோ செய்து கொண்டிருக்கிறீர்கள். நான் உண்டு என் வேலை உண்டு, நான் உண்டு என் குடும்பம் உண்டு, நான் உண்டு என் சபை உண்டு, என்று போலியான பயனற்ற பக்தியை கொண்டாடிக் கொண்டிருக்கிற உங்களுடைய பக்தி குறைவுள்ளது அது போலியானது என்று சிலுவை சொல்லுகிறது. நல்ல சமாரியன் நிகழ்வும் அதைத்தான் நமக்கு கற்பிக்கின்றது. ஒருவன் குற்றுயிராக கிடக்கிறபோது பக்தி வேடம் அணிந்தோர் பக்கமாய் விலகிப் போயினர்; தீண்டத்தகாதவர் எனப் பட்ட சமாரியன்தான் அவருடைய காயங்களுக்கு மருந்து கொடுத்தார். எனவே, கடவுள் பக்தியை காரணம் காட்டி கூட மனிதருக்கு செய்ய வேண்டிய நன்மையை நாம் செய்யாமல் இருக்கக் கூடாது. இயேசு நமக்காகச் சிலுவையில் மரித்து நமக்காக இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறாரே, நாமும் பிறருக்காக வாழ வேண்டாமா? எனவே, நமக்கிருக்கும் தனிப்பட்ட பாரங்கள், உடலளவிலான உபாதைகள், சோர்வுகள் பயங்கள், கலக்கங்கள் எல்லாம்வற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு நமக்கானவைகளை அல்லாமல் பிறருக்கானவை களை நோக்கத் தொடங்குவோம். ஏனென்றால் நமக்கு முன்பாக எப்போதும் நின்று கொண்டிருக்கும் சிலுவையின் கேள்விகள் தடைகளைத் தகர்த்து போடுகின்றன.

Cross is the only instrument that has power to transform our life:
சிலுவை நம் வாழ்வை மாற்றக்கூடிய வல்லமையை பெற்றிருக்கிறது:
ஆண்டவர் இவ்வுலகில் பிறக்காமல் இருந்திருந்தால், அவர் சிலுவையில் மரித்து உயிரோடு எழும்பாமல் இருந்திருந்தால், நிச்சயம் கிறிஸ்தவமும் இருந்திருக்காது. கிறித்தவம் இல்லாது போயிருந்தால் ஆண்டவருடைய அன்பை நம்மால் புரிந்து கொண்டிருக்க முடியாது. இப்போது. நூம் சிறிதளவாவது நம்முடைய பாவ வாழ்வை விட்டு மாறி இருக்கிறோம் என்றால், அதற்கு ஒரே ஒரு காரணம் இயேசுவின் சிலுவையே. சிலுவை அனேக கோடிக்கணக்கான மக்களை மாற்றி லட்சக்கணக்கான ஊழியக்காரர்களை உருவாக்கி இருக்கிறது. நம்மையும் மாற்றுவதற்கு ஆண்டவர் தெரிந்து கொண்ட ஒரே வழி சிலுவை வழிதான். இன்றைக்கு நம்மை மாற்றி நம்மை தியாக வாழ்வுக்கு அழைத்துச் செல்ல சிலுவையால் மாத்திரமே முடியும். இரண்டு கோணங்களிலே சிலுவை குறித்து நாம் தியானத்து இருக்கிறோம். முதலாவது கோணம் கடவுளுடைய பார்வையிலே சிலுவை எத்தகையது? ஏன் அவசியமானது? என்பது. இரண்டாவது கோணம், மனிதர்களுடைய பார்வையிலே சிலுவைஏ எத்தகையது? ஏன் அவசியமானது? என்பது. இவ்விரண்டும் இந்த லெந்து காலங்களிலே நம்மை வழி நடத்துகிற புதிய கண்ணோட்டங்களாக அமைந்திட நான் உங்களை வாழ்த்துகிறேன்
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக


அருட்திரு. சாமுவேல் செல்வகுமார்



அருட்திரு. சாமுவேல் செல்வகுமார்,
ஆயர் மற்றும் தலைவர், சி.எஸ்.ஐ. பாலவாக்கம் குருசேகரம் (சென்னைப் பேராயம்),
திருவள்ளுர் மாவட்டம், தென்னிந்தியா.