February 2026
தபசு காலம்: சிறப்பு தேவசெய்தி...

எஸ்தரின் உபவாசம்

கடவுளுடனான புதுப்பிக்கப்பட்ட தொடர்பு
ESTHER’S FASTING: THE RENEWED COMMUNE WITH GOD
Rev. S.J.D. Dharmaraja

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய திருப்பெயரில் அன்போடு உங்களை வாழ்த்துகிறேன். மீண்டும் ஒரு லெந்து காலத்தை இம்மாதம் 18ம் தேதியான சாம்பல் புதன் அன்று துவக்கும் வேளையில், எஸ்தர் ராஜாத்தியின் உபவாசத்தை மையமாகக்கொண்ட தியானத்துடன் கடவுளுடனான நம் தொடர்பை புதுப்பித்துக்கொள்வோம்.

பிரசங்க வாக்கியம்:

“நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச் செய்து, மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம் பண்ணுங்கள்; நானும் என் தாதி மாரும் உபவாசம் பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிர வேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன்.” எஸ்.4:16

தெளிவான நோக்கத்தைக்கொண்ட உபவாசம்: (சங்.1:1)

நீங்கள் எப்போது சாப்பிடாமலும் நீர் அருந்தாமலும் இருக்க வேண்டியிருந்தது? ஒருவேளை நீங்கள் ஒரு மருத்துவ ஆய்வு சோதனைக்கு முன்போ அல்லது ஒரு அறுவை சிகிச்சைக்கு முன்போ அவ்வாறு இருக்க வேண்டியிருக்கலாம். ஒருவேளை நீங்கள் எடைகுறைப்புக்காக உபவாசம் இருந்திருக்கலாம். இன்னும் பல்வேறு நடைமுறை காரணங்கள் இருந்திருக்கலாம். நாம் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக அவ்வாறு உணவையும் தண்ணீரையும் துறந்திருக்க லாம். அவ்வண்ணமாகவே நம் ஆவிக்குறிய பற்றுறுதியில், உபவாசம் என்பது பல்வேறு சிறப்பான நோக்கங்களைக் கொண்டுள்ளது. சிலர் கடவுளிடமிருந்து வழிகாட்டுதலைத் தேடும் போது உபவாசம் இருக்கிறார்கள். சிலர் துக்க நாட்களைக் கடைபிடிக்கும் செயல்முறையின் ஒரு பகுதியாக உபவாசம் செய்கிறார்கள். சிலர் மனந்திரும்புதலில் அல்லது எல்லாம்வல்ல கடவுளுக்கு முன் தங்களைத் தாழ்த்தும்படி உபவாசம் செய்கிறார்கள். காரணம் எதுவாயினும், உபவாசத்தின் ஒவ்வொரு செயலும் இறுதியில் ஒரு நோக்கத்தைக் கொண்டுள்ளது.

எஸ்தர் ராஜாத்தியைக் குறித்து நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். எஸ்தர் ராஜாத்தி எஸ்.4:16,17 வசனங்களில் தன் சகோதரனாகிய மெர்தேகாய்க்கு அனுப்புகிற செய்தியானது, குறிப்பிட்ட நோக்கத்திற்கான ஒரு உபவாசத்தையே சுட்டிக்காட்டுகிறது. ஆமானின் தீய சதித் திட்டத்தையும், அதைத் தொடர்ந்து போடப்பட்ட அகாஸ்வேரு அரசனின் அரசாணையையும் எஸ்தர் ராஜாத்தி மற்றும் சிறையிருப்பின் யூதர்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதையும் நாம் வேதாகமத்தில், எஸ்தரின் சரித்திரத்தில் படிக்கிறோம். மிகவும் நெருக்கடியான காலகட்டத் தில் கடவுளுடனான தனது தொடர்பை புதுப்பித்துக்கொள்ளவும், மக்களின் இக்கட்டான நிலையை கடவுளுக்குத் தெரியப்படுத்தவும், தன் இன மக்களுக்கு விடுதலையை கோரவும் அவள் உபவாசம் இருந்ததாக வேதம் (எஸ்.4:15-16) சொல்கிறது. உபவாசம் மற்றும் பிரார்த்தனை மூலம், இக்கட்டான சூழ்நிலையில் உதவிபெற்றிட, சர்வவல்லவரின் வல்லமை மீது நம்பிக்கை கொள்வது மட்டுமல்ல, அவருடைய சித்தத்துக்கு தன்னை அர்ப்பணித்து, தன்னைத் தாழ்த்திக் கொள்கிறாள். அந்த தாழ்மை நிறைந்த அர்ப்பணிப்பின் வெளிப்பாடு தான் இந்த வசனத்தில் நம் மனதை அழுத்தமாதகத் தொடும் ‘நான் செத்தாலும் சாகிறேன்’ என்கிற கடைசி வரி. பற்றுறுதி நிறைந்த உபவாசமும் ஜெபமும் மட்டுமே கடவுளுடனான தங்கள் உறவை புதுப்பித்து, விடுதலையை உறுதிசெய்யும் என்பதை எஸ்தர் அறிந்திருந்தார். உபவாசமும் ஜெபமும் சர்வவல்ல கடவுள் மீதான உள்ளார்ந்த நம்பிக்கையின் வெளிப்புற வெளிப்பாடுகள் மாத்திரமே; எனினும், கடவுளின் திருவுளச்சித்தமே விடுதலை தரும் என்பதை யும் அறிந்திருந்ததாலேயே எஸ்தர் ராஜாத்தி இவ்வாறு சொல்கிறார். இந்த தபசு காலத்தில் நமது உபவாசம் எத்தகைய நோக்கத்தைக் கொண்டிருக்கிறது?

சாதாரண விடுதலை அல்ல - மேலதிக விடுதலை அளித்த உபவாசம்:

எஸ்தரின் உபவாசம் யூத மக்களின் விடுதலைக்கு வழிவகுத்தது, அது எஸ்தர் விரும்பிய சாதாரண விடுதலையை அல்ல, ஒரு மேலதிக விடுதலையை வழங்கியது என எஸ்.8:8, எஸ்.8:12 வசனங்கள் சொல்லுகின்றன. அகாஸ்வேரு அரசன் சொல்கிறார், “உங்களுக்கு இஷ்ட மானபடி நீங்கள் ராஜாவின் நாமத்தில் யூதருக்காக எழுதி, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடுங்கள்.” என்பதே ஆசீர்வாதத்துடன் கூடிய அந்த மேலதிக விடுதலை.

ராஜாவின் புதிய ஆணை யூதர்களுக்கு வேறுபல நன்மைகளை வழங்கியதை வசனம் 12 விவரிக்கிறது, “யூதர் ஒன்றாய்ச் சேர்ந்து, தங்கள் பிராணனைக் காப்பாற்றவும், தங்களை விரோதிக்கும் சத்துருக்களாகிய எல்லாரையும், அவர்கள் குழந்தைகளையும் ஸ்திரீகளையும் நிர்மூலமாக்கவும், அவர்கள் உடைமைகளைக் கொள்ளையிடவும் ராஜா யூதருக்குக் கட்டளை யிட்டார்.” இவ்வாறு எஸ்தர் ராஜாத்தியின் உபவாசமானது எதிர்பார்த்த நோக்கங்களை நிறைவேற்றியதோடு மேலதிக ஆசீர்வாதங்களாக யூதர்-ஒற்றுமை, சத்துருக்கள்-அழிவு, கொள்ளை பொருள்-நிறைவு ஆகியவற்றை பெற்றுத்தந்தது. இந்த லெந்து காலத்தில், உபவாச ஜெபத்தின் மூலம் மேலதிக ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள உங்களை வாழ்த்துகிறேன்.

வரையறைக்கு அப்பாற்பட்ட உபவாசம்:
எஸ்தர்-உபவாசம் வாயிலாக சில முக்கிய விஷயங்களை அறிந்துகொள்வோம். முதலாவதாக, உபவாசத்திற்கு குறிப்பிட்ட ‘ரைம்-ரிதம்’ (வரையறை) இருக்கவேண்டிய அவசியமில்லை. சூசாவில் எஸ்தரும் யூதர்களும் 3 நாட்கள் உபவாசம் இருந்து ஜெபித்தார்கள், தாவீது ராஜா தனது மகனின் சுகவீனத்தின் போது 7 நாட்கள் உபவாசம் இருந்தார். மட்டுமல்ல மோசே, எலியா, இயேசு 40 நாட்கள் உபவாசம் இருந்தார்கள் என நாம் வாசிக்கிறோம். எனவே, உபவாசச் செயலை வரையறுக்க எந்த விதிகளும் இல்லை; ஆனால் உபவாச ஜெபமானது, நமது விசுவாச உறுதியின் வழியாய் கடவுளுடனான நமது தொடர்பை புதுப்பித்து, இன்னும் அதிகமாக நாம் கடவுளை நெருங்கிச்சேர நம்மை வழிநடத்தும் உன்னத நோக்கத்தைக் கொண்டுள்ளது.

இரண்டாவதாக, நாம் உபவாசம் இருந்து ஜெபிக்கும்போது நாம் விரும்பும் பதில் கிடைக்காவிட்டாலும், கர்த்தர் நம்மை கைவிட்டு விடுவதில்லை. வாழ்க்கையின் தடைகளைத் தாண்டுவதற்கான கருவிகள் மற்றும் வழிமுறைகளை அவர் வழங்குகிறார். பல நேரங்களில் உபவாச ஜெபத்திற்கான பதிலானது, ஒரு பிரச்சினைக்கான தீர்வாகவோ அல்லது பாடுகளை அவமானங்களை எதிர்கொள்வதற்கான சக்தியாகவோ அல்லது வேறு வழியிலான ஒரு ஆசீர்வாதமாகவோ இருக்கலாம். எப்படியாயினும், நாம் கிறிஸ்துவைச் சார்ந்திருக்கும்போது விளைவுகளைக் குறித்துக் கவலைப்படாமல்,, ‘கடவுள் நமக்காக இருக்கிறார்’ என்ற உண்மையான பற்றுறுதியைப் பெறமுடியும்.

அன்பானவர்களே! உபவாசமானது விசுவாசம் மற்றும் ஆவிக்குறிய பலத்தை அதிகரிக்கவும், நம்மை மிகவும் நேசிக்கும் கடவுளுடனான நமது தொடர்பை புதுப்பிக்கவும் உதவுகிறது. ஒருவேளை, எஸ்தரைப் போலவே, நாமும் இதுபோன்ற ஒரு நோக்கத்திற்காகப் படைக்கப் பட்டிருக்கலாம். உங்களுடைய உபவாசத்தின்போது, கடவுளுடனான உங்கள் தனிப்பட்ட தொடர்பின் நோக்கம் என்னவாக இருக்கிறது? உபவாசம் மற்றும் ஜெபத்தின் மூலம் நல்ல ஆண்டவர் உங்கள் வாழ்வில் எப்படிப்பட்ட விடுதலையை, வெற்றியை அளித்தார்? என்பதை உங்களுடன் வாழும் மக்களோடு பகிர்ந்துகொண்டு அவர்களுக்கு ஊக்கம் அளியுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.




அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா, ஆயர் மற்றும் உழிய இயக்குநர்,
நற்செய்தி வேதாகம அச்சுப்பதிவு, சாலிகிராமம், சென்னை. தமிழ்நாடு, தென்னிந்தியா