February 2025
சிறப்பு தேவசெய்தி

சமவெளியின் தேவசெய்தி

சமூகநீதிக்கான நற்செய்தி

லூக்கா 6:17-49

THE SERMON ON THE PLAIN
A GOSPEL OF SOCIAL JUSTICE
Rev. S.J.D. Dharmaraja

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய திருப்பெயரில் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள். 2025ம் ஆண்டு பிப்.20ம் நாள் ‘உலக சமூகநீதி தினம்’ என அனுசரிக்கப்படுவதாலும், பிப்.16ம் நாளுக்கான கிறிஸ்தவ வழிபாட்டு நாட்காட்டி, லூக்.6:17-49 வேதபகுதியை முன்னிலைப் படுத்துவதாலும் இயேசு வின் ‘சமவெளிப் பிரசங்கம்’ குறித்து தியானிக்க அழைக்கப்படுகிறோம்

மலைப்பிரசங்கமும் சமவெளி-பிரசங்கமும்: மலைப்பிரசங்கம் (மத்-5,6,7), 2000ஆண்டுகளாக கிறிஸ்தவ விசுவாச ஊட்டச்சத்தாக திகழ்ந்தபோதிலும், அது எப்போதும் புத்தம்-புதியதாகவும் காணப்படுகிறது. 111 வசனங்கள் கொண்ட மலைப்பிரசங்கம் மக்களுக்குள் ஏற்படுத்தியுள்ள தாக்கம் அளவிட முடியாதது. சமவெளிப்பிரசங்கம் என்பது (லூக் 6:17-49) மலைப்பிரசங்கத்தின் ‘லூக்காவின் பதிப்பு’ என அனேகர் அழைப்பார்கள். ஆனாலும், சமவெளிப் பிரசங்கம் வேறுபட்ட இறையியலை தன்னகத்தே கொண்டது என்பதே உண்மை. சமவெளிப் பிரசங்கம், மலைப் பிரசங்கத்தின் நீளத்தில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இருந்தாலும், மலைப் பிரசங்கத்தைவிட மதிப்புமிக்க பாடங்களை வழங்குகிறது. ஆனால், நாமோ, இது மலைப் பிரசங்கத்தின் ‘லூக்காவின் பதிப்பு’ என்று முத்திரை குத்தி, சமவெளிப் பிரசங்கத்தை படிக்கவும், ஆராய்ந்தறியவும் தவறுகிறோம்.

லூக்கா நற்செய்தியில் சமூக-நீதி: மத்தேயு நற்செய்தி நூல் போலல்லாது லூக்கா, உயரடுக்கு மக்களுக்கு மட்டுமல்லாமல், மனுக்குலம் அனைத்துக்குமான தொடர்பைக் குறிக்கிறது. உதாரண மாக, லூக்காவில், மரியாள், சகரியா, மேய்ப்பர்கள் போன்ற சாதாரண மக்களுக்கு தேவதூதர்கள் காட்சியளிக்கிறார்கள்; மிக முக்கியமாக, பெண்களுக்கு காட்சியளித்தனர் (ஆண்களுக்கு மட்டுமே தேவதூதர்கள் காட்சியளித்ததாக மத்தேயு கூறுகிறார்). கிழக்கிலிருந்து வந்த மேல்தட்டு ஞானி களை மத்தேயு குறிப்பிட, லூக்காவோ சிமியோன், அன்னாள் போன்ற சமூக அந்தஸ்து இல்லாத நபர்களை குறிப்பிடுகிறார். மேலும் லூக்கா, ஏசாயா 61-ல் உள்ள பகுதிகளை இயேசு தம் சொந்த ஊரான நாசரேத் ஜெபாலயத்தில் வாசிப்பதாக பதிவு செய்துளார்; அவர் வாசிக்கும் வசனங்கள் மற்றும் அவருடைய ஊழியத்தின் கவனம் ஏழைகள், இதயம் உடைந்தவர்கள், சிறைபிடிக்கப்பட்டவர்கள், பார்வையற்றவர்கள் மற்றும் கட்டப்பட்டவர்கள் ஆகியோரின் மீதிருந்தது எனவும் லூக்கா கூறுகிறார். (நாசரேத் பிரகடனம்: லூக் 4:18-21). மொத்தத்தில், லூக்கா நற்செய்தியில், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு, வாழ்வின் விளிம்பில் இருக்கும் மக்களுடன் இயேசு மிக நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளார்,

சமவெளி பிரசங்கத்தின் பார்வையாளர்கள்: லூக்கா, “பின்பு இயேசு அவர்களுடனேகூட இறங்கி, சமனான ஒரு இடத்திலே நின்றார்.” (லூக்-6:17) எனத் தொடங்குகிறார். முன்னதாக, இயேசு இரவு முழுவதும் ஒரு மலையில் ஜெபித்தார் (லூக்-6:12) என்றும், பிரசங்கத்திற்காக அவர் சமவெளிக்கு இறங்கி வந்தார் என்றும் லூக்கா எழுதுகிறார். இது முக்கியத்துவம் வாய்ந்த செய்தி. இந்த செயலில், இயேசு தனது ஆன்மீக பணியை சரீரப்பிரகாரமாக செயல்படுத்துகிறார். அவர் மக்களிடம் சென்று அவர்கள் நிற்கும் அதே மட்டத்தில் நிற்கிறார். அவர் அவர்களுக்கு கற்பிக்கி றார், ஆனால் அவர் அவர்களுக்கு மேல் அல்லாமல், மக்களோடு மக்களாக இருக்கிறார். இயேசு வின் பிரசங்கத்தைக் கேட்டவர்கள் சாதாரண-சாமானிய மக்கள்; அவர்கள் யூதேயா மற்றும் எருசலேமில் இருந்து வந்தவர்கள் என்றும், தீரு மற்றும் சீதோன் போன்ற யூதர்கள் அல்லாத பகுதிகளில் இருந்து வந்தவர்கள் (லூக்-6:17) என்றும் லூக்கா பதிவுசெய்கிறார்.

சமவெளி பிரசங்கம் ஒரு சமூக-நீதி பிரசங்கம்: சமவெளிப் பிரசங்கமானது ஏழைகள் மற்றும் புறக்கணிக்கப்பட்டவர்கள் மீதான இயேசுவின் அக்கறையை பிரதிபலிக்கிறது. இங்கே, ‘ஆவியில் எளிமை’ ‘நீதியின் மேல் பசி-தாகம்’ என்ற மலைப்பிரசங்கம் போலல்லாமல் இயேசு, பொருளாதார ரீதியான ஏழைகள் மற்றும் உடல் ரீதியான பசி-பட்டினியில் இருப்பவர்கள் மீது கவனம் செலுத்து கிறார். இயேசு சொல்கிறார்: “ஏழைகளே..! நீங்கள் பாக்கியவான்கள், ஏனென்றால் கடவுளுடைய ராஜ்யம் உங்களுடையது. இப்பொழுது பசியோடு இருக்கிற நீங்கள் பாக்கியவான்கள்: நீங்கள் திருப்தியடைவீர்கள்" (லூக் 6:20-21).

இயேசுவின் சமவெளிப் பிரசங்கம், அன்றும் இன்றும் சமூகத்தில் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விடுதலை அளிப்பதாகும். ஏழை மக்களின் உடல் தேவைகளை நிவர்த்தி செய்வது இயேசுவின் முதன்மையான கவலைகளில் ஒன்றாகும் என்றும், மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் ஆன்மீக இரட்சிப்பிற்கும் இடையே கடினமான வேறுபாடு இல்லை என்ற கருத்தைத் சமவெளி-பிரசங்கம் உணர்த்துகிறது. சமவெளி பிரசங்கத்தில் இயேசு கூறுகிறார்: “ஐசுவரியவான்களே உங்களுக்கு ஐயோ! ஏனென்றால், உங்கள் ஆறுதல் இதோடு முடிந்தது, நிறைவான உங்களுக்கு ஐயோ! ஏனெனில் நீங்கள் இனி பசியோடு இருப்பீர்கள்; இப்போது சிரிக்கிற நீங்கள் இனி துக்கப்பட்டு அழுவீர்கள்” (லூக் 6:24-25). உண்மையில், லூக்காவின் செய்தி, தலைகீழ் மாற்றங்களைச் சொல்லும் நற்செய்தியாகும். ஏழைகளும் பசியுள்ளவர்களும் இயேசுவின் கவனத்தையும் வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்களையும் பெறுகிற அதேசமயம், வசதியாகவும் நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் வாழும் மேல்தட்டு வர்க்கத்தினர் மீண்டும், ஏழ்மை, பசி, துக்கம் அடைவார்கள் எனவும், தாம் இதையே செய்ய வந்ததாகவும் இயேசு சொல்வதாக லூக்கா எழுதுகிறார். இது மரணத்திற்குப் பிறகோ, ஆன்மீக நிலையிலோ, ஆவிக்குறிய வாழ்விலோ நடக்கும் என்று இயேசு கூறுவதாக லூக்கா இங்கு குறிப்பிடவில்லை. சமவெளிப் பிரசங்கத்தின் சிறப்பு அம்சங்கள்: சமவெளிப் பிரசங்கம், வாழ்வின் நன்நெறி மற்றும் நடத்தை விதிகளை ஆழமாக வலியுறுத்துகிறது. உங்கள் எதிரிகளை நேசியுங்கள், நன்மை செய்யுங்கள், எந்த பிரதிபலனும் இன்றி கடன் கொடுங்கள்" (லூக்-6:35). நம்மை வெறுப்பவர்களிட மும், நம்மை சபிப்பவர்களிடமும், வாங்கிய கடனை திருப்பித் தராதவர்களிடமும் கூட அன்பாயிருங்கள் என்று வலியுறுத்துகிறது.

மலைப்பிரசங்கத்தில், இயேசு, “பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராக இருப்பது போல நீங்களும் பூரண சற்குணராயிருங்கள்." (மத்-5:48) என பொத்தாம் பொதுவாக கூறுகிறார். ஆனால், சமவெளிப் பிரசங்கத்தில் ‘கடவுளின் பூரணம்’ அதாவது, ‘கடவுள் பரிபூரணர்’ என்பதோடு நிறுத்திவிடாமல், “உங்கள் பிதா இரக்கமுள்ளவராய் இருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ள வர்களாயிருங்கள்” (லூக்-6:36) என கற்பிக்கிறார். லூக்காவில், “இரக்கமுள்ளவர்’ என்பதற்கு ‘ஒய்க்டிர்மோன்’ என்ற கிரேக்கச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, எதிம்மறையான நிலை களில் இருப்பவர்களிடம் காட்டும் அன்பு மற்றும் மனவுருக்கத்தைக் குறிக்கிறது. இவ்வாறாக, இயேசுவின் சமவெளி பிரசங்கம், எல்லா மனிதர் மீதும் இரக்கம் மற்றும் கருணை காட்டுவது நம் வாழ்வின் கொள்கையாக இருக்க வேண்டும். என வலியுறுத்துகிறது

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! சமவெளி பிரசங்கமானது, தனித்துவம் வாய்ந்த செய்தி மற்றும் பாடங்களை உடையதாகும். மலைப்பிரசங்கம் மற்றும் சமவெளிப் பிரசங்கம் ஆகிய இவ்விரண்டு பிரசங்கங்களிலும் உள்ள சமூக-நீதிக்கான நற்செய்திகளை ஆராய்ந்து அறிய நாம் நேரம் ஒதுக்குவோம்; அவற்றை நம் வாழ்வில் கடைபிடிக்கவும் ஒடுக்கப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடவும் நம்மை அர்ப்பணிப்போம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.-


அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா



அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா,
ஆயர் மற்றும் ஊழிய இயக்குநர், நற்செய்தி வேதாகம அச்சுப்பதிவு ஊழியங்கள்,
சாலிகிராமம், சென்னை-93. தென்னிந்தியா.