January 2026
புத்தாண்டு: சிறப்பு தேவசெய்தி...

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

நீங்கள் செய்வதெல்லாம் வாய்க்கும்
YOU ARE BLESSED ALL THAT YOU DO SHALL PROSPER
Rev. S.J.D. Dharmaraja

பிரியமானவர்களே! இயேசு கிறிஸ்துவின் இனிய திருப்பெயரிலே உங்களை அன்போடு வாழ்த்துகிறேன். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்தளிப்பதில் மகிழ்ச்சியடை கிறேன். கடவுள் தம்மைப் பின்பற்றுபவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக வாழவேண்டுமென விரும்பகிறார்; அதாவது, அவர்கள் கனிதரும் வாழ்வு வாழ அவர் விரும்புகிறார். குறிப்பாக கலாத்தியர் 5:22-23-ல் குறிப்பிடப்பட்டுள்ள அன்பு, மகிழ்ச்சி, சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நன்மை, விசுவாசம், சாந்தம் மற்றும் இச்சையடக்கம் ஆகிய ஆவியின் கனியாகிய அனைத்து நற்குணங்களையும் பெற்று வாழவேண்டுமென அவர் விரும்புகிறார்.

நாம் தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்க, அதாவது எடுத்த காரியத்;தில் நாம் வெற்றி யடைய அவர் விரும்பி, அந்த ஆசீர்வாதத்திற்கான வழிமுறைகளை சங்கீதக்காரர் வாயினால் (சங்.1) நமக்கு அறிவிக்கிறார். ஆண்டின் தொடக்கத்திலே, நீங்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள், நீங்கள் செய்வது எல்லாம் வாய்க்கும் என்ற வாக்கை கடவுள் நமக்குத் தருகிறார். நாம் செய்யும் காரியங்கள் எல்லாம் வாய்ப்பதற்கான வழிமுறைகளை சங்கீதம்-1ஐ ஆதாரமாகக் கொண்டு தியானிப்போம்.

1. உலகத்தை விலக்கியவர்களாக வாழவேண்டும்: (சங்.1:1)

முதலாவதாக, நாம் இந்த உலகத்திலிருந்து பிரிக்கப்படவேண்டும். நாம் இவ்வுலகில் வாழ்ந்து வந்தாலும் இவ்வுலகத்தார் அல்ல, என்று திருமறை சொல்லுகிறது (யோவா.15:19, 17:14). ஆகவே நாம், சில உலக காரியங்களைத் தவிர்ப்பதால் காரியசித்தி கிடைக்கிறது; நம் ஆசீர்வாதங்களும் தொடங்குகின்றன. நாம் நடக்கத்தகாத ஒரு வழி, நாம் நிற்ககதகாத ஒரு இடம், நாம் உட்காரத் தகாத ஒரு இடம் குறித்து சங்கீதம்-1 நம்மோடு பேசுகிறது.

நடக்கத்தகாத வழி: தீயோரின் ஆலோசனையில் நடப்பதை விலக்குவோம். ‘ஆலோசனை’ வழிகாட்டுவதைக் குறிக்கிறது. ‘தீயோர்’ ஒழுக்கம் தவறிய மனிதரைக் குறிக்கிறது. நாம் பெறும் அறிவுரை கடவுளில் நங்கூரமிடப்பட்டதா? என்பதை நாம் யோசிப்பதேயில்லை. நாம் ஜாதகம் - ஜோஸியம் பார்க்கவோ, எண்-கணிதம் கணிக்கவோ அல்லது ஒரு செலிபரிட்டியின் வார்த்தைப் படி நடக்கவோ முனைகிறோம். இவற்றைத் தவிர்க்க திருமறை அழைக்கிறது. நிற்கத்தகாத இடம்: பாவிகளின் பாதையில் நிற்கலாகாது. ‘நிற்பது’ என்பது, உடன் நிற்பது, பின்பற்றுவது என்ற கருத்தைக் கொண்டுள்ளது. ‘பாவிகள்’ என்ற சொல் பாதை தவறியவர் அல்லது தவறான கொள்கை மற்றும் நடைமுறை உடையோரைக் குறிக்கிறது. தவறான கொள்கைகளைத் தவிர்ப்போம்.

உட்காரத்தகாத இடம்: அவமதிப்பவர்களின் இருக்கையில் அமரக்கூடாது. ‘உட்கார்தல்’ என்ற வார்த்தைக்கு வசிப்பது, தங்குவது அல்லது நிலைப்பது என்று பொருள்படும். ‘அவமதிப்பு’ என்பது வெறுப்பு, அவமரியாதை மற்றும் ஏளனத்தை குறிப்பது. கேலி, பரியாசம் செய்பவர்கள் விமர்சிக்கவும் அவதூறுகளை சுமத்தவும் விரும்புகிறார்கள். நாம் சேர்ந்திருக்க வேண்டிய இடத்தைவிட சேரக்கூடாத இடம் எது என்பதை உணர்வது அவசியம். மேலும், நாம் விசுவாசி களுடன் இணைக்கப்படாவிட்டால், இப்படிப்பட்ட தீயவர்களுடன் உறவாடும் பரிதாப நிலைக்குத் தள்ளப்படுவோம்.

சமீபத்தில் கிறிஸ்டியானிட்டி டுடே என்ற பத்திரிக்கையில், தேவ ஊழியர்கள் மத்தியில் மது அருந்துவது ஏற்றுக்கொள்ளப்படுவதாக ஒரு செய்தியைப் படித்தேன். சுவிசேஷகர்களிடையே மது குறித்த கருத்துக்கள் இவ்வாறு மாறக்காரணம் அவர்கள் தீயோர்; ஆலோசனையில் நடப்பதும், பாவிகள் வழியில் நிற்பதும், பரியாசக்காரகளுடன் உட்காருவதும்தான் என்பது தெளிவாகிறது அல்லவா?

நீங்கள் எங்கே நிற்கிறீர்கள்? எங்கே நடக்கிறீர்கள்? எங்கே அமர்ந்திருக்கிறீர்கள்? நண்பர்களே, சற்றே சுயபரிசோதனை செய்வீர்.

2. வசனத்தில் ஊறியவர்களாக வாழவேண்டும்: (சங்.1:2)
இரண்டாவதாக, நாம் கடவுளின் வார்த்தையால் நிறைவுற்றிருக்க வேண்டும். ஆசீர்வதிக்கப்பட விரும்பும் விசுவாசி, தேவ வார்த்தையின்படி நடககவேண்டும். புத்தாண்டில் ஆசீர்வதிக்கப்பட விரும்பும் விசுவாசி, உலகத்தின் வழிகளின்படி நடக்கவோ, நிற்கவோ, உட்காரவோ முடியாது என்பதை அறிவார், மாறாக வார்த்தையின்படி நடக்கிறார். “ஆனால் அவருடைய மகிழ்ச்சி கர்த்தருடைய சட்டத்தில் இருக்கிறது.”| சங்கீதம் 119:103: "உங்கள் வார்த்தைகள் எவ்வளவு இனிமையானவை, அவை என் வாய்க்கு தேனைவிட இனிமையானவை!" கடவுளின் வார்த்தை உங்களுக்கு மகிழ்ச்சிகரமானதாகவா? மந்தமானதாகவா? எப்படித் தோன்றுகிறது? எரே.15:16 கூறுகிறது: “உங்கள் வார்த்தைகள் கண்டுபிடிக்கப்பட்டன, நான் அவற்றை சாப்பிட்டேன், உங்கள் வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சியாகவும் என் இருதயத்திற்கு மகிழ்ச்சியாகவும் மாறியது.”
‘தியானம்’ என்பது அசைபோடுவது. பசு, தன் உணவை அசை போடுவதைப் போன்றதாகும்; யோசிப்பதும், வாயில்-மனதில் முணுமுணுப்பதும் ஆகும். பைபிள் தியானம் என்பது மனதை கடவுளின் வார்த்தையால் நிரப்புவதாகும். (வசனத்தில் ஊறுவது). இது “உமக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடி, உம் வார்த்தையை என் இருதயத்தில் மறைத்து வைத்தேன்." என்ற சங்.119:11 வசனப்படி செய்வதாகும். யோசு.1:8: “இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயிலிருந்து பிரியவேண்டாம்; அதில் எழுதியிருக்கிற யாவையும் செய்ய நீ கவனமாயிருக்கும் படி, இரவும் பகலும் அதை தியானித்துக்கொண்டிரு; அப்பொழுது நீ செழித்து, வெற்றி அடைவாய். புத்தாண்டின் ஆசீர்வாதத்தைப்பெறும்படிக்கும், நம் செயல்கள் சிறப்படையும்படிக் கும், வசனத்தில் ஊறியவர்களாய் வாழ அழைக்கப்படுகிறோம்.

3. உறவில் நெருங்கியவர்களாக வாழவேண்டும்: (சங்.1:3)>

“அவர்கள் நதியின் ஓரமாக நடப்பட்ட மரத்தைப் போல இருப்பர்.” மத்திய கிழக்கு நாடுகளில், தண்ணீர் நிரம்பிய பகுதியில் மரங்கள் நடப்பட்டன அல்லது மரங்களுக்குத் தண்ணீர் கிடைக்க, ஒரு நீர்ப்பாசன முறை அமைக்கப்பட்டது. பல ஆண்டுகளாக வளர்ந்து வரும் பெரிய மரங்கள், கண்ணுக்குத் தெரியாத, நீர் நிலைகள்வரை நீண்டுள்ள வேர் அமைப்பைக் கொண்டுள்ளது என அறிஞர்கள் கூறுகிறார்கள். புத்தாண்டு வளமிக்க ஆண்டாக மாற்றப்படுவதற்கு நாம் வற்றாத ஜீவதண்ணீரையுடைய இயேசு கிறிஸ்துவை நெருங்கிவாழ (உறவில் நெருங்கியவர்களாக வாழ) அழைக்கப்படுகிறோம். அதுவே நீர்க்கால்களின் ஓரமாய் நடப்படுவது. புத்தாண்டில் நாம் காரியசித்தி அடையும்படிக்கு இரட்சிபின் மக்களாய் ஆவியின் கனிகளைத் தரும் மக்களாய் நிறைவாழ்வு வாழ்வோம்.

நாம் ஆதாமுக்குள் பாவமுள்ள நிலையிலிருந்து எடுக்கப்பட்டு, இயேசு கிறிஸ்துவுக்குள் இட மாற்றம் செய்யப்பட்டு, நதியோரம் நடப்பட்டு, வார்த்தையின் தண்ணீரால் (இயேசுவாகிய ஜீவ தண்ணீரால்) வளர்க்கப்பட்டுள்ளோம்.

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே! ஆன்மீக செழிப்பு, காரியசித்தி பெற்று 2026ம் ஆண்டின் ஆசீர்வாதத்தைப் பெற விரும்பி, கிறிஸ்துவின் அன்பிற்குள் ஆழமாகச் செல்ல ஆதாரமாக மூன்று காரியங்கள் உங்கள் முன் வைக்கப்படுகின்றன. முதலாவது உலகத்தை விலக்கியவர்களாய் வாழ்வது, இரண்டாவது திருவசனங்களில் ஊறியவர்களாய் வாழ்வது, மூன்றாவது கடவுளின் உறவில் நெருங்கியவர்களாய் வாழ்வது. இம்மூன்று காரியங்களிலும் உறுதியாய் இருங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.




அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா, ஆயர் மற்றும் உழிய இயக்குநர்,
நற்செய்தி வேதாகம அச்சுப்பதிவு, சாலிகிராமம், சென்னை. தமிழ்நாடு, தென்னிந்தியா