January 2025

புத்தாண்டு சிறப்பு தேவசெய்தி

புத்தாண்டு 2025 12 மாதங்களிலும் ஆசீர்வாதங்கள்

வெளிப்படுத்துதல்-22:2

NEW YEAR 2025 BLESSING THROUGH ALL THE 12 MONTHS
Rev. Aseervatham Rani

கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர, சகோதரிகளே! உங்கள் யாவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் புத்தாண்டு (2025) நல்வாழ்த்துக்கள். ‘இரட்சிப்பு’ மாத இதழில் தேவசெய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

12 என்ற எண் வேதத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. கடவுள் முக்கியமான நேரங்களில், முக்கியமான இடங்களில் எண்:12ஐ முக்கியத்துவப்படுத்துவதை நாம் பார்க்கிறோம். யாக்கோபின் வம்சம் 12-கோத்திரங்கள், இயேசுவின் சீடர்கள் 12-பேர், ஒரு வருடத்தில் 12-மாதங்கள் என்று திருமறை சொல்லுவதை நாம் பார்க்கிறோம். இவ்வாறு, தேவனாகிய கர்த்தரும், ஆண்டவராகிய இயேசுவும் எண்:12ஐ முக்கியப்படுத்துவதை நாம் பார்க்கிறோம். வெளி-22:2 வசனத்தின் துணையுடன், ‘வருடத்தின் 12மாதங்களிலும் ஆசீர்வாதங்கள்’ என்ற கருத்தை தியானிப்போம்.

தியான வசனம்: (வெளி-22:1)

நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இரு கரையிலும் 12-வித மான கனிகளைத்தரும் ஜீவ விருட்சம் இருந்தது. அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்.

12 மாதங்களும் புதிய ஆசீர்வாதங்கள்:

அப்போஸ்தலனான பரி.யோவான் பத்மு தீவின் தரிசனத்தில் கண்ட ஜீவ-விருட்சம் மாதந்தோறும் 12-விதமான கனிகளை கொடுக்கும் எனவும் அதின் இலைகள் ஆரோக்கியம் தரும் மருந்தாகும் எனவும் அவருக்கு உணர்த்தப்பட்டது. இதே போன்ற மரங்களைக் குறித்து எசேக்கியேல் தீர்கத்தரிசி, “நதியோரமாய் அதின் இக்கரையிலும் அக்கரையிலும் புசிப்புக்கான சகலவித விருட்சங்களும் வளரும்; அவைகளின் இலைகள் உதிர்வதுமில்லை, அவைகளின் கனிகள் கெடுவதுமில்லை; அவைகளுக்குப் பாயும் தண்ணீர் பரிசுத்தஸ்தலத்திலிருந்து பாய்கிறபடியினால் மாதந்தோறும் புது கனிகளை கொடுத்துக்கொண்டே யிருக்கும்; அவைகளின் கனிகள் புசிப்புக்கும், அவைகளின் இலைகள் அவிழ்தத்துக்குமானவைகள்.” (எசே-47:12) என சொல்லுகிறார். அவ்வண்ணமே, நமது ஆண்டவர் 2025ம் வருடத்தின் 12மாதங்களிலும் உங்கள் வாழ்வில் உணவு, உடை, உறைவிடம், ஆரோக்கியம், அறிவாற்றல் ஆகிய புதிய ஆசீர்வாதங்களைத் தந்து வாழ்வை வளமாக்கித் தருவார்.

1. நீரூற்றுகள்-12: (யாத்.15:22-27)

ஏலீமில் 12-நீரூற்றுகளும் 70-பேரீச்ச மரங்களும் இருந்தன. இஸ்ரவேலர் எகிப்தில் அடிமைகளாயிருந்தபோது கர்த்தர் அவர்களை மீட்டு வழிநடத்தி 12-நீர் ஊற்றுகளண்டை கொண்டுவந்து லட்சக்கணக்கனக்கான அவர்ளின் தாகத்தை தீர்த்து அவர்கள் ஜீவனையும் மீட்டார். இந்த நீரூற்றுக்கள் வாழ்வின் வளத்தையும், செழுமையையும் குறிக்கின்றன. கர்த்தர் இவ்வாண்டின் 12 மாதங்களிலும் நமக்கு தண்ணீரையும், உணவையும் தந்து நம் வாழ்வின் தேவைகளை சந்திப்பார் (எண்ணையும், மாவையும் ஆசீர்வதிப்பார்). வேதம் சொல்லுகிறது: “ஆண்டவர் ஊற்றுகளை கொண்டு வறண்ட வனாந்திரத்தை செழிப்பாக்குவார். பாலைவனமானாலும், பள்ளத்தாக்கானாலும், எந்த நிலையாய் இருந்தாலும் கர்த்தர் வழிநடத்துவார்.” (ஏசா-41:18). வறுமை, வளர்ச்சியின்மை, மனுஷ-சகாயம் இன்மை போன்ற சூழல்களில் இறைவன் நம்முடன் இருந்து நம்மை வழி நடத்துவார்.

2. கற்கள்-12: யோசுவா 4:2-7

அ) அற்புதத்தின் கற்கள்-12: யோசு-4:7

இஸ்ரவேலர் யோர்தானைக் கடந்து கானான் தேசத்தில் நுழைந்தபோது யோசுவாவின் சொற்படி, கோத்திரத்திற்கு ஒன்றுவீதம், 12-கற்களை சுமந்து சென்று, தடைகள் நீங்கிய அற்புதத்தின் அடையாளமாக வைத்தார்கள். நீங்களும் ஆண்டவரைப் பற்றிக் கொள்ளும்போது, 2025ம் வருடத்தின் 12 மாதங்களிலும் அவர் உங்கள் நடுவில் இருந்து யோர்தான் போல் வரும் தடைகளை நீக்கி உங்கள் வழிகளை விசாலமாக்குவார்.

ஆ) ஆசரிப்பின் கற்கள்-12: யாத்-28:21

ஆரோனின் ஆசாரிய உடையில் பதிக்கப்பட்ட கற்கள்-12 (யாத்-39:14). ஆரோன் கடவுளின் பிரதிநிதியாய் நிற்கிறார். ஆரோனை இஸ்ரவேலர் பார்க்கும்போது அவருடைய அங்கியின் 12-கற்கள் அவர்களுக்கு ஞாபகக்குறியாய் இருந்துகொண்டே இருந்தன. அவ்வாறாகவே, இயேசுவும் நமது பிரதிநிதியாய் தேவனுக்கு முன் நிற்கிறார். இயேசு கிறிஸ்து நமக்காக பிதாவின் முன் நிற்பதால், நாம் இயேசு கிறிஸ்துவுக்குள் இரட்சிக்கப்பட்ட ஜனமாக இருக்கிறோம் என்னும் ஆசீர்வாதம் நமக்கு உண்டு.

இ) அக்கினியின் கற்கள்-12: 1ராஜா 18:31-38

எலியா தீர்க்கத்தரிசிக்கும் பாகால் தீர்க்கத்தரிசிகளுக்கும் நடந்த விசுவாச யுத்தம், ஜெப-யுத்தம், வார்த்தை-யுத்தம் நம் அனைவருக்கம் தெரியும் அல்லவா? எலியா எந்த இடத்தில் அவமானப்பட்டாரோ அதே இடத்தில் 12-கோத்திரத்திற்கு ஒரு கல்லாக 12-கற்களை வைத்து பலிபீடம் அமைத்து அதில் பலியிட்டபோது, கற்கள் அக்கினி கற்களாயின, கர்த்தர் அக்கினியில் பதிலளித்தார் அல்லவா? அவமானப்பட்ட இடத்தில் கர்த்தர் அக்கினியாய் இறங்கி, தாமே தேவன் (கர்த்தரே தேவன்) என்பதை நிரூபித்தார் அல்லவா? நாமும் எங்கெல்லாம் அவமானம் அடைகிறோமோ, அங்கெல்லாம் கர்த்தர் நமக்காக அக்கினியாய் இறங்குவார்.

3. கோத்திர பிரபுக்கள்-12பேர்: எண்-1:44

இஸ்ரவேலின் 12-கோத்திர பிதாக்களின் வம்சத்திற்கு ஒருவர் வீதம் 12-கோத்திர பிரபுக்கள் தேர்தெடுக்கப்பட்டு ஊழியத்தில் உதவி செய்தார்கள் என எண்-1:44 சொல்கிறது. ஆபிரகாமின் (ஆகாரின்) குமாரனான இஸ்மவேலைக் குறித்து, “நான் அவனை ஆசீர்வதித்து மிகவும் அதிகமாக பலுகிப் பெருக பண்ணுவேன். அவன் 12-பிரபுகளை பெறுவான்; அவனை பெரிய ஜாதியாக்குவேன்”; என்று ஆதி 17:20ல் வாக்குரைத்த தேவன் அதை நிறைவேற்றியதை இன்று நாம் கண்கூடாகக் காண்கிறோம். 2025ம் ஆண்டின் 12-மாதங்களிலும் ஆசீர்வதிக்க வாக்களிக்கும் நம் கர்த்தருக்கு ஊழியம் செய்ய நம்மை அர்ப்பணிப்போம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! நாம் கர்த்தரின் சீடர்களாய் செயல்படும்போது மத்-19:28-ல், “மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் போது என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் 12-கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய் 12-சிங்காசனங்களின் மேல் வீற்றிருப்பீர்கள்” என்ற இயேசுவின் வாக்குப்படி பரலோக ஆசீர் வாதங்களைப் பெறுவோம் என்பதில் சந்தேகம் இல்லை. 12-மாதமும் கர்த்தர் நாம் கையிட்டு செய்யும் பணிகளையும், நமது உழைப்பையும் வருமானத்தையும் ஆசீர்வதிப்பார். நம் விருப்பங் களையும், வேண்டுதல்களையும், விண்ணப்பங்களையும் நிறைவேற்றி, தமது ஆற்றலை நமக்குத் தந்து நம்மை வழி நடத்துவார். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.


அருட்பணி. ஆசீர்வாதம் ராணி



அருட்பணி. ஆசீர்வாதம் ராணி
ஆயர் மற்றும் குருசேகர தலைவர், சிஎஸ்ஐ தூய ஆவியானவர் ஆலயம்,
சாலிகிராமம் குருசேகரம், சென்னை-93. தென்னிந்தியா.