Vedha Aratchi
EPISODE-112
September 2026
சங்கீதங்கள் கற்றுத்தரும் விலையேறப்பெற்ற சத்தியங்கள்

AUTHOR: REV.DR. D.SURESH RAJAN

சங்கீதம் - 112

முன்னுரை:

ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர், இறைவனை நம்பி, நீதியிலும் இரக்கத்திலும் வாழ்ந்து, தங்கள் வாழ்க்கையின் மூலம் பிறருக்கு ஆசீர்வாதமாக இருப்பார்கள் என்பதை இப்பாடல் நமக்கு எடுத்தியம்புகிறது. அன்றாட வாழ்வில் தூய்மை வாழ்வு வாழ யோசிக்கும் நமக்கு ஒரு அருமருந்தான பாடல் இது.

1. ஆசிபெற்ற வாழ்வு: (வச.1 - 3)

“ஆண்டவருக்கு அஞ்சிநடப்போர் பேறுபெற்றோர்: அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர்” (வச.1)

சங்கீதக்காரர் முதலில், பேறுபெற்றோர் யார்? என்ற கேள்விக்கு விளக்கம் கொடுக்கிறார். அவர்கள் செல்வந்தர்கள் என்பதால் அல்ல, அதிகாரத்தில் இருப்பதால் அல்ல. அவர்கள் வாழ்க்கையில் எந்தப் பிரச்சினையும் இல்லாததால் அல்ல, அவர்கள் ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதால் பேறுபெற்றவர்கள். இங்கே ‘அஞ்சுதல்’ என்பது பயந்து ஓடுவது அல்ல; ஆண்டவரை மதித்து, அவருடைய அதிகாரத்தை ஏற்று, அவருடைய வழியில் நடப்பது. தேவனுடைய கட்டளைகள் அவர்களுக்கு ஒரு சுமை அல்ல, மகிழ்ச்சி; இது உண்மையான சீடத்துவத்தின் அடையாளம். நாம் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவது ‘கட்டாயம்’ என்பதற்காக அல்ல; தேவனை நேசிப்பதால் கீழ்ப்படிகிறோம்.

இந்த ஆசீர்வாதம் அடுத்த தலைமுறைக்கும் செல்கிறது என்று இங்கு காண்கிறோம். “நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும்” (வச.2). “சொத்தும் செல்வமும் அவர்களது இல்லத்தில் தங்கும்: அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்” (வச. 3). இங்கே சங்கீதக்காரர் பொருளாதார ஆசீர்வாதத்தையும் குறிப்பிடுகிறார். ஆனால் வசனம் 3ன் இறுதியில் வரும் “அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்” என்பதே மிக முக்கியமானது. செல்வம் தற்காலிகமானது, பதவி மறைந்துபோகலாம்; ஆனால், நீதியான வாழ்க்கையின் சாட்சி நிலைத் திருக்கும். நாம் நம் பிள்ளைகளுக்கு சொத்தைக் காட்டிலும் பெரிய பாரம்பரியத்தை விட்டுச் செல்ல வேண்டும். அது ஆண்டவருக்கு அஞ்சும் வாழ்க்கையின் பாரம்பரியம்.

2. ஒளி தரும் வாழ்வு: (வச. 4 - 6)

“இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளோரிடையே மிளிர்வர். அவர்கள் அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர்” (வச. 4).

சங்கீதக்காரர் இருள் இல்லாத வாழ்க்கையை வாக்களிக்கவில்லை. மாறாக, ‘இருளில் ஒளியென| என்கிறார். அதாவது, தேவனுடைய மக்கள் இருளைத் தவிர்ப்பவர்கள் மட்டுமல்ல; இருளின் நடுவில் ஒளியாக இருப்பவர்கள். இன்றைய உலகத்தில் அதிக குழப்பம் இருக்கிறது, அநீதி இருக்கிறது, பயம் இருக்கிறது, சுயநலம் இருக்கிறது, சந்தேகம் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் கிறிஸ்தவர்கள் ஒளியாக இருக்க வேண்டும். ஆனால், அந்த ஒளி எப்படி வெளிப்படுகிறது? நம்மிடம் அருள், இரக்கம், நீதி இருந்தால் வெளிப்படுகிறது. நாம் எவ்வளவு வேதாகமம் அறிவோம் என்பது மட்டும் நம் வாழ்வின் அளவுகோல் அல்ல. நம்மிடம் அருள், இரக்கம், நீதி நிறைந்துள்ளதா? என்பதே அளவுகோல்.

“மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்: அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர்” (வச. 5). நாம் பணத்தைப் எவ்வாறு பயன்படுத்துகிறோம்? ஏழைகளிடம் எப்படி நடந்து கொள்கிறோம்? நமது தொழில் அல்லது அலுவலில் எவ்வளவு நேர்மையாக நடந்து கொள்ளுகிறோம்? மற்றவர்களின் தேவையைப் பார்த்து மனமிரங்குகிறோமா? இவை அனைத்தும் நமது விசுவாசத்தின் வெளிப்பாடுகள்.

ஒரு மனிதனுடைய உண்மையான நினைவுச்சின்னம் அவன் கட்டிய கட்டிடம் அல்ல; அவன் தொட்ட மனிதர்களின் வாழ்க்கை. “எந்நாளும் அவர்கள் அசைவுறார்: நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர்” (வச.6). எனவே, இறை ஒளியை பெற்றவர், பிறரின் இருளில் ஒளியாக மாறவேண்டும்.

3. அச்சமில்லாத வாழ்வு: (வச.7 - 10)

“தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது, ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும்” (வச. 7,8).

நம் வாழ்வில் தீமையான செய்தி எதுவும் வராது என்று இங்கு சொல்லவில்லை, ஆனால், அது அவர்களை அச்சுறுத்தாது. மனவுறுதியானது, நீதிமானின் நீதியில் அல்ல, ஆண்டவர் மீதான நம்பிக்கையிலிருந்து வருகிறது. அவர்களை அச்சம் மேற்கொள்ளாது; அவர்கள் நெஞ்சம் நிலை யாய் இருக்கும் (வச. 8).

இது ஒரு வலிமையான கிறிஸ்தவ சாட்சியாகும். உலக வழக்குப்படி எல்லாம் பாதுகாப்பாக இருக்கும் போதுதான் அமைதியாக இருக்கமுடியும்; ஆனால், விசுவாசம் நமக்கு கற்பிப்பது, குழப்பத்திலும் ஆண்டவரை நம்ப வேண்டும்.

இந்த நம்பிக்கையின் விளைவு என்ன? “அவர்கள் வாரிவழங்கினர், ஏழைகளுக்கு ஈந்தனர்” (வச. 9). பயந்த உள்ளம் கேட்கும், ஆனால் விசுவாசமுள்ள உள்ளம் கொடுக்கும். தன் எதிர்காலத்தைப் பற்றி பயப்படுகிறவன் பெற்றுக்கொள்ள விரும்புவான். ஆனால், ஆண்டவரை நம்புகிறவானோ வாரி வழங்குவான்; வாரி வழங்கினாலும், அவனுக்கு எதிர்காலம் குறித்த அச்சம் ஏதுமில்லை. முடிவுரை: ஆண்டவருக்கு அஞ்சுகிறவன் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறான்; நீதியாக வாழ்கிறவன் இருளில் ஒளியாகிறான்; ஆண்டவரை நம்புகிறவன் பயமின்றி வாழ்கிறான். ஆகவே, இறை மக்களாகிய நாம் தூய்மை வாழ்வு வாழ விழைவோம். ஆண்டவரது ஆசி நம் அனைவரோடும் இருப்பதாக.


சங்கீதங்கள் கற்றுத்தரும்விலையேறப்பெற்ற சத்தியங்கள். தொடரும்......



ஆசிரியர்: அருட்திரு. அறிவர். டி. சுரேஷ் ராஜன்,
தலைவர் (இந்திய மறை மாநாடு), குளோபல் மெத்தடிஸ்ட் திருச்சபை.

AUTHOR: REV. DR. D. SURESH RAJAN,
CONFERENCE SUPERINTENDENT, INDIA ANNUAL CONFERENCE, GLOBAL METHODIST CHURCH IN INDIA.