AUTHOR: REV.SJD Dharmaraja
பேதைமையை விட்டு விலகுங்கள், அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; புத்தியின் வழியிலே நடவுங்கள். நீதி.9:6
நீதிமொழிகள்.9ம் அதிகாரம், ஞானத்தையும் மதியீனத்தையும், இரு பெண்களாக உருவகப்படுத்தி, விசுவாசிகளைக் கூவி அழைக்கும் ஒரு சக்திவாய்ந்த ஆன்மீகச் சவாலை முன்வைக்கிறது. இருவரும் அழைப்பிதழ்களைத் தயாரிக்கிறார்கள், பாமரரை இலக்காகக் கொள்கிறார்கள். ஆயினும், இருவரின் பாதைகள் முற்றிலும் மாறுபட்ட இலக்குகளுக்கு இட்டுச் செல்கின்றன.
ஞானம்: ‘ஞானம்’ என்ற பெண், பிரம்மாண்டமான ஒரு விருந்தை ஆயத்தம் செய்கிறாள். அவள் தன் வீட்டை முழுமையின் அடையாளமான ஏழு தூண்கள் மீது கட்டுகிறாள். அவள், ‘மதியீனத்தை விட்டு விலகி பிழைத்திடுங்கள்’ (வச.6) என்ற செயல்பாட்டுக்கு அழைக்கிறாள். ஞானப்பெண்ணின் பந்தியில் உணவு அருந்தி, மெய்யான அறிவின் அடித்தளமாகிய ‘கர்த்தருக்குப் பயப்படுதலைத்\ தேர்வு செய்யும் வாய்ப்பு நம்முன் உள்ளது. ஞானத்தைத் தேர்ந்தெடுப்பது முதிர்ச்சியையும், அறிவையும், தீர்க்காயுசுள்ள ஒரு வாழ்க்கையைத் தருகிறது.
மதியீனம்: ‘மதியீனம்’ என்னும் பெண்ணும், தன் வீட்டு வாசலில், கட்டுப்பாடின்றி அமர்ந்து இருக்கிறாள். அவள் சிறந்தது எதையும் வழங்குவதில்லை; குறுக்கு வழிகளை மட்டும் கற்பிக்கிறாள். “திருட்டுத் தண்ணீர் தித்திக்கும், ரகசிய உணவு இன்பமாகும்” (வச.17) என்பது மதியீனம் என்ற இப்பெண்ணின் மயக்கும் பாடலாகும். மதியீனம், மனிதனின் மறைக்கப்பட்ட மாமிச ஆசைகளைத் தூண்டி, உடனடித் திருப்தியையும் அளிக்கிறது. ஆனால், அவளுடைய வாக்குறுதியோ, திகிலிலே முடிகிறது. அவளது வீட்டிற்குள் நுழைந்த, அவளுடைய விருந்தினர், ஏற்கனவே மரணத்துக்குள் சென்று, கல்லறையின் ஆழத்தில் மூழ்கிக் கொண்டு இருப்பதை உணராதிருக்கிறாhகள்.
அன்பர்களே! இன்றும், இவ்விரு குரல்களும் நம் கவனத்தை ஈர்க்கப் போட்டியிடுகின்றன. ஞானம் நம்மைத் தியாகத்திற்கும், வளர்ச்சிக்கும், நிறைவாழ்வுக்கும் அழைக்கிறது. ஆனால், மதியீனமோ, நம்மை இரகசிய-சுகம் மற்றும் பரிதாப-அழிவுக்கு அழைக்கிறது. இவ்விரு குரல்களில் நம் தேர்வு எது? ஞானமா? மதியீனமா?. நம்மால் இரு உணவு-மேஜைகளிலும் உணவருந்த முடியாது; ஆகவே, மதியீனத்தின் வஞ்சக அழைப்புக்கு செவிமடுக்காமல், “தேவஞானம் என்னும் மேஜையே வேண்டும்” என்று சொல்லுவோம். கர்த்தர் உங்களை ஆசீர்;வதிப்பாராக. ஆமென்.
அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா, ஊழிய இயக்குநர்
]
இரட்சிப்பு ஊழியங்கள், சென்னை-93, தென்னிந்தியா