Azariah Gnanadoss
கதை எண்: 184
September 2026

மாய மனிதனின் சாயம் வெளுத்தது

சகோ. எம். அசரியா ஞானதாஸ் எம்.ஏ; எம்.எட்


ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் TIM என்ற ஒரு மனிதன், தலையில் தொப்பியுடன் மேஜைமீது தைல பாட்டில்களை அடுக்கிவைத்து விற்பனை செய்துவந்தான். “இது அமேசான் காடுகளிலுள்ள மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்பட்டது; இந்த அதிசய தைலத்தை வழுக்கை, முடி உதிர்தல் போன்ற குறைபாடு உள்ளவர்கள் உபயோகித்தால் தலைமுடி ‘கரு-கரு’ என வளர்ந்துவிடும்; இத்தைலத்தின் விலை ரூ.25/- மட்டுமே’ என சாதுரியமாகப் பேசி, ஆயிரக்கணக்கான தைல பாட்டில்களை விற்றுவந்தான். ஆனால், தைலத்ததை தலையில் பூசிய எவருக்கும் முடி வளரவில்லை; அவர்கள் TIM-மிடம் புகார் செய்தபோது, “90நாட்கள் தொடர்ந்து பூசினால்தான் முடி வளரும்” எனக்கூறி தைலத்தை விற்றுவந்தான்.

ஒருநாள் அவன் விற்பனை செய்துகொண்டிருந்தபோது பலத்த காற்று அடிக்கவே, அவன் தலையில் இருந்த தொப்பி காற்றில் பறந்து சென்றது. அந்தோ! அவன் தலை முழு வழுக்கையாக இருந்தது எல்லார் கண்களிலும் பட்டது. அதைப்பார்த்தவர்கள், “தலைமுடி வளர தைலம் விற்பவருக்கே வழுக்கையா?” எனக் கேட்கத் தொடங்கிவிட்டனர். TIM-ன் தலை குறித்த இச்செய்தி வேகமாக பரவவே, அவனது பிரச்சாரம் அனைத்தும் ‘சுத்த-பொய்’ என மக்களுக்குத் தெரியவந்தது; அவனுடைய மாயத்தின் சாயமும் வெளுக்கத்தொடங்கியது.

இந்நிலையில் போலீஸ் TIM-மிடம் வந்து, “உன் கடை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது எனவே கடையை அகற்றிவிடுவோம்” என எச்சரித்தனர். அதற்கு TIM, “ஐயா! என் 7 பிள்ளைகளையும் குடும்பத்தையும், காப்பாற்ற நான் ஒருவன் மட்டும் இந்த ஒரு கடை மட்டும் வைத்து சம்பாதிக்கிறேன்”, எனக் கெஞ்சினான். தைலம் வாங்கி ஏமாந்தவர்கள் புகாரளிக்கவே, போலீஸ் TIM-ஐ கைதுசெய்தது. விசாரணையில் ‘7 பிள்ளைகள்’ ‘ஒரு கடைதான்’ என்றது பொய்; அவன் இந்தியா முழுதும் கடைவைத்து மக்களை ஏமாற்றியதும் தெரியவந்து; போலீஸ் அவனை சிறையில் அடைத்தது. பிரியமானவர்களே! நாமும் பொய்-வேஷமிட்டு போலி-வாழ்க்கை வாழ்வோ மானால் TIM என்ற மாய மனிதனின் சாயம் வெளுத்ததுபோல் நமது வேஷங்களும் வெட்டவெளிச்சமாகி, நாமும் தண்டனை பெறும் சூழ்நிலைகள் வரும். இதை உணர்ந்து உண்மையுடனும், நேர்மையுடனும் வாழ்வோம். வேதம் இவ்வாறு கூறுகிறது:

மாயக்காரனின் மகிழ்ச்சி ஒரு நிமிஷமே நிற்கும். யோபு-20:4
ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடுக்கக் கூடாது. சங்-24:4
மனுஷனுடைய மாயையை கர்த்தர் அறிவார். யோபு-11:11
மாயையை பற்றிக்கொள்கிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையை போக்கடிக்கிறார்கள். யோனா-2:8



M.AZARIAH GNANADOSS M.A; M.ED
EDITOR, RATCHIPPU TAMIL CHRISTIAN MONTHLY, SALIGRAMAM, CHENNAI-93. MOBILE:9962924900