Vedha Aratchi
EPISODE-100
September 2025
சங்கீதங்கள் கற்றுத்தரும் விலையேறப்பெற்ற சத்தியங்கள்

AUTHOR: REV.DR. D.SURESH RAJAN

சங்கீதம் - 100

முன்னுரை:

இந்த திருப்பாடல், ஒவ்வொரு வாரமும் நமது வழிபாடுகளில் தவறாமல் பயன்படுத்தப்படும் அற்புதமான பாடல். மகிழ்ச்சி-நிறைந்த-துதி, எளிமை மற்றும் ஆழம் ஆகியவை இதன் மையக் கருத்துக்கள். இது ஒரு ‘நன்றி பலி திருப்பாடல்’ (PSALM OF THANKSGIVING) என்று அழைக்கப் படுகிறது. இது நம்மைக் கடவுளின் முன் மகிழ்ச்சி மற்றும் நன்றியோடு கொண்டுவருவதற்கான ஒரு அழைப்பாகும்.

1. மகிழ்வுடன் நன்றி செலுத்த அழைப்பு: (வசனங்கள் 1, 2)

அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சிநிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்!

திருப்பாடலாசிரியர் அனைத்துலகோரையும் ஆண்டவர் புகழ் பாட அழைக்கிறார். கடவுளுக்கு துதிசெலுத்தும் வாய்ப்பு சில தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல; அவர் படைத்த அனைவருக்குமானது. ஆகவே, இந்த அழைப்பு ஒரு உலகளாவிய அழைப்பாகும்.

கடவுளுக்குச் செய்யும் திருப்பணி ஒரு சுமையோ அல்லது கடமையோ அல்ல, மாறாக, அது ஒரு மகிழ்ச்சியான செயல். நியா. 28:47ல், மனமில்லாமல் செய்யும் ஊழியத்தின் விளைவுகள் கூறப்பட்டிருக்க, இங்கே அதற்கு நேரெதிரான மகிழ்ச்சியான திருப்பணி பற்றி காண்கிறோம்.

‘பாடிக்கொண்டு வாருங்கள்’ என்று, மிக அழகாக கூறுகிறார். இசை மற்றும் பாடல் ஆகியவை மனித இதயத்திலிருந்து வெளிப்படும் இயற்கையான துதியின் வடிவங்கள். எபே. 5:19ல், “உங்கள் உரையாடல்களில் திருப்பாடல்கள், புகழ்ப்பாக்கள், ஆவிக்குரிய பாடல்கள் ஆகியவை இடம்பெறட்டும். உளமார இசை பாடி ஆண்டவரைப் போற்றுங்கள்.” என்று அறிவுறுத்தல் தரப்படுகிறது.

2. நம்மை அறிந்துகொள்ள அழைப்பு: (வசனம் 3)

“ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!”

மகிழ்ச்சியான துதிக்கு ஒரு அடிப்படைத்தேவை, கடவுளைப் பற்றிய சரியான அறிவு. நாம் யாரைத் துதிக்கிறோம் என்பதை அறிந்திருக்க வேண்டும். அவர் அனைத்தையும் ஆளும் வல்ல இறைவன். அனைத்திற்கும் அதிபதி. ‘நாமல்ல, அவரே நம்மை படைத்தவர்’ நாம் அவரைச் சார்ந்தவர்கள். இது நாம் நம்மை யார் என்று புரிந்து கொள்வதற்கு உதவி செய்கிறது.

‘நாம் அவருடைய மக்கள், அவர் மேய்ச்சலின் ஆடுகள்’ என்று இங்கே கூறும்பொழுது, மிகுந்த அன்பும் அக்கறையும் காணப்படுகிறது. நாம் அவருக்குச் சொந்தமானவர்கள். ஒரு இடையர் தன் ஆடுகளைக் கவனித்துக் கொள்வதுபோல, அவர் நம்மைக் கவனமுடன் காக்கிறார் (சங். 23:1, யோவா. 10:11). இது நமக்கு பாதுகாப்பு மற்றும் உரிமையின் உணர்வைத் தருகிறது.

3. நன்றி செலுத்த அழைப்பு: (வசனங்கள் 4, 5)

“நன்றியோடு அவருடைய திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப்பாடலோடு அவருடைய முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்! ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்.”

நாம் எவ்வாறு அவரிடம் செல்ல வேண்டும்? நன்றியின் இதயத்தோடு. நன்றி (THANKSGIVING) மற்றும் துதி (PRAISE) ஆகியவை நம் வழிபாட்டின் மைய அங்கங்கள். நன்றி என்பது கடவுள் நமக்கு செய்தவற்றிற்காக அவரை மகிமைப்படுத்துதல். துதி என்பது கடவுள் தாமாக இருப்பதற்காக அவரை மகிமைப்படுத்துதல்.

‘அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்’ என்ற சொற்றொடர், நாம் வேண்டுதலினாலும், வழிபாட்டினாலும் அவருடைய பிரசன்னத்திற்குள் நுழைவதை குறிக்கிறது (எபி. 4:16).

நாம் ஏன் துதிக்க வேண்டும்? நமது துதி, நமது உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாக, அது கடவுளின் மாறாத குணத்தை அடிப்படையாகக் கொண்டது. ‘ஆண்டவர் நல்லவர்’ என்பது மிகவும் அடிப்படையான உண்மை. அவர் செய்வது எல்லாம் நல்லதே என்பது மட்டுமல்ல, அவர் தாமே அனைத்து நல்ல விடயங்களுக்கும் ஆதாரமாக உள்ளார் (யாக். 1:17).

கடவுளின் கருணையும் அன்பும் நம்மை விட்டு நீங்காது. நாம் பாவம் செய்தாலும், அவரது கிருபை நமக்கு மீட்பை வழங்குகிறது (எபே. 2:8). அவர் நாம் நம்பக்கூடிய ஒரு கடவுள். அவர் தன் வாக்குறுதிகளில் உறுதியானவர். அவர் வாக்கு மாறமாட்டார் (எண். 23:19).

முடிவுரை:

நம் அன்றாட வாழ்வில் இந்த திருப்பாடல் ஒரு வழிகாட்டியாக உள்ளது. நமது வாழ்க்கையையே ஒரு நிலையான இறைத்துதியாக மாற்றுவதே இந்தத் திருப்பாடலின் நோக்கமாகும். ஆகவே, மகிழ்ச்சியோடு இறைவனுக்கு நமது தினசரிப் பணி மற்றும் குடும்பத்தின் வழியாக புகழ்சேர்த்து, நம்மால் முடிந்தவரை சமூக சேவைகளில் ஈடுபட்டு இறைவனுக்கு திருப்பணி செய்வோம். எந்த சூழலிலும் நம்மை கைவிடாமல் கடைசிவரை நம்மை அவர் பாதுகாத்து நமக்குத் துணைசெய்வார் என்ற புதிய நம்பிக்கையோடு நன்றியுள்ள ஒரு வாழ்வு வாழ்வதற்கு இறைவன் தாமே நம் அனைவருக்கும் தமது அருளையும் ஆற்றலையும் தந்தருள்வாராக. ஆமென்.

சங்கீதங்கள் கற்றுத்தரும்விலையேறப்பெற்ற சத்தியங்கள். தொடரும்......



ஆசிரியர்: அருட்திரு. அறிவர். டி. சுரேஷ் ராஜன்,
இணை நிறுவனர், வேதாகம மொழிபெயர்ப்பு முயற்சிகள், கோயம்புத்தூர். தென்னிந்தியா.