AUTHOR: REV.SJD Dharmaraja
இங்கு, கடவுளை தனது ஆசிரியராக சித்தரிக்கிறார் தாவீது (வச-4). அவர் கடவுளிடம்: “கர்த்தாவே, உம் வழிகளை எனக்கு காண்பியும், உம் பாதைகளை எனக்குக் கற்பித்தருளும்” என்று கேட்கிறார். அவர் கர்த்தரால் வழிநடத்தப்பட விரும்புகிறார், ஏனென்றால் கடவுள் ஒரு நல்ல-நேர்மையான ஆசிரியர் என்பதை அவர் அறிவார் (வச-8). கடவுளிடம் போதனைகளை பெற்றுக்கொள்வது குறித்து, தாவீது மூன்று காரியங்களை குறிப்பிடுகிறார்.
முதலாவதாக: “கர்த்தர் பாவிகளுக்கு தம் வழியைப் போதிக்கிறார்” (வ-8). எனவே, நாம் பாவம் செய்தவர்களாய் இருந்தாலும் கடவுளிடம் வரத் தயங்க வேண்டியதில்லை. “கர்த்தருடைய எல்லா வழிகளும் இரக்கம் நிறைந்தவை” (வச-10) என தாவீது உறுதிப்படுத்துகிறார். கர்த்தர், நம் ஜெபம் கேட்டு, நம் குற்றம்-குறைகளை மன்னித்து நம்மை சேர்த்துக்கொள்கிறார் (வச-18).
இரண்டாவதாக: கர்த்தர், சாந்தகுணம் உள்ளவர்களுக்குத் தம் வழியைப் போதிக்கிறார் (வச-9). எனவே, நாம், சாந்த குணத்தை (மனத்தாழ்மையை) கற்றுக்கொள்ளவேண்டும் (மத். 11:29). பெருமையுள்ளவர்கள் கடவுளை நோக்கிப் பார்க்க முடியாத அளவுக்கு இழிவானவர்களாக இருக்கிறார்கள். “பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்; தாழ்மை உள்ளவர் களுக்கோ, கிருபை அளிக்கிறார்.” (1பேது. 5:5) என்பதை வேதம் தெளிவுபடுத்துகிறது. இன்றே, கர்த்ருடைய வழிகளை கற்றுக்கொள்ள நம்மை தகுதிப்படுததும் வகையில் மனத் தாழ்மையைக் கடைபிடிக்க உறுதியேற்போம்.
மூன்றாவதாக: கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களுக்கு தாம் தெரிந்து கொள்ளும் வழியைப் போதிப்பார் (வச-12). கர்த்தருக்குப் பயப்படுவது என்பது கடவுளைக் கண்டு அஞ்சி ஒடுவதோ, ஒளிந்துகொள்வதோ அல்ல. பரிசுத்த கடவுள் நம்மை எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்ற நினைவுடன் தீமைக்கு விலகி, தூய வாழ்வு வாழ்வது ஆகும். இவ்வாறு, நாம் கடவுளுக்கு பயப்படும் தூயவாழ்வு வாழும்போது கடவுள் தம் வழியை நமக்குப் போதிப்பார். பாவமன்னிப்பின் நிச்சயத்தை நாம் பெற்றுக்கொள்வோம், மனத்தாழ்மையை அணிந்து கொள்வோம், கிறிஸ்துவுக்குள் தூய-வாழ்வு வாழ நம்மை அர்ப்பணிப்போம்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா, ஊழிய இயக்குநர்
இரட்சிப்பு ஊழியங்கள், சென்னை-93, தென்னிந்தியா