சகோ. எம். அசரியா ஞானதாஸ் எம்.ஏ; எம்.எட்
பிரான்ஸ் தேசத்தில் ‘டேரியஸ்’ என்ற இளைஞன் அரசுக் கருவூலத் தில் பணி செய்து வந்தான். கவனக்குறைவில் ஏற்பட்ட தவறினால், டேரியஸின் கணக்கில் பெருந்தொகை வித்தியாசம் ஏற்பட்டது. இச்செய்தியை அறிந்த பிரான்ஸின் சிற்றரசன் டேரியஸிடம், “இன்னும் ஒரு மாதத்திற்குள் கணக்குகளை ஒப்படைக்க வேண்டும்” என உத்தரவிட்டான். டேரியசுக்கு என்ன செய்வதென புரியவில்லை. இரவு - பகலாக உட்கார்ந்து கணக்கை முடித்தபோது, கணக்கில், இன்னும் பெரிய வித்தியாசம் காணப்பட்டது. முடிவில், அந்த பெருந்தொகையை டேரியஸ் தன் கையிலிருந்து கட்டவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த டேரியஸ், ஒர் இரவில், தன் தலைமாட்டில் துப்பாக்கியை வைத்து, அருகில், “இப்பெருந்தொகையை கட்ட என்னிடம் பணம் இல்லை, எனவே நான் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்” என எழுதிவைத்தான்; ஆனால், அயர்ந்து தூங்கிவிட்டான்.
அன்று இரவு மாறுவேடத்தில் களஆய்வு சென்ற சிற்றரசன், இரவு 2மணிக்கு டேரியசின் வீட்டை கடந்துசென்றபோது அங்கு விளக்கு எரிந்துகொண்டிருந்ததால் உள்ளே சென்று, டேரியஸின் கடிதத்தைக் கண்டு, அதைப் படித்தார். பின்னர், அதே காகிதத்தில், “டேரியஸ்! நீ நாளை காலை அரன்மனைக்கு வந்து என்னை சந்திக்கவும்” என எழுதிவைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.
காலையில் விழித்து, சிற்றரசனின் கட்டளையை கண்டு திடுக்கிட்ட டேரியஸ், அழுதுகொண்டே அரன்மனைக்கு ஓடினான். என்ன ஆச்சரியம்! அவனுடைய கண்ணீரைக் கண்ட சிற்றரசன், “டேரியஸ்! நான் உன் தவறுகளையும், அபராத தண்டனையையும், கிறிஸ்து மன்னித்ததைப் போல் மன்னித்துவிட்டேன்; இனி உன் வேலையை ஜாக்கிரதையுடன் செய்” என ஆலோசனை கூறினான். நிம்மதி பெருமூச்சு விட்ட டேரியஸ், அன்றுமுதல் தன் பணிகளை கவனத்துடன் செய்து, சாட்சியுள்ள கிறிஸ்தவனாக மகிழ்ச்சியுடன் வாழத்தொடங்கினான்.
பிரியமானவர்களே! அந்த சிற்றரசனைப்போல் பிறர் குற்றங்களை மன்னிக்க தேவன்; நம்மை அழைக்கிறார். நாம் எந்த அளவினால் அளக்கிறோமே அதே அளவினால் நமக்கும் அளக்கப் படும். நாம் பிறர் தவறுகளை மன்னிக்கிறபோது நம் குற்றங்களை இயேசு சுவாமி நமக்கு மன்னிப்பார். எனவே, நாமும், கிறிஸ்துபோல் மன்னிப்போம்,
வேதம் இவ்வாறு கூறுகிறது:
கிறிஸ்து மன்னித்ததுபோல் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். எபே-4:32
ஆண்டவரே நீர் நல்லவரும் மன்னிக்கிறவருமாயிருக்கிறீர். சங்-86:5
என் அக்கிரமம் பெரிது. உம் நாமத்தினிமித்தம் மன்னியும். சங்-25:11