Salomi
EPISODE-38
September 2025
இந்திய கிறிஸ்தவ திருச்சபை சரிதை: (1முதல் 21ம் நூற்றாண்டுவரை) தொகுதி-8 பகுதி-3
8. ஒளியும் நிழலும்
3. திருச்சபை கவுன்சில்கள்

வரலாற்றில் திருச்சபை கவுன்சில்கள் (ECUMENICAL COUNCILS), கிறிஸ்தவத் திருச்சபையின் முக்கியமான கோட்பாடுகள் மற்றும் ஒழுங்குமுறைகள் பற்றி முடிவுசெய்யும் மாநாடுகள் ஆகும். இந்த கவுன்சில்கள், திருச்சபை-போதனைகளை தெளிவு படுத்தவும், கிறிஸ்தவம் பற்றிய அடிப்படை கேள்விகளுக்கு பதிலளிக்கவும், திருச்சபைக் கோட்பாடுகளை உருவாக்கவும், சவால்களை எதிர்கொள்ளவும், பிளவுகளை சரிசெய்யவும் தேவையான தீர்மானங்களை எடுப்பதில் முக்கிய பங்கு வகித்தன.

திருச்சபை வரலாற்றில் முதல் ஏழு கிறிஸ்தவ கவுன்சில்கள்: நைசியா முதல் கவுன்சில் (கி.பி. 325), கான்ஸ்டான்டினோபிள் முதல் கவுன்சில் (கி.பி. 381), எபேசஸ் கவுன்சில் (கி.பி. 431), சால்செடன் கவுன்சில் (கி.பி. 451), கான்ஸ்டான்டினோபிள் இரண்டாம் கவுன்சில் (கி.பி. 553), கான்ஸ்டான்டினோபிள் மூன்றாம் கவுன்சில் (கி.பி. 680-681), மற்றும் நைசியா இரண்டாம் கவுன்சில் (கி.பி. 787). இந்த 7-கவுன்சில்களும் கிழக்கு மரபுவழி மற்றும் ரோமன் கத்தோலிக்க திருச்சபைகளின் அங்கீகாரம் பெற்றவை. இவை, முக்கிய இறையியல் கொள்கைகள் மற்றும் திருச்சபை கோட்பாடுகளை வரையறுத்தன.

15ம் நூற்றாண்டு: முக்கியமான சர்ச் கவுன்சில்களான பிசா கவுன்சில் (கி.பி. 1409), கான்ஸ்டன்ஸ் கவுன்சில் (கி.பி. 1414-1418), பாவியா-சியெனா கவுன்சில் (கி.பி. 1423-1424), மற்றும் பாசல்-ஃபெராரா-ஃப்ளோரன்ஸ் கவுன்சில் (கி.பி. 1431-1449) ஆகியவை மேற்கத்திய பிளவுகளை சரிசெய்வதிலும் திருச்சபைளை சீர்திருத்துவதிலும் கவனம் செலுத்தின. இந்த கவுன்சில்கள் போப்பாண்டவர் அதிகாரம், போப்பாண்டவர் பதவிக்கான உரிமைக்கோரல்கள், போப்பை தெரிவுசெய்வதில் சமரசம், போன்ற திருச்சபையின் பிரச்சினைகளில் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டின, மாத்திரமல்ல, ‘போப்பை விட கவுன்சில் உயர்ந்தது’ என்ற கிழக்கத்திய திருச்சபையின் கருத்தை உறுதிசெய்தன.

16ம் நூற்றாண்டு: இந்த காலகட்டத்தில் மிக முக்கியமானது டிரென்ட் கவுன்சில் (கி.பி. 1545-1563) ஆகும். இது புராட்டஸ்டன்ட் சீர்திருத்தத்திற்கு பதிலளிக்கும் விதமாக அமைந்தது. இது கத்தோலிக்க கோட்பாட்டை தெளிவுபடுத்துவதையும் திருச்சபைச் சீர்திருத்த சவால்களை எதிர் கொள்வதையும் குறித்து ஆலோசித்தது. முடிவில், இக்கவுன்சில், புராட்டஸ்டன்ட் கோட்பாடு களை நிராகரித்து கத்தோலிக்க போதனைகளை மீண்டும் உறுதிப்படுத்தியது. முன்னதாக, ஐந்தாவது லேட்டரன் கவுன்சில் (கி.பி. 1512-1517) டிரென்ட் கவுன்சிலுக்கு முன்பு, சீர்திருத்தத்தின் மேன்மையையும் எடுத்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

17 முதல் 20 நூற்றாண்டுகள் வரை: கத்தோலிக்க திருச்சபையின் முன் 20 எக்குமெனிகல் கவுன்சில்கள் இருந்தபோதிலும், 20ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான சர்ச் கவுன்சில், வத்திக்கான் இரண்டாம் கவுன்சில் (கி.பி. 1962-1965) ஆகும். இது மிகச் சமீபத்திய கிறிஸ்தவ சபை கூடுகையாகும். முதல் கூட்டம் கி.பி. 1948ல் நடைபெற்றது. இது நவீன உலகின் சவால் களை நிவர்த்தி செய்வதையும், திருச்சபைக்குள் அக்ஜியோர்னமென்டோ (புதுப்பித்தலைக் கொண்டுவருதல் என பொருள்படும் இத்தாலியச் சொல்) என்ற சொல்லை பிரயோகித்தது. மேலும் இது கிறிஸ்தவ பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உலகளாவிய அமைப்பான ‘உலக சர்ச்சுகளின் கவுன்சில்’ எனப்பட்டது. இது போப் ஜான் XXXIII அவர்களால் கூட்டப்பட்டு போப் பால் VI-ன் கீழ் முடிவடைந்தது. திருச்சபையைப் புதுப்பித்து நவீனமயமாக்குவதையும், பிற கிறிஸ்தவ சபைகள் மற்றும் மதங்களுடன் நல்லுறவை ஏற்படுத்தி, கிறிஸ்தவ ஒற்றுமையை வளர்ப்பதையும் இந்த கவுன்சில் நோக்கமாகக் கொண்டது. இது வழிபாட்டு முறை, வெளிப்பாடு, திருச்சபை மற்றும் நவீன உலகின் திருச்சபை பற்றிய நான்கு முக்கிய அரசியலமைப்புகள் உட்பட பதினாறு ஆவணங்களை உருவாக்கியது. இருப்பினும், கிழக்கு மரபுவழி திருச்சபை, ஏழு கிறிஸ்தவ கவுன்சில்களில் கடைசியான நைசியா இரண்டாம் கவுன்சிலைத்தான் (கி.பி. 787) அங்கீகரிக்கிறது. இந்த கவுன்சில் ஐகானோக்ளாசம் (உருவ வழிபாடு) பிரச்சினையை ஆராய்ந்து, மதசின்னங்களை வணங்கலாம் ஆனால், மேன்மையாக எண்ணி போற்றக்கூடாது என்பதை உறுதிப்படுத்தியது.

இந்தியாவில் சமய சமரசம்: ECUMENISM என்ற பெயரில் தென்னிந்திய திருச்சபையும் (CSI), ஆங்கிலிக்கன் சபைகளும் (ANGLICAN CHURCHES), மெத்தடிஸ்ட் சபைகளும் (METHODIST CHURCHES), பிரெஸ்பைடேரியன் சபைகளும் (PRESBYTERIAN CHURCHES), காங்கிரிகேஷனல் சபைகளும் (CONGREGATIONAL CHURCHES), இணைந்து ஒரே அமைப்பாக நாடு சுதந்திரம் பெற்ற கி.பி. 1947ல் இருந்தே UNITED CHURCHES IN INDIA என்ற பெயரில் கி.பி. 1992முதல் இயங்கி வருகின்றன. இவ்வமைப்பு, ரோமன் கத்தோலிக்க மற்றும் பெந்தகொஸ்தே திருச்சபைகளுடன் ஒத்துழைப்ப தற்கான பல சமய சமரச மாநாடுகளை நடத்திக் கொண்டு வருகின்றது. இத்தகைய மாநாடுகளை 15ம் நூற்றாண்டிற்கு முன்பே ரோமன் கத்தோலிக்க திருச்சபை நடத்தியதை நாம் வரலாற்றில் கண்டோம். இந்த திருச்சபை கவுன்சில்கள் கிறிஸ்தவ வரலாற்றில் திருச்சபையின் வளர்ச்சிக்கும், மாற்றத்திற்கும் ஒரு முக்கிய அடையாளமாகக் கருதப்படுகின்றன.

இந்திய கிறிஸ்தவ திருச்சபை வரலாறு தொடரும்...
Author: Dr. Mrs. Salomi Manohar
Asst. Professor Rtd., (Pope’s College, Sawyerpuram) Thiruvanmiyur, Chennai. South India