AUTHOR: REV.DR. D.SURESH RAJAN
சங்கீதம் - 113சங்கீதம்-113 மைய வசனங்கள்:
6. கர்த்தர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.
7. அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.
8. அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார்.
9. மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார். அல்லேலூயா.
முன்னுரை:
இந்த சங்கீதம் ஆண்டவருடைய மாட்சியையும், இரக்கத்தையும், தாழ்ந்தவர்களை உயர்த்தும் அவருடைய அருஞ்செயலையும் எடுத்துக்காட்டுகிறது. நாம் வாழும் இவ்வுலகில், மற்ற வர்களின் நலவாழ்வை யாரும் விரும்புவதில்லை. அடுத்தவரின் துன்பத்தில் இன்பம் காணும் சமூகத்தில் நம்மை தூக்கி விடுவதற்கும் ஆதரிப்பதற்க்கும் ஆண்டவர் நம் பட்சத்தில் இருக்கிறார் என்பதை இங்கு சங்கீதக்காரர் படம் பிடித்து காட்டுகிறார்.
1. உயர்ந்த ஆண்டவரைப் புகழ்வோம்: (வச.1-5)
“ஆண்டவரின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள். கீழ்த்திசை முதல் மேற்றிசை வரை அவரது பெயர் போற்றப்படவேண்டும் ஏனென்றால் மக்கள் இனங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர்; அவரது மாட்சி வானங்களையும்விட உயர்ந்தது” நமது சூழ்நிலைகள் மாறலாம்; ஆனால் ஆண்டவர் மாறுவதில்லை. நமக்கு ஆசீர்வாதம் கிடைத்தாலும், சோதனை வந்தாலும், ஆண்டவர் என்றென்றும் புகழுக்குரியவரே என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
2. தாழ்ந்தவர்களைப் பார்க்கும் ஆண்டவர்: (வச.6)
“கர்த்தர் வானத்தையும் வையகத்தையும் குனிந்து பார்க்கின்றார்.” இது ஆண்டவருடைய இருதயத்தை வெளிப்படுத்துகிறது. அவர் வானத்தில் உயர்ந்தவராக இருந்தாலும், பூமியில் துன்பப்படுகிறவர்களைப் பார்க்கிறார். மனிதர்களால் கவனிக்கப்படாத வர்களை ஆண்டவர் தவறாமல் கவனிக்கிறார். மனிதர்களால் மறக்கப்பட்டவர்களை ஆண்டவர் நினைவில் வைத்திருக்கிறார். மனிதர்களால் மதிக்கப்படாதவர்களை ஆண்டவர் ஏற்புடன் மதிக்கிறார். ஏழைகளின் கண்ணீரையும், தனிமையில் இருப்பவர்களின் வேதனை யையும், நம்பிக்கை இழந்தவர்களின் உள்ளத்தையும் ஆண்டவர் பார்க்கிறார்.
ஆகவே, நம்முடைய வாழ்க்கையின் எந்நிலையிலும் நாம் ஆண்டவருடைய பாராமரிப்புக் கும் பார்வைக்கும் வெளியே இல்லை என்ற உண்மையை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
3. விழுந்தவர்களை உயர்த்தும் ஆண்டவர்: (வச.7-9)
“தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது, ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும்” (வச. 7,8).
“ஏழைகளைத் தூசியிலிருந்து அவர் தூக்கி நிறுத்துகின்றார்: வறியரைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி விடுகின்றார்.” (வச. 8).
இது இந்தப்பாடலின் மையச் செய்தி. ஆண்டவர் தாழ்ந்தவர்களைப் பார்ப்பது மட்டுமல்ல; அவர்களைத் தூக்கி நிறுத்துகிறார். தூசியில் இருப்பவரை உயர்த்துகிறார். குப்பை மேட்டில் இருப்பவரைக் கைதூக்குகிறார். மக்களால் ஒதுக்கப்பட்டவர்களுக்கு மதிப்பளிக்கிறார்.
மலடியின் வீட்டில் மகிழ்ச்சியை உருவாக்குகிறார். மனிதர்கள் ‘இது முடியாது’ என்று சொல்லும் இடத்தில் ஆண்டவர் புதிய வழியைத் திறக்க முடியும். எனவே வாழ்க்கையில் விழுந்துவிட்டோம் என்று நினைக்கத் தோன்றும் பொழுதும் நாம் நம்பிக்கையை இழக்க வேண்டிய அவசியமில்லை.
அதேபோல், ஆண்டவர் நம்மை உயர்த்தியிருப்பின், நாமும் மற்றவர்களை உயர்த்த வேண்டும். ஏழைகள், துன்பப்படுகிறவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், நம்பிக்கையிழந்தவர்கள் போன்றோரை பராமரித்து பாதுகாப்பதோடு, அவர்கள் உயர்வுக்கு நமது பங்களிப்பை செய்யவேண்டும்.
முடிவுரை:
இந்தச் சங்கீதத்தின் முழு செய்தியையும் மூன்று வாக்கியங்களில் நாம் நினைவில் வைத்துக்கொள்ளலாம்:
1. ஆண்டவர் உயர்ந்தவர் - அவரைப் புகழ்வோம்.
2. ஆண்டவர் இரக்கமுள்ளவர் - அவரை நம்புவோம்.
3. ஆண்டவர் தாழ்ந்தோரை உயர்த்துகிறார் - நாமும் தாழ்ந்தோரை உயர்த்துவோம். ஆண்டவரது பெயர் வாழ்த்தப் பெறுவதாக!
இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப் பெறுவதாக! அல்லேலூயா! ஆமென்.
சங்கீதங்கள் கற்றுத்தரும்விலையேறப்பெற்ற சத்தியங்கள். தொடரும்......
ஆசிரியர்: அருட்திரு. அறிவர். டி. சுரேஷ் ராஜன்,
தலைவர் (இந்திய மறை மாநாடு), குளோபல் மெத்தடிஸ்ட் திருச்சபை.
AUTHOR: REV. DR. D. SURESH RAJAN,
CONFERENCE SUPERINTENDENT, INDIA ANNUAL CONFERENCE,
GLOBAL METHODIST CHURCH IN INDIA.