Azariah Gnanadoss
கதை எண்: 185
October 2026

பாவிகளைச் சந்தித்த பாதி-வேதம்

சகோ. எம். அசரியா ஞானதாஸ் எம்.ஏ; எம்.எட்


ROY-ROSELET தம்பதியர், குடும்பமாக பின்லாந்தில் வாழ்ந்துவந்தனர். அவர்கள், தேவனை அறியாமல், தெய்வபயமற்றவர்களாய் வாழ்ந்து வந்ததால் தங்கள் பிள்ளைகள் இருவரையும் தெய்வ பக்தியில் வளர்க்கவில்லை. இருவரும் புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவர்கள்; தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனர்.

ஒருநாள் ஒரு புத்தக வியாபாரி அவர்கள் வீட்டிற்கு வந்து, பல புத்தகங்களோடு ஒரு புதிய ஏற்பாட்டையம் காட்டி அவற்றை வாங்கிக்கொள்ளச் சொன்னான். எனவே ROSELET அந்த புத்தகங்களோடு, புதிய ஏற்பாட்டையும் வாங்கிக் கொண்டாள். அன்றிரவு ROY வீடு திரும்பியதும் அவனிடம் புத்தகங்களைக் காட்டினாள். ROY தெய்வபயம் இல்லாத முரடனாய் இருந்தபடியால், அவன் அந்த புதிய ஏற்பாட்டை இரண்டாக கிழித்து ஒருபகுதியை தான் வைத்துக்;கொண்டு மறுபகுதியை ROSELET-டிடம் கொடுத்தான்.

நாட்கள் கடந்தன, ROY 3மாத பணிக்காக அவனுடைய கம்பெனியின் கிளைக்கு அனுப்பப்பட்டான். அங்கு, தனியாக இருக்க நேர்ந்ததால், தன்னிடம் இருந்த பாதி-புதிய ஏற்பாடு புத்தகத்தை படிக்க ஆரம்பித்தான். லூக்கா 15ம் அதிகாரத்தின் பின் பகுதியில், கெட்ட குமாரன் தன் தகப்பனிடம் திரும்பி வந்த சம்பவம் அவன் கண்ணில் பட்டு அதை வாசிக்கலானான். இளைய மகனை தகப்பன் ஏற்றுக்கொண்ட சம்பவத்தை அவன் வாசித்தவுடன் அந்த அதிகாரத்தின் முன்பகுதியை வாசிக்க ஆவல் அதிகரித்தது. எனவே, வீடு திரும்பும் நாளுக்காக ஆவலுடன் காத்திருந்தான். 3மாதங்கள் முடிந்து வீடு திரும்பியதும் முதல் வேலையாக லூக்கா 15ம் அதிகாரத்தை முழுவதுமாக படித்தான். ஒரு சாதாரண தகப்பனின் அன்பு ஆஸ்தியை அழித்துப்போட்ட மகனை மன்னிக்கக்கூடுமாயின் இயேசு கிறிஸ்துவின் தேவ அன்பு, முரட்டாட்டமும் தெய்வபயமின்மையும் நிறைந்த தன்னையும் தன் குடும்பத்தையும் நிச்சயம் ஏற்றுக்கொள்ளும் என விசுவாசித்து, தன் பாவங்களை அறிக்கையிட்டு, இயேசுவை ஏற்றுக்கொண்டு திருச்சபையில் குடும்பமாய் இணைந்தான். ROY-ROSELET குடும்பத்தினரின் மனந்திரும்பிய ஜெபவாழ்க்கையின் பயனாக தேவன் அவர்களை அபரிமிதமாக ஆசீர்வதித்தார். மகனை இஞ்சினியர் ஆகவும் மகளை டாக்டர் ஆகவும் கர்த்தர் உயர்த்தினார்.

பிரியமானவர்களே! நாமும் வேதம் வாசிப்பு, ஜெபத்தியானம் என, தூய வாழ்வு வாழும்போது கர்த்தர் நம்மையும் நம் குடும்பத்தையும் அளவில்லாமல் ஆசீவதிப்பார். வேதம் இவ்வாறு கூறுகிறது:

கர்த்தருடைய வேதம் குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது. சங்-19:7
கர்த்தருடைய வேதத்தில் இரவும் பகலும் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். சங்-1:2
கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம். நீதி-2:8




M.AZARIAH GNANADOSS M.A; M.ED
EDITOR, RATCHIPPU TAMIL CHRISTIAN MONTHLY, SALIGRAMAM, CHENNAI-93. MOBILE:9962924900