Salomi
EPISODE-51
October 2026
இந்திய கிறிஸ்தவ திருச்சபை சரிதை: (1முதல் 21ம் நூற்றாண்டுவரை) தொகுதி-10 பகுதி-04
10. மீண்டும் தாமஸ் கிறிஸ்தவர்கள்:
4. ஒரு நூற்றாண்டின் இறுதியில்

17ம் நூற்றாண்டு, இந்தியாவின் தாமஸ் கிறிஸ்தவர்களுக்கு குறிப்பிடத்தக்க பலவித கஷ்;டங்களையும் எழுச்சிகளையும் கொண்ட காலமாக இருந்தது. போர்த்துகீசியர்கள் அவர்களை ரோமத் திருச்சபையின்கீழ் கொண்டுவர முயற்சித்ததன் விளைவாக சுயாட்சி இழப்பு, கலாச்சார சீர்குலைவு மற்றும் நிரந்தர சமூக-பிளவு போன்ற பிரச்சனைகளை தாமஸ் கிறிஸ்தவர்கள் சந்திக்க நேர்ந்தது.

இந்திய கிறிஸ்தவ வரலாற்றில் கி.பி.1498 முதல் 1863வரை போர்த்துகீசியரின் காலகட்டமாக கருதப்படுகிறது. தாமஸ் கிறிஸ்தவர்களின் போர்த்துகீசிய தொடர்பு கிபி.1498ல் தொடங்கி, சுமார் 160 ஆண்டுகள் உச்சத்தில் இருந்தது. கிழக்கு திருச்சபையுடன் தனித் தொடர்பை பராமரித்து வந்த தாமஸ் கிறிஸ்தவர்கள் மீது கட்டுப்பாட்டை நிலைநாட்ட போர்த்துகீசியர் முயன்றனர்.

1.போர்த்துகீசியர், கிறிஸ்தவ நம்பிக்கையைத் தீவிரமாகப் பரப்பினர். சுவிசேஷப் பயிற்சி பெற்றவர்கள் மூலமாக நேரடியாக சுவிசேஷப் பணியில் ஈடுபட்டனர்.
2.போர்த்துகீசியரின் டயம்பர்-பேரவை (கி.பி.1599) தாமஸ் கிறிஸ்தவர்களை ரோம திருச்சபைக்கு உட்படுத்தி, ரோம வழிபாட்டு முறைகளை அவர்கள்மீது திணித்தது.
3.போர்த்துகீசியர்;, தாமஸ் கிறிஸ்தவர்கள் உள்ளுர் இந்து ஆட்சியாளர்களுடன் வைத்திருந்த உறவுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தினர்.
4.தாமஸ் கிறிஸ்தவர்களின் போர்த்துகீசிய எதிர்ப்பு, கூனன் கிராஸ் (கி.பி.1653) உறுதிமொழிக்குப் பின்னர் உச்சத்தை அடைந்தது, அங்கு அவர்கள் ஐரோப்பிய மதகுருக்களின் அதிகாரத்தை நிராகரிப்பதாக சபதம் செய்தனர். இது, தாமஸ் கிறிஸ்தவர்களின் ஒற்றுமையை உடைத்து, பிரிவினைக்கு வழிவகுத்தது.
5.போர்த்துகீசிய எதிர்ப்பு, தாமஸ் கிறிஸ்தவ சமூகத்திற்குள் நிரந்தரப் பிளவுக்கு வழிவகுத்தது, சிலர் ரோமுக்கு விசுவாசமாக இருந்தனர், சிலர் புதிய பிரிவுகளை உருவாக்கினர், சிலர் கிழக்கு சிரிய திருச்சபைக்கு விசுவாசமாய் இருந்தனர்.
6.போர்த்துகீசியர்கள் பண்டைய தேவாலயங்களை அழித்து, கிழக்கு திருச்சபைத் தொடர்பில் மெசபடோமியாவிலிருந்து வந்த மதகுருமார்களை இடைமறித்து சிறையில் அடைத்து பாரம்பரிய நடைமுறைகளை நசுக்கினர்.
7.தாமஸ் கிறிஸ்தவர்கள் தங்கள் சுயாட்சியை இழந்து, போர்த்துகீசியர் திணித்த சடங்குகள் மற்றும் கோட்பாடுகளுக்கேற்ப மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
8.வேலை வாய்ப்புகளில் கிறிஸ்தவர்களுக்கு போர்த்துகீசியர் முன்னுரிமை அளித்தனர். அரசுப்பணிகளில் கிறிஸ்தவர்கள் மட்டுமே சேரமுடியும் என உத்தரவு இடப்பட்டதால், பலர் வேலைக்காக கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றினர்.
9.போர்த்துக்கீசியர், பல வழிபாட்டுத் தலங்களைக் கட்டினார்கள். துறவிகளும் இந்தப் பணியில் பங்கெடுத்துக் கொண்டனர்.
10.போர்த்துக்கீசியர், அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி பிற மதத்தினரை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயன்றனர். வெள்ளை நிறமுடைய அழகிய இந்திய பெண்களை திருமணம் செய்துகொள்ள வீரர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.
11.தொடக்கப்பள்ளிகளை நிறுவி குழந்தைகள் பலரை பள்ளியில் சேர்க்க நிதி உதவியையும் போர்த்துக்கீசியர் வழங்கினர்.
12.கி.பி.1506ல், வைஸ்ராய் பிரான்சிஸ் டி அல்மீடியா, கொச்சியில் ஒரு மருத்துவ மனையை (ஹோலிகிராஸ் மருத்துவமனை) தொடங்கினார். மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பிரார்த்தனை செய்ய மதகுருமார் தொடர் வருகை செய்தனர்.

திருச்சபையானது, கத்தோலிக்க நம்பிக்கை மற்றும் நல்நெறிமுறைகளை அறிவுறுத்துவதில் சிறந்து விளங்கினாலும், முறையாக பயிற்சி பெறாத, நல்லொழுக்கமற்ற, விவேகமற்ற பல்வேறு மதக் கொள்கைகளைக் கொண்ட பலர் அதில் பணியாற்றினர். இத்தகைய பிரச்சனைகள் இருந்த போதிலும், குர்பான், நற்கருணை, ஞாயிறு வழிபாட்டின் கூட்டுறவு, தாழ்மையான காணிக்கை களைச் செலுத்த வலியுறுத்துதல் போன்ற பிரதி ஞாயிறு ஆராதனைத் தொடர்ச்சியைப் பராமரிக்க, திருச்சபை தொடர்ந்து ஒற்றுமையின் வலுவான உணர்வைப் பேணியது.

சாராம்சத்தில், போர்த்துகீசியரின் அதிகாரத்தைத் தக்கவைக்கவும், அவர்களுக்காக வேலை செய்யவும் பல நாட்டினர் முயன்றனர். இவ்விதங்களில், தாமஸ் கிறிஸ்தவர்கள் கலாச்சார அடையாள இழப்பு மற்றும் சமூகப் பிளவு போன்ற பல்வேறு துன்பங்களை அனுபவித்த நிலையிலும், மீண்டுமாக வெவ்வேறு குழுக்களை சமரசம் செய்து ஒற்றுமையை மீட்டெடுக்க தாமஸ் கிறிஸ்தவ சமூகத்திற்குள் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரும்பாலான தாமஸ் கிறிஸ்தவர்கள் இந்தியாவின் கேரளாவில் வசிக்கும் அதே வேளையில், மேற்கத்திய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.



இந்திய கிறிஸ்தவ திருச்சபை வரலாறு தொடரும்...
Author: Dr. Mrs. Salomi Manohar
Asst. Professor Rtd., (Pope’s College, Sawyerpuram) Thiruvanmiyur, Chennai. South India