Vedha Aratchi
EPISODE-100
October 2025
சங்கீதங்கள் கற்றுத்தரும் விலையேறப்பெற்ற சத்தியங்கள்

AUTHOR: REV.DR. D.SURESH RAJAN

சங்கீதம் - 101

திருமறை காட்டும் தூய வாழ்வு

அறிமுகம்:

இந்த திருப்பாடலில் தாவீது ஒரு ராஜாவாக, தன் தனிப்பட்ட வாழ்விலும், ஆட்சியிலும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வகுத்துக் கூறுகிறார். இந்த அற்புதமான பாடலின் வரிகள், ஆண்டவரில் அன்புகூறும் உள்ளமும், நேர்மை யான வாழ்வும் எவ்வளவு முக்கியம் என்பதை நமக்குக் காட்டுகின்றன.

1. இரக்கமும் நீதியும் இணைந்த இறைவன்: (வச-1)

தாவீது, “இரக்கத்தையும் நீதியையும் குறித்துப் பாடுவேன்: ஆண்டவரே, உமக்கே புகழ் சாற்றிடுவேன்.” (வச.1) என்று சொல்லுகிறார். தேவன் இரக்கமுள்ளவரும் நீதியுள்ளவரும் ஆவார். நாமும் அந்த இயல்பை நம் வாழ்க்கையில் காட்ட வேண்டும். அதிக இரக்கம் மட்டும் இருந்தால் ஒழுக்கம் குறையும்; நீதி இருந்தால் நியாயம் வரும். ஆனால் இரண்டும் இணைந்து இருந்தால் அது கடவுளின் அன்பை வெளிப்படுத்தும். தேவன் நீதியுள்ளவர், ஆகவே பாவம் தண்டிக்கப்பட வேண்டும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களை தன்மீது ஏற்றுக்கொண்டு தமது அன்பை வெளிப்படுத்தினார். “ஆனால், நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார்.” (ரோம.5:8). நாமும் இரக்கம் மற்றும் நீதி ஆகியவற்றை ஒருங்கே கடைபிடிக்கிறவர்களாக வாழும்போது பூரண அன்பை வெளிப்படுதுகிற கடவுளின் பிள்ளைகளாய் வாழமுடியும்.

2. வீட்டிலிருந்து தொடங்கும் பரிசுத்தம்: (வச-2,3,4)

தாவீது, “மாசற்ற வழியே நடப்பதில் நான் கருத்தாயிருக்கிறேன். எப்பொழுது நீர் என்னிடம் வருவீர்? தூய உள்ளத்தோடு என் இல்லத்தில் வாழ்வேன். இழிவான எதையும் என் கண்முன் வைக்கமாட்டேன். நெறிதவறியவரின் செயலை நான் வெறுக்கின்றேன்: அது என்னைப் பற்றிக்கொள்ளாது. வஞ்சக நெஞ்சம் எனக்கு வெகு தொலைவில் இருக்கும்: தீதான எதையும் நான் அறியேன்.” என்று கூறுவதை இங்கு காண்கிறோம். பரிசுத்தம் முதலில் தனிநபரிலிருந்தும் அவரது வீட்டிலிருந்தும் தொடங்க வேண்டும். ஒருவன் தன் வீட்டில் நேர்மையாய், உண்மையாய் நடக்காவிட்டால் பணித்தளத்தில், கடைத்தெருவில், திருச்சபையில், பொதுவெளி யில் தூய்மையான வாழ்வு வாழ முடியாது. உள்ளத்திலும் இல்லத்திலும் பரிசுத்தம் இருந்தால், அதுவே சமுதாயத்திற்கும் சாட்சியாகும்.

3. நல்லவர்களுடன் நட்பு: (வச-5, 6)

தாவீது அரசர், :எனக்கு அடுத்திருப்போரில் மறைவாகப் பழிப்போரை நான் ஒழிப்பேன்: கண்களில் இறுமாப்பும் உள்ளத்தில் செருக்கும் உள்ளோரின் செயலை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். நாட்டில் நம்பிக்கைக்குரியோரை கண்டுபிடித்து என்னோடு வாழச் செய்வேன். நேரிய வழியில் நடப்போரை எனக்குப் பணிவிடை புரியச் செய்வேன்.” என்று உறுதிபடக் கூறுவதை காண்கிறோம். தவற்றை கண்டிப்பதிலும், நற்செயலை ஊக்குவிப்பதிலும் தாவீது மிகவும் கருத்துள்ளவராக இருந்தார். ‘உன் நண்பரை எனக்கு காட்டு, நீ யார் என்று நான் கூறுவேன’| என்று ஒரு முதுமொழி உண்டு. எனவே நம் நண்பர்களைக் குறித்து ஜாக்கிரதையுள்ள வர்களாய் இருப்போம்; தீயவர்களை விட்டு நாம் விலகுவோம், ஒருவரை யொருவர் கண்காணித்து ஊக்கப்படுத்துவோம், பரிசுத்தத்தில் வளரும்படிக்கு நாம் நல்லவர்களோடு இணைந்து, விசுவாச வாழ்வில் உறுதியாய் நிலைத்திருக்க நம்மை அர்ப்பணிப்போம்.

4. பாவத்திலிருந்து பிரிந்து வாழ்தல்: (வச-7, 8)

“வஞ்சனை செய்வோருக்கு என் மாளிகையில் இடமில்லை. பொய் உரைப்போர் என் கண்முன் நிலைப்பதில்லை. நாட்டிலுள்ள பொல்லார் அனைவரையும் நாள்தோறும் அழிப்பேன்; தீங்கிழைப்போர் அனைவரையும் ஆண்டவரின் நகரினின்று அறவே ஒழிப்பேன்.” என தாவீது இவ்வசனங்களில் கூறுகிறார்.

தாவீது, பொய் பேசுவோரும் பெருமை கொள்ளுவோரும் தீய வழிகளில் நடப்போரும் தன் அருகில் இருக்கக் கூடாது என்று தீர்மானமாக இருந்தவர். கிறிஸ்தவர்கள் ‘அனைத்து தீமையையும் தவிர்க்க வேண்டும்’ என்று மெதடிஸிட் திருச்சபையின் நிறுவனர் ஜான் வெஸ்லி கூறியதும் இவ்வசனத்தின் சுருக்கமே. ஆக, பரிசுத்தம் என்பது சத்தியத்திலும் அன்பிலும் நடப்தோடு, பாவத்தை வெறுத்துவிடுவதும் அதிலிருந்து விலகிவிடுவதும் ஆகும்.

முடிவுரை:

தாவீது ஒரு அரசராக நல்ல தீர்மானங்களை எடுத்தார். ஆனால் இயேசுவோ, பூரண நீதியும் பூரண இரக்கமும் கொண்ட ராஜாவாக இருப்பதால், அவருடைய கிருபையால் நாம் தூய வாழ்வு வாழ வல்லவர்களாகிறோம்.

அன்பானவர்களே! கடவுளின் இரக்கதையும் நீதியையும் உடையவர்களாய், உள்ளத்திலும் இல்லத்திலும் தூய்மை உடையவர்களாய், நல்லவர்கள் மற்றும் நேர்மையாளர்களின் நண்பர் களாய், பாவத்துக்கு விலகி ஓடுகிறவர்களாய் வாழ நம்மை அர்ப்பணிப்போம். தாவீதைப்போல ஆண்டவருக்கு முன் நேர்மையான மனதுடன் நடந்தால், நம் வாழ்க்கைகூட இறைவனுக்கு உகந்ததாகவும், உலகத்திற்குச் சாட்சியாகவும் அமையும் என்பது திண்ணம். ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்

சங்கீதங்கள் கற்றுத்தரும்விலையேறப்பெற்ற சத்தியங்கள். தொடரும்......



ஆசிரியர்: அருட்திரு. அறிவர். டி. சுரேஷ் ராஜன்,
இணை நிறுவனர், வேதாகம மொழிபெயர்ப்பு முயற்சிகள், கோயம்புத்தூர். தென்னிந்தியா.