AUTHOR: REV.SJD Dharmaraja
சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன். விசுவாசிப்பவர்களுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாய் இருக்கிறது. ரோம. 1:16
“கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக்குறித்து நான் வெட்கப்படேன்” (ரோமர்-1:16) என்ற வேத-வசனம், நற்செய்தி என்பது கடவுளின் சக்திவாய்ந்த, உயிர் காக்கும் செய்தி என்பதை வலியுறுத்துகிறது. மட்டுமல்ல, கிறிஸ்தவர்கள் சிறுபான்மையாய் இருக்கிற இடம், காலம் ஆகிய சூழல்களில், வெட்கமின்றி (தயக்கமின்றி) இரட்சிப்பின் நற்செய்தி சொல்ல விசுவாசிகளை ஊக்குவிக்கிறது. 21ம் நூற்றாண்டில் வாழும் முதிர்ந்த கிறிஸ்தவர்களுக்கு ஒரு கருத்தை முன்வைக்கிறேன். இன்று நற்செய்தி பகிரப்படும்போது பொதுமக்களின் எதிர்வினை எப்படி இருக்கிறது? 50 ஆண்டுகளுக்கு முன் கடவுளின் வார்த்தை-பகிர்வுக்கு எதிர்வினை எப்படியிருந்தது? 1980களில் வாழ்ந்த கிறிஸ்தவ-நம்பிக்கை அற்ற நண்பர்கள் நற்செய்தியைக் கேட்டு சிறு விமர்சனங்களை முன்வைத்தனர். இன்று 2020களில் கிறிஸ்தவ நற்செய்தியை அறிவிப்பவர்கள் கடும் விமர்சனங் களைச் சந்திக்கின்றனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவமானப்படுத்தப்படுகின்றனர். விமர்சனங்களைத் தாண்டி நீங்கள் நற்செய்தி சொல்லும் போது உங்களை திமிர்பிடித்தவர், மோசமான அணுகுமுறை உள்ளவர், மத-சகிப்புத்தன்மை அற்றவர், அகங்காரம் பிடித்தவர் என்று குற்றச்சாட்டுகின்றனர்.
இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு நாம் உறுதியுடன் பதிலளிக்க வேண்டும். இரட்சிப்பின் நற்செய்தியைப் பகிர்வதுதான் உலகில் மிகவும் அன்பான விஷயம். “நானே வழி, சத்தியம், ஜீவன்; என் மூலமாக அல்லாமல், ஒருவனும் பிதா வினிடத்தில் வரான்” (யோவா.14:6) என்று இயேசு கூறியிருப்பதால், நம்மைச் சுற்றி வாழும் மக்கள்மீது நாம் கொண்டுள்ள அன்பினிமித்தம், நாம் உலகத்திற்கு நற்செய்தியை சொல்லியே தீரவேண்டும், அவமானங்களைச் சகித்துக்கொண்டு, “இயேசுவையன்றி வேறெவராலும் இரட்சிப்பு இல்லை; வானத்தின் கீழே மனிதர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு இயேசுவின் நாமம் அல்லாமல் வேறொரு நாமம் கொடுக்கப்படவில்லை" (அப். 4:12) என்ற உண்மையை அன்புடனும், உறுதியுடனும் சொல்ல வேண்டும். திருமறையை வாசிப்போம், அதை நேசிப்போம், ‘திருமறை மாத்திரமே’ இரட்சிப்புக்கான கடவுளின் வல்லமை என்பதை உணர்வோம். அவமானங்களைச் சகிப்போம். வெட்கத்ததையும் தயக்கங்களையும் புறம்பே தள்ளுவோம்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா, ஊழிய இயக்குநர்
இரட்சிப்பு ஊழியங்கள், சென்னை-93, தென்னிந்தியா