சகோ. எம். அசரியா ஞானதாஸ் எம்.ஏ; எம்.எட்
சுமித் என்பவர் ஒரு ஜெர்மானிய விசுவாசி. அவர், ஆப்பிரிக்கா விலுள்ள ஆதிவாசி மக்கள், இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பையும், பரலோகராஜ்ய பாக்கியத்தையும் பெறுவதற்கு ஊழியஞ்செய்ய தன்னை அர்பணித்தார். தன் சொத்துக்களை விற்றுவிட்டு ஆப்பிரிக்க காட்டுப் பகுதிக்கு மிஷனெரியாகச் சென்றார். கடுங்குளிர் பிரதேசமான ஜெர்மனியிலிருந்து கடும் வெப்பப் பிரதேசமான ஆப்பிரிக்கா போய் தங்கியதால், வெப்பம் காரணமாக அவரது வாயிலும் வயிற்றிலும் புண்கள் வந்து துன்பத்திற்குள்ளானார். மருத்துவரின் அறிவுறைப்படி ஒரு பால்தரும் ஆட்டை விலைக்கு வாங்கி அதன் பாலை மருந்தாக தினமும் குடித்து வந்தார்.
இந்நிலையில், அவரது வீட்டிற்கு விஜயம் செய்த ஆதிவாசி தலைவன், அந்த ஆட்டை தனக்கு நினைவுப்பரிசாக தரும்படி விரும்பிக் கேட்க, எவ்வித தயக்கமும் இன்றி, சுமித் அந்த ஆட்டை அவனுக்கு கொடுத்துவிட்டார். பதிலாக, ஆதிவாசி தலைவன் தனது ஈட்டியை சுமித்துக்கு பரிசாகக் கொடுத்துச்சென்றான். மறுநாளில் சுமித், அந்த ஈட்டியை கையில் பிடித்தவராய் மலைக்கிராமங்களில் நற்செய்திப் பணியாற்ற நடந்து சென்றார்.
என்ன ஆச்சரியம்! அவரைக்கண்ட ஆதிவாசிகள் சாஷ்டாங்கமாய் விழுந்து அவரை வணங்கி அவருக்கு ஆடு, மாடுகளை பரிசாக கொடுத்தனர். இதைக் கண்ட சுமித், மிகுந்த ஆச்சரியத்துடன் ஒன்றும் புரியாமல் விழித்தார். இந்த பரிசுகளும் மரியாதையும் ஈட்டி ஏந்திச்செல்லும் ஆப்பிரிக்க தலைவர்களுக்கு தரப்படுவது எனவும்; தனக்கும் அதே மரியாதை செய்யப்பட்டது என்பதை பின்னர் அவர் அறிந்துகொண்டார். “ஒரு ஆடு கொடுத்த எனக்கு, இயேசு சுவாமி அனேக ஆடு, மாடுகளை பரிசாகக் கொடுத்தார்” எனக்கூறிய சுமித் ஆண்டவருக்கு நன்றி செலுத்தி,. தொடர்ந்து திரளான ஆதிவாசி மக்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ள உழைத்தார்.
பிரியமானவர்களே! நாமும் சுமித்தைப்போல், தேவைகளிலிருக்கிற மக்களுக்கு இயேசுவின் நாமத்தில் உதவிகள் செய்து, அவர்களை இயேசுவின் பிள்ளைகள் ஆக்;குவதற்கு நம் சுவிசேஷப் பங்கை செலுத்துவோமானால் நம் தேசம் விரைவாக சந்திக்கப்படும்; நாமும் மேலான ஆசீர்வாதங்களை பெற்று மகிழ்ச்சியான வாழ்வு வாழ கர்த்தர் உதவி செய்வார்.
வேதம் இவ்வாறு கூறுகிறது:
கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்.லூக்.6:38
உதார குணமுள்ள ஆத்துமா செழிக்கும். நீதி.11:25
கருணைக் கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான். நீதி.32:51