Salomi
EPISODE-89
October 2024
சங்கீதங்கள் கற்றுத்தரும் விலையேறப்பெற்ற சத்தியங்கள

AUTHOR: REV.DR. D.SURESH RAJAN

முன்னுரை:

இச்சங்கீதம் எஸ்ராகியனாகிய ஏத்தான் எழுதிய ஒரு போதனைப் பாடல் என அறிமுகத்தில் கூறப்பட்டுள்ளது. 1இராஜாக்கள் 4:31-ல் எஸ்ராகியனாகிய ஏத்தான் ஒரு ஞானியாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறார். இவர் அநேகமாக தாவீதின் அரசவையில் பாடகராக இருந்திருக்க வாய்ப்பு உண்டு. இப்பாடல் தேவனின் மாறாத உடன்படிக்கை பற்றி உறக்கச்சொல்லும் ஒரு காவியம். இது தேவ னுடைய மகத்துவம், மாறாத அன்பு, உண்மைத்தன்மை ஆகியவற்றை வலியுறுத்தும் ஒரு அற்புதமான பாடலுமாகும்.

கடவுளின் மாறாத கிருபை: (வசனங்கள்-1, 2, 24, 28, 33)

கடவுளின் கிருபை தலைமுறைக்கும் மாறாதது என்பதை சங்கீதக்காரர் மிகவும் அழகாக கூறுகிறார். ‘நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை’ (புலம்பல்-3:22) என்று திருமறை கூறுகிறது. ‘கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது’ (சங்-103:17) என்று சங்கீதக்காரர் சொல்லுகிறார். ஆனாலும், தேவன் நம் மீது காட்டுகிற கிருபையை இழந்து போகாதபடிக்கு நம்முடைய வாழ்வை அமைக்கப் பிரயாசப்பட வேண்டும். ‘ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாத படிக்கும், ஒருவனும் வேசிக் கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராத படிக்கு எச்சரிக்கை யாயிருங்கள்’ (எபி-12:15, 16) என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. ஆகவேதான், பவுல், ‘தேவனுடைய கிருபையை நீங்கள் விருதாவாய்ப் பெறாதபடிக்கு, உடன்வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்’ (2கொரி-6:1) என்கிறார். ஆகவே, தேவன் நமக்கு கொடுத்திருக்கும் இலவசமான ஆசீர்வாதங்களை இழந்து விடாமல் இருக்க ஜாக்கிரதையாய் இருப்போம்.

கடவுளின் மகத்துவம்: (வசனங்கள் 5முதல் 18வரை)

சங்கீதக்காரர் கடவுளுடைய மகத்துவத்தை உயர்த்தி, அவருடைய நாமத்தைத் துதிக்கிறார். இறைவன் அதிசயமானவைகளைச் செய்தவர் என்றும், அவருடைய ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவை என்றும் துதி பாடல்களை பாடுகிறார். ‘ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்: அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். நான் ஆண்டவரைப்பற்றிப் பெருமையாகப் பேசுவேன்: எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர்’ (சங்-34:1) என்பதே நமது வாழ்க்கையின் நோக்கமாய் இருக்க வேண்டும். இறைவன் நமது போற்றுதலுக்கு உரியவர் என்பதை ஒருநாளும் மறந்து விடக்கூடாது. ஏதோ சபையில் வந்து துதி ஆராதனை என்ற பெயரில் சில பாடல்களை உணர்ச்சிபூர்வமாக பாடிவிட்டு நமது அன்றாட வேலைகளில் ஆண்டவரைப் பற்றி அக்கறையின்றி இருப்போமானால் நாம் பரிதாபத்துக்கு உரியவர்களே. இறைவனை போற்றி புகழ்வது நமது வாழ்வின் நிரந்தர நோக்கமாய் இருக்க வேண்டும். ஏனென்றால், அவரே படைப்பின் கடவுள்.

கடவுளின் உடன்படிக்கை: (வசனங்கள் 9முதல் 37வரை)

இறைவன், நாத்தான் தீர்க்கன் மூலமாக தாவீதுடன் செய்த உடன்படிக்கையை (2சாமு 7:9-16) சங்கீதக்காரர் இங்கு நினைவு கூறுகிறார். உலகத் தோற்றம் முதல் கடவுள் தனது படைப்பாகிய மனிதர்களுடன் பல நேரங்களில் உடன் படிக்கை செய்ததாக நாம் பார்க்க முடிகிறது. இஸ்ரவேல் மக்கள் பாவம் செய்து தேவனை விட்டு விலகி போவார்களானால், அவர்களுக்கு ஏற்ற தண்டனை உண்டாகும் என்று கூறிய இறைவன் அவர்கள் மனம் திரும்பும் பட்சத்தில் ‘நான் யாக்கோபோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஈசாக்கோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஆபிரகா மோடே பண்ணின என் உடன்படிக்கையையும் நினைப்பேன்’ (லேவி-26:42) என்று வாக்கு கொடுப்பதை பார்க்கிறோம். பின்பு ‘இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன் படிக்கை பண்ணுவேன்’ (எரே-31:31) என்று வாக்குறைத்த இறைவன், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் மூலமாக புதிய உடன்படிக்கையை நம்மோடு ஏற்படுத்தி உள்ளார் (மத்-26:18). இந்த உடன்படிக்கையின் மூலமாக நமக்கு பாவ மன்னிப்பும் நித்திய ஜீவனும் வாக்கு பண்ணப்பட்டிருக்கிறது. விசுவாசி களாகிய நாம் இதை என்றும் மனதில் கொண்டு, உடன்படிக்கைக்கு ஏற்றவர்களாக நம் வாழ்வை அமைத்துக் கொள்ளவேண்டும்.

முடிவுரை:

இறைவனுடைய உடன்படிக்கை நம்மோடு இருந்தாலும் பல நேரங்களில் நம் வாழ்வில் நாம் எதிர்பார்க்காத, ‘வலி உண்டாக்கும் சம்பவங்கள்’ நடக்கத்தான் செய்கின்றன என்பதை 38முதல் 45வரையுள்ள வசனங்களில் நாம் காண்கிறோம். இப்படிப்பட்ட வேதனையின் நாட்கள் நம்மைச் சூழ்ந்திருக்கும்பொழுது இறைவனது பாதமே நமது தஞ்சம் என்பதை உணர்ந்து கொண்டவர்களாக, அவரது இரக்கத்திற்கு மன்றாடுவது மிகவும் அவசியமானது என்பதை நாம் புரிந்துகொள்ள அழைக்கப்படு கிறோம். பல நேரங்களில் நம் வாழ்வில் இறைவன் அனுமதிக்கும் வேதனைகள், “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர் களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறத” (ரோமர்-8:28) என்ற பவுலடிகளாரின் வாக்குப்படி, எல்லாம் நமது நல்வாழ்வுக்கு ஏதுவாய் நடக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். தேவ கிருபை உங்களோடு இருப்பதாக. ஆமென்.

சங்கீதங்கள் கற்றுத்தரும்விலையேறப்பெற்ற சத்தியங்கள். தொடரும்......



ஆசிரியர்: அருட்திரு. அறிவர். டி. சுரேஷ் ராஜன்,
இணை நிறுவனர், வேதாகம மொழிபெயர்ப்பு முயற்சிகள், கோயம்புத்தூர். தென்னிந்தியா.