AUTHOR: REV.SJD Dharmaraja
அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார். மத்-15:14
வேதபாரகர் மற்றும் பரிசேயர்;: பரிசேயர், வேதபாரகர் போன்றோர் இயேசுவைப் போல் அல்லாது, தீய-போதகர்களாய் இருந்தனர். இயேசு அவர்களை சகித்துக் கொள்ளவில்லை. அவர்களை குருட்டு வழிகாட்டிகளே, குருட்டு மடையர்களே என விமர்சித்தார். பரிசேயரைப்; போல இருக்கவேண்டாம் என சீடர்களை எச்சரித்தார் (மத்-15:14மு). பரிசேயர், தாங்கள் பிரசங்கிப்பதை தாங்களே கடைப்பிடிப்பதில்லை, அவர்கள் மக்களால் மதிக்கப்பட விரும்பி தங்களை உயர்த்துகிறார்கள். ஆகவே இயேசு, அவர்களை மாயக்காரரே என 7-முறை சபிக்கிறார். ஆசிரியர்-தினம் கொண்டாடும், பெற்றோர், ஆசிரியர், போதகர்களான நம்மை இயேசு சந்தித்தால், நம்மைக் குறித்து என்ன சொல்லுவார்?
மாணவர்களுக்கும் பாமரருக்கும் நாம் ஆசிரியர்: மாணவர்கள் அறியா பருவத்தினராய் இருக்கிறார்கள், பாமர மக்கள் வழிகாட்டிக்காக ஏங்குகின்றனர். இவ்விதத்தில் அவர்கள் இருண்ட வழிகளில் நடந்து செல்லும் பார்வையற்றவர்களுக்கு ஒப்பாய் இருக்கிறார்கள். அவர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பு ஆசிரியர், பெற்றோர், போதகராகிய நமக்கு உண்டு. நாம் மாணவர்களையும், வழியாறியாமல் நம்மை பின் தொடரும் பாமரரையும் நேர்வழியில் நடத்துகிறோமா? நீதி-நேர்மையை கற்பிக்கிறோமா? சற்றே சிந்திப்போம்.
இயேசுவின் விருப்பம்: இயேசுவின் நாட்களில் சுமார் 6000 பரிசேயர் இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பெரும்பாலும் நடுத்தர வர்க்க வணிகர்களே மத போதகர்களாக மாறினர். கமாலியேல், நிக்கோதேமு, அரிமத்தியாவின் யோசேப்பு மற்றும் இயேசு போன்ற சிலர் தவிர மற்றவர் அனைவரும் தீய-ஆசிரியர்களாக இருந்தனர். ஆகவேதான், பரிசேயர்களும், வேத-ஆசிரியர்களும் மக்களை கடவுளிடம் வழிநடத்துபவர்களாக இருக்க வேண்டும் என இயேசு விரும்பினார். இன்று ஆசிரியர்-பெற்றோராகிய நம்மிடமும் இயேசு அதையே எதிர்பார்க்கிறார். குருடரான வழிகாட்டியைப் பின்பற்றுவது மிகவும் ஆபத்தானது. கடவுளிடமிருந்து விலகி, பிசாசின் இடத்திற்கு நம்மை அவர்கள் அழைத்துச் செல்வார்கள். இப்படிப்பட்டவர்கள் பரலோக இராஜ்யத்தில் நுழையமாட்டார்கள் என இயேசு எச்சரித்தார். (மத்-23:13). இன்று நாம் யார்? சிறந்த ஆசிரியரா? அல்லது குருடரான வழிகாட்டிகளா?
அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா, ஊழிய இயக்குநர்
நற்செய்தி வேதாகம அச்சுப்பதிவு ஊழியங்கள், சென்னை-93. தென்னிந்தியா.