சகோ. எம். அசரியா ஞானதாஸ் எம்.ஏ; எம்.எட்
ஒரு விதவை தாய் தன் மகனுடன் வாழ்ந்துவந்தார். மகன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். தீய நண்பர்களின் உறவினால் அவனுக்கு பிறர் பொருளை திருடும் பழக்கம் ஏற்பட்டது. சக மாணவர்களின் பென்ஸில், பேனா, ஸ்கேல் போன்றவற்றை அடிக்கடி திருடிவந்தான். அவன் திருடுவது குறித்து அவனது தாயின் கவனத்திற்கு வந்தபோதெல்லாம், “இனிமேல் திருடாதே” என மேற்பூச்சாக கூறி அவனை விட்டுவிட்டார்.
நாட்கள் கடந்தன, மகன் வளர்ந்து வாலிபனானான்; கல்லூரி படிப்பையும் முடித்துவிட்டான் ஆனாலும் அவனது திருட்டு குணம் அவனைவிட்டு போகவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருநாள் அவன் ஒரு நகைக்கடையில் வைர நகைகளை திருடும்போது கையும் களவுமாக அவனை பிடித்துவிட்டனர். போலீஸ் அவனை கைது செய்து இழுத்துச்சென்றது. மகனை போலீஸ் பிடித்துச்சென்ற செய்தி தாய்க்கு கிடைத்ததும் அவள் ஓடோடிச்சென்று அழுது ஓலமிட்டு, கெஞ்சி மன்றாடி, போலீஸ் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு, போலீஸ் பிடியிலிருந்து மகனை மீட்டுவிட்டார்.
நடந்தது என்ன தெரியுமா? மகனுடன் வீட்டுக்குச் சென்ற தாய், அவனை ஒரு மரத்தில் கட்டி வைத்து, அவன் முன் நெருப்பை மூட்டி, ஒரு இரும்பு கம்பியை அதில் பழுக்கக் காய்ச்சி, திடீரென அந்த செம்பழுப்பு கம்பியை எடுத்து தன் உடலின் மீது சரமாரியாக சூடு போட்டுக்கொண்டார். அவரது உடலிலிருந்து இரத்தமும் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீரும் ஒடியது. இவ்வாறாக மகனுக்கு கிடைக்கவேண்டிய தண்டனையை தானே ஏற்றார். இதைக்கண்ட மகனின் உள்ளம் உடைந்தது. அவன் தன் தாயின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான், ‘இனி திருடவே மாட்டேன், எந்த தீயசெயலையும் செய்யமாட்டேன்’ என வாக்குறுதி கொடுத்தான். ஒழுங்காக ஆலயம் செல்ல ஆரம்பித்தான், வேதம் வாசித்து மனந்திரும்பி விரைவிலேயே அநேகரை தேவனிடம் வழிநடத்தும் கருவியாக மாறிவிட்டான்.
பிரியமானவர்களே! அந்த விதவைத்தாயின் மகன், முதலில் சிறு சிறு திருட்டுகளை செய்து பின்னர் பெரிய அளவில் கொள்ளையடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டான். நம் வாழ்விலும் கூட நாமும் ஆரம்பத்தில் சிறு சிறு தவறுகளை செய்து நாளடைவில் பெரிய பாவங்களை செய்து நம் இயேசுவை வேதனைப்படுத்தக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்கி விடுகிறோம். இயேசுவை மறுபடியும் சிலுவையில் அறைந்து, கை, கால்களில் ஆணியடித்து அவரது விலாவின் ஈட்டியை பாய்ச்சும் இந்த பாவங்களை கைவிட்டு நம்மை நாமே பரிசுத்தப்படுத்தி இயேசு சுவாமியின் விருப்பத்தின்படி செயல்படுவோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
வேதம் இவ்வாறு கூறுகிறது:
கர்த்தர் தமது அன்பினிமித்தம் நம்மை மீட்டார். ஏசா-63:9
தன் ஜீவனைக்கொடுக்கிற அன்பிலும் அதிக அன்பு ஒருவரிடத்திலுமில்லை.யோவா-15:13
கிறிஸ்துவினுடைய அன்பு நம்மை நெருக்கி ஏவுகிறது. 2கொரி-5:14
அன்பினாலே கிரியைசெய்கிற விசுவாசமே உதவும். கலா-5:6
பிதாவானவர் நமக்கு பாராட்டின அன்பு பெரியது. 1யோவா-3:1