Salomi
EPISODE-27
October 2024
இந்திய கிறிஸ்தவ திருச்சபை சரிதை: (1முதல் 21ம் நூற்றாண்டுவரை) தொகுதி-6 பகுதி-2
6. அக்பர் மற்றும் ஜேசுவைட்ஸ்
2. அக்பர் படையெடுப்பு ஜெசுவைட்ஸ் ஏமாற்றம்

ஜெசுவைட்ஸ் மிஷன் வந்து ஒரு வருடம் கழித்து பொது விவாதங்கள் மற்றும் தனிப்பட்ட நேர்காணல்கள் அக்பரால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன. தமது ஒன்றுவிட்ட சகோதரரும் காபூலின் ஆட்சியாளருமான முஹமது ஹக்கீமுக்கு எதிராக அக்பர் அணிவகுத்தார். பஞ்சாப் மீது படையெடுக்கும் அளவுக்கு ஹக்கீம் எச்சரிக்கை யற்று இருந்ததுதான் இதற்குக் காரணம். பிப்ரவரி 8, 1581 அன்று அக்பரின் குதிரைப்படை பஞ்சாப் மற்றும் வடமேற்கு இந்தியா வழியாக கைபர் கணவாய் வரை அணிவகுத்துச் சென்றது. அதே ஆண்டு டிசம்பர் 1ல் அக்பர் மீண்டும் ஃபத்பூர்-சிக்ரி திரும்பி வந்தார்.

தந்தை. மான்செரேட், இளவரசர் முராத் என்பவருக்குப் பயிற்றுவிக்கும் தகுதியில், புரவலருடன் செல்ல அனுமதிக்கப்பட்டார். அக்பர், முகலாய இராணுவத்தின் தமது தீவிர இராணுவ பங்கேற்பை விட தமது பொழுதுபோக்கான வேட்டை யாடுவதில் அதிக நேரத்தை செவழித்தார் என்றும் இராணுவத்திற்கும் அரசுக்கும் இதனால் எந்த நன்மையும் இல்லை என்றும். மத விவாதங்களில் அதிகம் நேரம் ஈடுபட்ட பேரரசர் அதற்காக இனிமையான ஏகாதிபத்திய சுற்றுலாக்கள் சென்றதாகவே தந்தை. மான்செரேட் அக்பரின் நீண்ட யாத்திரையைப் பற்றி பதிவு செய்கிறார்.

கிறிஸ்தவம் பற்றி பேரரசர் அக்பர் எழுப்பிய கேள்விகள்:

1. யூதர்கள் தம்மை நம்ப வேண்டும் என்று துடித்த ஆண்டவர் இயேசுவை அவர்கள் ஏன்; நம்பவில்லை?

2. அவர் சிலுவையில் இருந்தபோது, ‘நீ கடவுளின் மகன் என்றால் சிலுவையில் இருந்து இறங்கி வா, நாங்கள் உன்னை நம்புவோம்’ என்று சொன்ன யூதர்களின் சவாலை அவர் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை.?

3. பிதாவாகிய கடவுளுக்கு மரண சரீரம் இல்லை என்பதை உறுதிப்படுத்தி, கிறிஸ்து தந்தையின் வலது கை பக்கம் அமர்ந்தார் என்றால் என்ன விளக்கம் என்று கேள்வி எழுப்பினார்.

பேரரசர் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் ஜெசுவைட்ஸ் மிகவும் புத்திசாலித் தனமாக பதிலளித்தனர். ‘நம்பிக்கையால் மட்டுமே பாவியான மனிதகுலம் நீதிப்படுத்தப்பட முடியும். கிறிஸ்து சிலுவையில் இருந்து இறங்கியிருந்தால், அது கிறிஸ்தவத்தின் அடித்தள ஆதாரமான நம்பிக்கையின் சாத்தியத்தை நீக்கியிருக்கும்.’ கிறிஸ்துவின்; பாடுகளால் மட்டுமே இலவசமாக கடவுளின் இரக்கத்தால் இரட்சிக்கப் படுவோம் என்னும் நம்பிக்கை ஆதாரமற்றுப் போகும். ஒருவேளை இயேசு சிலுவையில் இருந்து இறங்கியிருந்தால் அடிக்கடி சொன்னது போல், ‘பிசாசுகளின் இளவரசனான இவனால் பல அற்புதங்கள், அதிசயங்கள், மாயாஜாலங்களை செய்ய முடியும்’ என்று கூறியிருப்பார்கள். நாம் கிறிஸ்து வலதுபக்கத்தில் அமர்ந்திருக்கிறார் என்று கூறுகிறதன் மூலம் சரீரப்பிரகாரமான உட்காருவதைக் குறிக்கவில்லை, ஆனால், கிறிஸ்துவும் கடவுள் என்பதால், அவருக்கும் அதே மகிமை, மரியாதை உள்ளது. மற்றும் அவரது தந்தை போன்ற அதே சக்தியுடன் சமமானவராக இருக்கிறார் என்பதாலேயே பிதாவின் ‘கை’ என்ற பெருமை மிகுந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘வலது கை பக்கம்’ என்றால் அது இடது கை பக்கத்தை விட உயர்ந்தது’ என விளக்கம் அளிக்கப்பட்டது.

ஜெசுவைட் பாதிரியார்களின் விளக்கம் பாரசீகமொழியில் இருந்தாலும், ராஜா அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். புதிய மத நம்பிக்கையைப் பற்றி விவாதிக்க அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிஞர்களுக்கும் அதை விளக்கினார். பிரார்த்தனை மண்டபத்தில் நடந்த இந்த விவாதங்களில் அனைவர் சந்தேகங்களும் நீக்கப்பட்டன.

ஜெசுவைட்ஸ் ஏமாற்றம்:

அக்பருக்கு தன்னை ஒரு புதிய மதத்தின் நிறுவனர்-தலைவராக முன்னிலைப் படுத்துவதே பிரதான திட்டமாக இருந்தது. முகமதுவின் குரான், பிராமணர்களின் வேதங்கள், கிறிஸ்துவின் நற்செய்தி உள்ளிட்ட பல்வேறு மதக் கூறுகளிலிருந்தும் நல்லதை எடுத்து புதிய மதத்தை உருவாக்கவேண்டும். பின்னர், ஒரு பொதுக் குழுவைக் கூட்டி, தம்மால் ஆளப்படும் சாம்ராஜ்யத்தில் மக்கள் மத-மாறுபாடுடன் பிரிந்து இருப்பது ஒரு மோசமான விஷயம். எனவே, நாம் அனைவரையும் ஒன்றாக்க வேண்டும்; அதில், ‘ஒன்று’ மற்றும் ‘அனைத்தும்’ என இருக்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். எந்த ஒரு மதத்திலும் நல்லதை இழக்காமல், மற்றொறு மதத்திலுள்ள நல்லதையும் அடையும் போது அந்த மதம் மக்களுக்கு மன அமைதி கொடுக்கும் என்பதும் அவருடைய எண்ணம்.

ஏறக்குறைய ஒருவருடகால விவாத விளக்கங்களுக்குப் பின்பு முழு சாம்ராஜ்யத்திற்கும் கடவுள், சடங்குகள், தியாகங்கள், மர்மங்கள், விதிகள், விழாக்கள் மற்றும் வேறு எதிலும் ஒரு முழுமையான மற்றும் உலகளாவிய மதம் இருக்க வேண்டும் என்பது அவரது பிரதான திட்டம் ஆயிற்று. கிறிஸ்துவின் நற்செய்தியை அக்பர் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பது ஜெசுவைட்ஸ்க்கு ஏமாற்றமே. ஜெசுவைட்ஸ் இந்தியாவின் நிலப்பரப்பை நற்செய்தி மயமாக்க அனைத்து வழிகளில் முயற்சித்தும், இதுவரை கடலோரப் பகுதியில் மட்டுமே பலன் கிடைத்தது.

இந்திய கிறிஸ்தவ திருச்சபை வரலாறு தொடரும்...
Author: Dr. Mrs. Salomi Manohar
Asst. Professor Rtd., (Pope’s College, Sawyerpuram) Thiruvanmiyur, Chennai. South India