AUTHOR: REV.DR. D.SURESH RAJAN
சங்கீதம் - 114முன்னுரை:
எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரயேல் மக்கள் விடுவிக்கப்பட்டதை நினைவு கூரும் ஓர் அழகிய பாடல் இது. ஆண்டவரின் திருமுன்னிலை, அடிமைத்தனத்திலிருந்து விடுதலையையும், தடைகளைக் கடக்கும் வழியையும், வறண்ட வாழ்வில் புதிய நம்பிக்கையை யும் தருகின்றது. இயற்கையே ஆண்டவரின் வல்லமையைக் கண்டு வியப்பது போல இப்பாடல் அமைந்துள்ளது. இன்றும் இந்தத் திருப்பாடல், ஆண்டவரின் திருமுன்னிலையால் சூழ்நிலைகளை வெல்லும் நம்பிக்கை நமக்குக் கிடைக்கும் என்ற உண்மையை நினைவூட்டுகிறது:
1. அடிமைத்தனத்திலிருந்து விடுதலை: (வச 1 - 2)
இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் பல ஆண்டுகளாக அடிமைகளாக வாழ்ந்தார்கள். அவர்கள் ஒடுக்கப்பட்டார்கள்; துன்பப்பட்டார்கள்; தங்கள் சொந்த வல்லமையால் விடுதலை பெற முடியாத நிலையில் இருந்தார்கள். ஆனால் ஆண்டவர் அவர்களைக் கைவிடவில்லை. ஆண்டவர் அவர்களுடைய துன்பத்தைக் கண்டார்; அவர்களுடைய குரலைக் கேட்டார்; அவர்களை விடுவிக்கச் செயல்பட்டார் (வி.ப.3:7). சில நேரங்களில் மன்றாட்டுகளுக்கு பதில் கிடைக்காதது போல் தோன்றலாம். ஆனால் ஆண்டவர் அமைதியாக இருப்பது அவர் நம்மைக் கைவிட்டது ஆகாது. இஸ்ரயேல் மக்கள் தங்கள் வலிமையால் எகிப்திலிருந்து வெளியேறவில்லை. ஆண்டவர் மோசேயை எழுப்பி, பாரவோனின் அதிகாரத்தை எதிர்த்து, தம் மக்களை விடுவித்தார்.
இரண்டாம் வசனத்தில் யூதா ஆண்டவருடைய தூயகமாகவும், இஸ்ரயேல் அவரது ஆட்சித்தளமாகவும் மாறியதாகக் கூறப்படுகிறது. அவர்கள் முன்பு எகிப்தின் அடிமைகளாக இருந்தார்கள். இப்போது அவர்கள் கடவுளின் மக்களாக மாறினார்கள். ஆண்டவருடனான உறவே அவர்களுடைய அடையாளம். கடந்தகாலத் தோல்விகள் நமது வாழ்வைத் கட்டுப்படுத்துகிறதா? தீமையிலிருந்து விடுபட்டு, பிறருக்குச் சேவை செய்ய ஆண்டவர் நம்மை அழைக்கிறார்.
2. தடைகளையும் தகர்க்கும் ஆண்டவரின் வல்லமை: (வச.3 - 6)
‘செங்கடல் கண்டது, ஓட்டம் பிடித்தது; யோர்தான் பின்னோக்கிச் சென்றது.’ இஸ்ரயேல் மக்களின் கண்களுக்கு செங்கடல் ஒரு முடிவாகத் தோன்றியது. ஆனால் ஆண்டவர் கடலின் நடுவே தம் மக்களுக்கு வழி உண்டாக்கினார். தடையாக இருந்த கடல், அவர்களுடைய விடுதலைக்கான பாதையாக மாறியது. வி.ப.14ம் அதிகாரம் இஸ்ரயேல் மக்கள் எகிப்தைவிட்டு வெளியேறி செங்கடலைக் கடந்ததைக் குறித்தது; யோசுவா 3ம் அதிகாரம், அவர்கள் யோர்தானைக் கடந்தது வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழைந்ததைக் குறித்தது. இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையில் வனாந்தரப் பயணம், சோதனைகள், கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் எனப் பல அனுபவங்கள் இருந்தன. ஆண்டவர் அவர்களுடைய பயணத்தின் தொடக்கத்திலும் இருந்தார்; இலக்கை அடையும் தருணத்திலும் இருந்தார்.
நான்காம் மற்றும் ஆறாம் வசனங்களில் மலைகளும் குன்றுகளும் செம்மறிக்கிடாய்கள், மற்றும் ஆட்டுக்குட்டிகள் போலத் துள்ளுவதாகக் கூறப்படுகிறது. அசைக்க முடியாதவைபோல் தோன்றும் மலைகள்கூட படைப்பாளரின் முன்னிலையில் நிலைத்திருக்க முடியாது என்பதே இதன் கருத்து. நமது வாழ்விலும் ஆண்டவர் ஒரு பிரச்சினையிலிருந்து நம்மை விடுவிப்பதோடு நிற்காமல், அடுத்த கட்டத்திற்கும் வழிநடத்துகிறார். சில நேரங்களில் அவர் தடையை அகற்றுவார். சில நேரங்களில் தடையைக் கடக்க நமக்கு வலிமை அளிப்பார். வேறு சில நேரங்களில் நாம் எதிர்பார்க்காத புதிய வழியைத் திறப்பார்.
3. வறண்ட வாழ்வில் புதிய நம்பிக்கை: (வச.7 - 8)
ஏழாம் வசனத்தில் ஆசிரியர் பூவுலகையே ஆண்டவரின் முன்னிலையில் நடுங்குமாறு அழைக்கிறார். ஏனெனில் இஸ்ரயேலின் ஆண்டவர் படைப்புகள் அனைத்திற்கும் ஆண்டவராக இருக்கிறார். செங்கடல் விலகியது யோர்தான் பின்னோக்கிச் சென்றது மலைகள் துள்ளியது இவை அனைத்துக்கும் காரணம் ஆண்டவரின் திருமுன்னிலையே. நமது நம்பிக்கையின் அடிப்படை நமது திறமையோ, பணமோ, செல்வாக்கோ அல்ல; நம்மோடு இருக்கும் ஆண்டவரே.
எட்டாம் வசனம் நமக்குக் நினைவூட்டுவது, வனாந்தரத்தில் இஸ்ரயேல் மக்கள் தண்ணீரின்றித் தவித்தபோது, ஆண்டவரின் கட்டளைப்படி மோசே பாறையை அடித்து தண்ணீர் கொடுத்த நிகழ்வு (வி.ப.17:1-7). பாறை கடினமானது; அதிலிருந்து தண்ணீர் வரும் என்று யாரும் எதிர்பார்க்கமாட்டார் கள். ஆனால் ஆண்டவர் அதை மாற்றினார். ஆண்டவர் தடைகளை அகற்றுவது மட்டுமல்ல; நமது பயணத்தைத் தொடரத் தேவையானவற்றையும் வழங்குகிறார். நம் வாழ்விலும் சில நேரங்களில் ஜெபத்திற்குப் பதில் கிடைக்காததுபோல் தோன்றலாம். ஊழியம் வளராமல் இருக்கலாம். குடும்பத்தில் அமைதியின்மை இருக்கலாம். எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை குறையலாம், அத்தகைய நேரங்களில், எல்லாம் முடிந்துவிட்டது என்று தீர்மானித்துவிடக் கூடாது. ஆண்டவர் வறண்ட நிலத்தில் நீரூற்றைத் திறக்க வல்லவர்.
முடிவுரை:
இந்தப் பாடல் நமக்குக் கற்றுத்தரும் மூன்று உண்மைகள்:
1. ஆண்டவரின் திருமுன்னிலை விடுதலையைத் தருகிறது.
2. ஆண்டவரின் வல்லமை தடைகளைக் கடக்க வழி செய்கிறது.
3. ஆண்டவரின் திருமுன்னிலை வறண்ட வாழ்வில் புது நம்பிக்கை தரும்.
அன்பானவர்களே! எகிப்திலிருந்து இஸ்ரயேல் மக்களை விடுவித்த ஆண்டவர் இன்றும் மாறாதவராக இருக்கிறார். செங்கடல் நமக்கு
முன் நிற்கும்போதும் மலைகள் நம் வழியை மறைக்கும்போதும், வனாந்தரம் நம் முன் வறண்டுபோகும் போதும் ஆண்டவரை நம்பி
அவரது வல்லமையை நினைவுகூர்ந்து அவருடைய திருமுன்னிலையைத் தேடுவோம். நம் சூழ்நிலைகளை மட்டுமே பார்த்து நம்பிக்கையை
இழக்காமல், நம்மோடிருக்கும் ஆண்டவரை நோக்கிப் பார்ப்போம். ஆண்டவர் நம்மனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
சங்கீதங்கள் கற்றுத்தரும்விலையேறப்பெற்ற சத்தியங்கள். தொடரும்......
ஆசிரியர்: அருட்திரு. அறிவர். டி. சுரேஷ் ராஜன்,
தலைவர் (இந்திய மறை மாநாடு), குளோபல் மெத்தடிஸ்ட் திருச்சபை.
AUTHOR: REV. DR. D. SURESH RAJAN,
CONFERENCE SUPERINTENDENT, INDIA ANNUAL CONFERENCE,
GLOBAL METHODIST CHURCH IN INDIA.