VasanaDhyian
EPISODE-175
November 2026
அன்பின் ஆராதனை
நேசர் இயேசுவில் இணைந்த அன்பின் வாழ்வு

AUTHOR: REV.SJD Dharmaraja

நேசர் என்னை விருந்துசாலைக்கு அழைத்துக்கொண்டுபோனார்; என்மேல் பறந்த அவருடைய கொடி நேசமே. உன்னதப்பாட்டு 2:4

ஆராதனை என்பது வெறும் பாடல்களைப் பாடுவதோ அல்லது சடங்குகளைச் செய்வதோ அல்ல; அது மணவாளனாகிய இயேசு கிறிஸ்துவின் அன்பில் நம் இதயத்தை முழுமையாக அர்ப்பணிப்ப தாகும். உன்னதப்பாட்டு புத்தகம் தேவன் தன் பிள்ளைகள் மீது வைத்திருக்கும் தீவிரமான, மாறாத அன்பை ஒரு திருமண உறவின் வழியாய் நமக்கு விவரிக்கிறது.

நம்முடைய நேசராகிய இயேசு கிறிஸ்து, நம்மைத் தம்மோடு நெருங்கி ஜீவிக்கும்படி அன்போடு அழைக்கிறார். அவர் நம் அனைவரையும் தமது ‘விருந்துசாலைக்கு’ அழைத்துச் செல்கிறார். அது உலகத் தேவைகள் சந்திக்கப்படும் இடம் மட்டுமல்ல, அவருடைய பிரசன்னமும் சமாதானமும் நிறைந்த பேரின்ப ஸ்தலம். நம் மேல் பறக்கும் அவருடைய அன்பின் கொடி, நாம் அவருக்குச் சொந்தமானவர்கள் என்பதை உலகிற்குப் பறைசாற்றுகிறது.

இயேசுவின் இந்த உன்னத அன்பிற்கு நாம் காட்டும் மறுமொழிதான் உண்மையான ஆராதனை. இயேசுவானவர் சிலுவையில் காட்டிய அந்த தெய்வீக அன்பை ருசித்த இதயத்திலிருந்துதான் உண்மையான துதி பிறக்க முடியும். நாம் சோர்ந்துபோகும் நேரங்களில், அவருடைய அன்பு நம்மைத் தாங்கித் தேற்றுகிறது (உன்.2:6).

அன்பானவர்களே! நம் வாழ்வில், கடைமுறைக்காய் அல்ல, மாறாக நம்மை உயிராக நேசிக்கும் இரட்சகரின் அழகை உண்மையாய் ரசித்து, அவருக்கு நம் இதய நன்றியைக் படைப்போம். நம் எண்ணங்களும் செயல்களும் வாழ்வும், அவருக்கு உகந்த அன்பின் ஆராதனையாக மாறட்டும். இந்த ஆராதனை கிறிஸ்துவின்மீதான நமது விசுவாசத்தில் நிறைவடைகிறது.

ஜெபம்: அன்பு நிறைந்த நல்ல தகப்பனே! உமது அளவற்ற அன்பிற்காக நன்றி. உம் பிரசன்னமே எமது விருந்துசாலை. உமக்குள்ளாக வாழும் வாழ்வே எங்களுடைய அன்பின் ஆராதனை. உம் அன்பை ருசித்துப்பார்த்து, உம்மை முழு இதுதயத்தோடு ஆராதிக்க எங்களுக்குக் கிருபை தாரும். உம் மீதுள்ள விசுவாசத்தில் முழுமையாய் நிலைத்திருக்க உதவிசெய்யும். இயேசுவின் நாமத்தில், ஆமென்.




அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா, ஊழிய இயக்குநர்
] இரட்சிப்பு ஊழியங்கள், சென்னை-93, தென்னிந்தியா