AUTHOR: REV.DR. D.SURESH RAJAN
சங்கீதம் - 102முன்னுரை:
திருப்பாடல்கள் மனித அனுபவத்தின் அனைத்து அலைவரிசைகளையும் உள்ளடக்கிய இறை மொழிகள் ஆகும். அவற்றில் மகிழ்ச்சி, வெற்றி, கோபம், சந்தேகம் மற்றும் ஆழமான துன்பம் ஆகிய அனைத்தும் இடம்பெற்றுள்ளன. இச்சங்கீதம் ஒரு ஆழமான, உணர்ச்சிமிக்க பிரார்த்தனை பாடல் ஆகும். இது தனிப்பட்ட துன்பம், ஆண்டவரிடம் நம்பிக்கை, அவரருளும் நித்திய வாழ்வின் நம்பிக்கை ஆகியவற்றை இணைக்கும் சக்திவாய்ந்த இசைக் கவிதை ஆகும்.
1. தனிப்பட்ட வேதனையும் துன்பமும்: (வசனங்கள் 1-11)
இது வெறும் சபதப் பாடல் அல்ல, இது மனித வேதனையின் உச்சத்திலிருந்து எழுப்பப்படும் ஒரு முழக்கம். “ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும்! என் அபயக்குரல் உம்மிடம் வருவதாக! நான் இடுக்கண் உற்ற நாளிலே உமது முகத்தை மறைக்காதீர்! உமது செவியை என் பக்கமாகத் திருப்பியருளும்! நான் மன்றாடும் நாளில் விரைவாய் எனக்குப் பதிலளியும்!” (வச-1,2) என, இப்பாடல் தொடங்கும் விதமே அவசரத்தையும், மனவேதனையையும் காட்டுகிறது. தனது துயர நாட்களை வர்ணிக்கும் உருவகங்கள் மிகவும் சக்திவாய்ந்தவை: “என் வாழ்நாள்கள் புகையென மறைகின்றன” (வச-3) என்பது, வாழ்வின் குறுகிய பொருளற்ற தன்மையையும், “என் எலும்புகள் தீச்சூளையென எரிகின்றன” (வச3) என்பது உடலில்;, மனதில் உள்ள தீவிர வேதனையையும், “நான் தூக்கமின்றித் தவிக்கின்றேன்; கூரைமேல் தனிமையாய் இருக்கும் பறவைபோல் ஆனேன்” (வச-4-7) என்பது, தனிமை, வெறுமை மற்றும் துக்கத்தையும் குறிப்பதாக உள்ளது. நமக்கு ஏற்படும் துன்ப அனுபவங்கள் நம் உடல்நிலை, உணர்ச்சிநிலை மற்றும் ஆன்மீகநிலை ஆகியவற்றைப் பாதிக்கக்கூடியது என்பதை மிகவும் அழகாக சங்கீதக்காரர் இங்கு சித்தரிக்கிறார்.
2. ஆண்டவரின் நித்திய தன்மை மீதான நம்பிக்கை: (வச 12-22)
தனது துன்ப சூழலிலிருந்து இருந்து, ஆண்டவரின் நிலையான, மாறாத இயல்பை நோக்கி தனது கவனத்தை சங்கீதக்காரர் திருப்புகிறார். இறைவனின் நித்திய தன்மைக்கும் மனிதனின் நிலையற்ற தன்மைக்கும் இடையேயான வேறுபாட்டை குறிப்பிட்டு, “ஆண்டவரே, நீரோ, என்றென்றைக்கும் வாழ்கிறவர்” (வச-12) என்று சொல்கிறார். இவ்வுலக, மனித வாழ்வு நிலையற்றது ஆனால் ஆண்டவர் அருளும் வாழ்வு நிலையானது, இவ்வுலக வாழ்வையும் தாண்டி நமக்கு ஒரு திடநம்பிக்கை உண்டு என்பதை இதன் மூலம் கற்றுக்கொள்கிறோம். அவர் வாழ்கிறபடியால் நாமும் வாழ்கிறோம். “வேற்றினத்தார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர், பூவுலகின் மன்னர் யாவரும் அவரது மாட்சியைக் கண்டு மருள்வர்; ஏனெனில் ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்புவார், அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார்” (வச-15,16) என்ற வாக்கியம், ஆண்டவர் தம்முடைய மக்கள்மீது காட்டும் அன்பினால், கருணையால், உலகம் முழுவதும் அவரை அறிந்துகொள்ளும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. ‘ஆண்டவர் ஒரு குறிப்பிட்ட கூட்டத்தாருக்கு மட்டுமானவர்’ என்ற தவறான எண்ணத்தை நீக்கி, அவர் அனைத்து மக்களுக்கும் ஆண்டவர் என்ற அற்புதமான உண்மையை அறிந்து கொள்கிறோம்.
3. படைப்பின் நிலையற்ற தன்மை: (வச 23-28)
இப்பகுதியில், தனிப்பட்ட துன்பமும் ஆண்டவருடைய நித்திய தன்மையும் மீண்டும் இணைகின்றன. சங்கீதக்காரர் தன்னுடைய வாழ்வில் ஏற்பட்ட நோய் அல்லது பாதுகாப்பற்ற சூழலின் விளைவாக தன்னுடைய வாழ்வு முடிந்துவிடுமோ என்ற அச்சத்தினால் கடவுளின் பாதுகாப்புக்காக, “இறைவா! என் வாழ்நாளின் இடையில் என்னை எடுத்துக் கொள்ளாதேயும்: உமது காலம் தலைமுறை தலைமுறையாய் உள்ளதன்றோ?” (வச-24), என இறைவேண்டல் செய்கிறார். அனைத்துலகமும் ஒரு நாள் அழிந்துபோகும். ஆனால் ஆண்டவர் என்றும் மாறாதவர், முடிவில்லாதவர் என்பதை விளக்க, “முற்காலத்தில் நீர் பூவுலகுக்கு அடித்தளமிட்டீர்; விண்ணுலகம் உமது கைவினைப் பொருள் அன்றோ! அவையோ அழிந்து விடும், நீரோ நிலைத்திருப்பீர், அவையெல்லாம் ஆடைபோல் பழமையாகும். அவற்றை நீர் உடையென மாற்றுகின்றீர்; அவையும் மறைந்துபோம், நீரோ மாறாதவர்! உமது காலமும் முடிவற்றது.” (வச-25-27) என்று குறிப்பிடுகிறார். இவ்வுலகம் முழுவதும் மாற்றத்திற்கு உட்பட்டது; அதில் மனித வாழ்க்கையும், நகரங்களும், பேரரசுகளும் அடங்கும். ஆனால், இவற்றின் மையத்தில், இறைவன் என்றும் மாறாத, நிலையான, நம்பிக்கைக்குரிய நங்கூரமாக நிலைத்து நிற்கிறார்.
முடிவுரை:
நம் வேதனைகள் உண்மையானவை, ஆனால், நம் குரல் ஆண்டவர் சந்நிதியில் நிச்சயம் கேட்கப்படும்; இறைவன், வாழ்வின் எல்லா சூழ்நிலைகளையும் தாண்டி நம் நம்பிக்கையின் அடித்தளமாய் நிலைத்திருக்கிறவர், துன்ப கருமேகங்களுக்கு அப்பால், ஆண்டவர் நித்திய சூரியனாக என்றென்றும் பிரகாசித்துக்கொண்டே இருக்கிறார் என்பதை இப்பாடல் நமக்கு உறுதிப்படுத்துகிறது. மேலும், “உம் அடியாரின் பிள்ளைகள் பாதுகாப்புடன் வாழ்வர்; அவர்களின் வழிமரபினர் உமது திருமுன் நிலைத்திருப்பர்!” (வச-28) என்ற வசனத்திமூலம், தம்மை அண்டிக்கொள்ளும் அனைவரின் சந்ததியையும் இறைவன் ஆசீர்வதிப்பார் என சங்கீதக்காரர் சொல்லும் செய்தி, நமக்கு ஆறுதலையும், ஆற்றலையும் தருவதாகும். இறையாசி உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
சங்கீதங்கள் கற்றுத்தரும்விலையேறப்பெற்ற சத்தியங்கள். தொடரும்......
ஆசிரியர்: அருட்திரு. அறிவர். டி. சுரேஷ் ராஜன்,
இணை நிறுவனர், வேதாகம மொழிபெயர்ப்பு முயற்சிகள், கோயம்புத்தூர். தென்னிந்தியா.