AUTHOR: REV.SJD Dharmaraja
அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப் பிரபு என்னப்படும். ஏசா. 9:6பி,
சூழ்நிலைகள் மிகவும் மோசமாகத் தோன்றியபோது, இஸ்ரவேலை மீட்டு சீர்படுத்த ஒரு மேசியா வருவார் என்று ஏசாயா
தீர்க்கதரிசனம் சொன்னார். அபிஷேகம் செய்யப்பட்ட மீட்பரான மேசியாவின் பங்கை விவரிக்க ஏசாயா, பாலகனாக பிறக்கப்போகும்
அவருக்கு நான்கு பட்டங்களைத் தருகிறார். அற்புதமான ஆலோசகர், வல்லமையுள்ள கடவுள், நித்திய தந்தை மற்றும் சமாதான
இளவரசர். (ஏசா.9:6பி) ஆகியவையே அப்பட்டங்கள்.
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட மேசியாவான இயேசு, தெய்வீக ஞானத்துடன் முடிவுகளை எடுக்கும் அற்புதமான ஆலோசகர்.
வல்லமையுள்ள இயேசு, கடவுளின் ஒரே பேறான குமாரன்; அவர், ஆதியில் கடவுளுடன் இருந்தார், அவர் கடவுளாகவே இருந்தார்
(யோவா-1:1-3). இயேசுவின் மூலமாகவே நாம் நித்திய தந்தையை அறிகிறோம். அப். யோவான் சொல்கிறார், “தேவனை ஒருவனும்
ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்” (யோவா.1:18) என்று.
இயேசு சமாதான பிரபுவாக ஆட்சி செய்கிறார்; அவர், முடிவற்ற ஆட்சி மற்றும் முடிவில்லா சமாதானத்தை கொண்டு வர வருகை
தருகிறார். அவரை வரவேற்க ஆயத்தமா?
மேசியா குறித்த இந்தத் தீர்க்கதரிசனம், அமைதியற்ற மற்றும் ஆபத்தான காலங்களில் மகிழ்ச்சியையும் ஆறுதலையும் இஸ்ரவேலருக்கு அளித்தது. வருகை என்பது இயேசு, மேசியாவாக வந்ததைக் குறிக்கிறது; மட்டுமல்ல, அவர் விரைவில் மீண்டும் வருவார் என்பதையும் குறிக்கிறது. நம் சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், நாம் கிறிஸ்துவுக்குள் வாழும்போது, ஒரு ஆழமான, நிலையான, அமைதியைக் காணமுடியும். இயேசுவை முழுமை யாக அறிந்து கொள்ள வழிவகுக்கும் இரண்டாம் வருகையையையுங்கூட அசையாத நம்பிக்கையுடன் வரவேற்க அழைக்கப்படுகிறோம். மேசியாவை வரவேற்க ஏசாயா பயன் படுத்தும் நான்கு பெயர்களில், எதை நீங்கள் மிகவும் பொருத்தமானதாய் கருதுகிறீர்கள்? உங்கள் வாழ்வில் இயேசுவின் இந்தப் பாத்திரங்கள் நிறைவேற்றுவதை நீங்கள் எவ்வாறு உணர் கிறீர்கள்? இக்கேள்விகளுக்கான பதில்களை குறிப்பேட்டில் எழுதிக்கொண்டு தியானியுங்கள்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா, ஊழிய இயக்குநர்
இரட்சிப்பு ஊழியங்கள், சென்னை-93, தென்னிந்தியா