சகோ. எம். அசரியா ஞானதாஸ் எம்.ஏ; எம்.எட்
லூயிஸ் என்ற மனிதன் தான் மற்றவர்களை விட குறைந்த அளவே குற்றங்களை செய்வதாக எண்ணி, அதை கணக்கிட விரும்பினான். அதன்படி, அவன் இரண்டு பைகளை எடுத்து ஒன்றை தன் முதுகிலும் மற்றொன்றை தன் மார்பிலும் போட்டுக் கொண்டு, கிராமத்தின் தெருக்களில் நடந்தான். மற்றவர்களுடைய குற்றங்களின் எண்ணிக்கைப் படி கற்களை முன்னால் உள்ள பையிலும், தன் குற்றங்களின் எண்ணிக்கைப்படி கற்களை பின்னால் உள்ள பையிலும் போட்டுக்கொண்டு வந்தான். பல தெருக்களை கடந்தபின் முன்னால் உள்ள பை கற்களால் நிரம்பியது. உடனே அவன், “மற்றவர்களைவிட நான் செய்யும் பாவங்கள் மிக மிக குறைவே” என மனதில் பெருமிதம் கொண்டான். அப்போது, அங்கு வந்த பெரியவர் ஒருவர் அவனை நோக்கி, “உனது முதுகில் உள்ள பையில், கற்களின் பாரம் தாங்காமல் ஓட்டை விழுந்ததால் அந்த கற்களெல்லாம் தெருக்களில் நெடுந்தூரத்திற்கு விழுந்து கிடக்கின்றன” என்றார். நடந்ததை அறிந்த லூயிஸ், தானே பெருமளவில் குற்றங்கள் செய்திருப்பதை உணர்ந்து, அதற்காக மனஸ்தாபப்பட்டு இயேசுவிடம் அறிக்கையிட்டு மன்னிப்பு பெற்றான்.
பின்னர், அவன் தன் பெருமையான எண்ணங்களை விட்டொழித்து, ஒரு சிறந்த தேவமனிதனாக மாறினார். ஆலய ஆராதனைகள், ஐக்கிய ஜெபங்கள், சுவிசேஷ ஊழியங்கள் ஆகியவற்றில் கருத்தோடு பங்குபெற்று அநேகரை தேவனண்டை வழிநடத்தும் கருவியாக செயல்பட்டார்.
பிரியமானவர்களே! நாமும் லூயிஸைப்போல், நாம் செய்யும் கணக்கில்லா பெரும் தவறுகளையும் பாவங்களையும் உணராமல் மற்றவர்கள் செய்கிற சில சிறு தப்பிதங்களை பெரிதாக்கி, அவர்கள் மனதைப் புண்படுத்திவிடுகிறோம். இயேசு கிறிஸ்து, தம்முன் ஒரு விபச்சார ஸ்திரீயை குற்றப்படுத்தி நிறுத்தியபோது, “உங்களில் பாவமில்;லாதவன் இவள்மேல் கல்லெறியக்கடவன்” என்றார். மேலும், “உன் கண்ணில் இருக்கிற உத்திரத்தைப் பாராமல், உன் சகோதரன் கண்ணில் இருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?” என்று போதித்தார். இயேசுவின் வருகையை எதிர்நோக்கியுள்ள நாமும், நம் குறைகளைக்களைந்து, முன்மாதிரி வாழ்வு வாழ்ந்து, அனேகரை இயேசுவண்டை வழி நடத்தி, மேலான ஆசீர்வாதங்களை பெறுவோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
வேதம் இவ்வாறு கூறுகிறது:
தீய நோக்கம் பாவமாம். நீதி-24:9
என் பாவத்திநிமித்தம் நான் விசாரப்படுகிறேன். சங்-38:18
என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தருளும். சங்-32:5
என் பாவமற என்னைச் சுத்திகரியும். சங்-51:2