திருத்தந்தை. ஹென்றி ஹென்ரிக்ஸ், தாழ்மையான மனிதர். இவர் 20 ஆண்டுகள் பணிபுரி;ந்த பின்னரும் மக்கள்; கிறிஸ்துவை புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. 1552ல், ஒரு ஊழியரும் 10 திருத்தந்தைகளும் கோரமண்டல் கடற்கரையில் வசித்தனர். 3 சகோதரர்களும் ஒரு தந்தையும் புன்னைக்காயலில் விரிவாக்கப்பணியின் நன்மைக்காக மொழி கற்றுவந்தார்கள். கி.பி.1577ல், நிலைமை மாறியது. கி.பி.1580ல் பிஷர் கோஸ்ட்டில் பணியிலிருந்தோர் எண்ணிக்கை 15ஆக உயர்ந்தது.
சமூகத்தின் அனைத்து விவகாரங்களிலும் அதிகாரத்தைப் பயன்படுத்தும் வகையில் கடற்கரையிலுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு ஜேசுவைட் தங்கினார். கி.பி.1580 முதல் தேவாலயங்கள் வழக்கமான பாணியில் கட்டப்படத் தொடங்கின. உள்ளே ஒரு மருத்துவ மனையும் இருந்தது. புன்னைக்காயல் உட்பட பல இடங்களில் தொடக்கப்பள்ளிகள் இருந்ததாகத் தெரிகிறது. பாதிரியார்களை உருவாக்கிய ஜேசுவைட்கள், பெண்கள் கல்வியில் ஆர்வம் காட்டவில்லை. ஞாயிற்றுக்கிழமை விதிகள் கண்டிப்புடன் அமல்படுத்தப்பட்டன (ஞாயிறு மீன்பிடித்தல் கூடாது; வெள்ளிக்கிழமை பிடித்த மீன்களில் ஒருபகுதியை ஆலயத்திற்கு வழங்கவேண்டும்). ஜேசுவைட் கடிதங்களில் கிறிஸ்தவர்களின் நிலையற்ற வாழ்க்கை, பெண்களின் பேகன் நடைமுறைகள் மற்றும் மூட நம்பிக்கைகள் பற்றிய புகார்கள் காணப்பட்டன. இந்த நிலைமைக்கு ஒரே தீர்வு ‘சகோதரத்துவத்தின் ஒன்றுபட்ட குழு’ உருவாக்கமே என முடிவுசெய்த ஹென்ரிக்ஸ் ‘மை லேடி ஆஃப் தி ரோசரி’ எனப்படும் ‘கான்ஃப்ரனிட்டி’யை உருவாக்கி அதற்கான விதிகளில் ஆர்வத்துடன் பணியாற்றினார். கி.பி.1578ன் ஆரம்பத்தில், 42 பக்கங்கள் கொண்ட விதிகளின் வரைவு அச்சிடப்பட்டது. ஆனால் அவர் தொடர்ந்து அதில் திருத்தங்கள் செய்துகொண்டிருந்ததால், ஜனவரி 1586 வரை அது இறுதிவடிவம் பெறவில்லை. வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி வழிபாடுகள் நடந்தன. உறுப்பினர்கள், ஏழைகள் மற்றும் நோயாளி களை சந்தித்து, அவர்கள் பிரச்சனைகளை தீர்த்து, அவர்களை ஆறுதல்படுத்தி, அவர்களுக்கு உதவிகள் செய்து வந்தார்கள். இதன் காரணமாக போர்த்துகீசியர்களும், கெட்ட கிறிஸ்தவர் களும், அவிசுவாசிகளும்கூட ஈர்க்கப்பட்டார்கள்.
ஹென்ரிக்ஸ் தமிழ் மொழிக்கு ஆற்றிய சேவையின் மூலம் அழியாப் புகழ் பெற்றார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக கடற்கரையில் சேவைசெய்து கி.பி.1600 பிப்ரவரி6ம் தேதி தனது எண்பதாவது வயதில்; இறந்தார். 1601ம் ஆண்டிற்கான ஜேசுவைட் கடிதம், “கிறிஸ்தவர்கள் அவர் மீது வைத்திருக்கும் பக்தி விவரிக்க முடியாத அளவுக்கு உள்ளது. கிறிஸ்தவர்கள் மட்டுமன்றி, மூர்களும் இந்துக்களும் அவரால் பல ஆண்டுகளாக நம்பிக்கையில் வளர்த்து வந்தனர். இதற்காக நாம் நம் இறைவனைப் போற்ற வேண்டும். மேலும் ஹென்ரிக்ஸ் இறந்த நாளில் அண்டை கிராமமான காயல்பட்டணத்து முஸ்லிம்கள் அனைவரும் நோன்பு இருந்தனர். அண்டைகிராமத்து இந்துக்களும் 2 நாட்கள் உண்ணாவிரதமிருந்து, கடைகளை அடைத்து, ஹென்ரிக்ஸ்க்கு அஞ்சலி செலுத்தினர்” என்று கூறுகிறது.
கி.பி.1597ல் ஜேசுவைட் விசிட்டர் திருத்தந்தை. நிக்கோலஸ் பிமென்டா, விஜயநகர் ராஜ்யத்திற்கு மிஷனரிகளை அனுப்ப மயிலாப்பூர் கல்லூரி ரெக்டரை வற்புறுத்தினார். முதல் ஜேசுவைட் தொடர்பு அரசருடன் அல்லாது, செஞ்சியின் ஆட்சியரான கிருஷ்ணப்ப நாயக்கருடன் செய்யப்பட்டது. பிமென்டா, தெற்கில் உள்ள அனைத்து ஜேசுவைட் நிலையங்களுக்கும் சென்றபின், செஞ்சியில் நாயக்கரை சந்தித்தார். நாயக்கர், கிருஷ்ணபாதம் என்ற புதிய நகரை கட்டிக்கொண்டிருந்த நேரம் அது என்பதால், ஒரு தேவாலயத்தை அங்கே கட்டுமாறு பிமென்டாவை வலியுறுத்தி அதற்கான இடமும், உதவியும் செய்வதாக வாக்குறுதி அளித்தார். அதன்படி பிமென்டா, திருத்தந்தை அலெக்சாண்டர் லெவியிடம் தேவாலயம் கட்டும் பொறுப்பைக் கொடுத்தார். தேவாலயம் கட்டுவதற்கு அவர்களுக்கு உடனடியாக இடம் வழங்கப் பட்டது. பிமென்டா 6 மிஷனரிகளைத் தேர்ந்தெடுத்தார், அவர்களில் 3 பேர் கி.பி.1599. ஆகஸ்ட் 16ல் சந்திரகிரிக்கு வந்தனர். ஆனால், கி.பி.1610ல், போர்ச்சுகல்-ஸ்பெயின் மன்னர் 3ம் பிலிப் அங்கிருந்து ஜேசுட்வைட்ஸ் வெளியேற உத்தரவிட்டார்; பதிலாக எவரும் அனுப்பப்படவில்லை.
கி.பி.1558ல் கபுவாவில் பிறந்து கி.பி.1582ல் இந்தியா வந்த திருத்தந்தை. ஜேம்ஸ் ஃபெனிசியோ, கிறிஸ்தவர்களாகி பின்னர் நம்பிக்கையை இழந்த ‘தோடர்’ இன மலைவாழ் மக்களை மீட்பது என்ற செர்ரா|வின் முடிவின்பேரில் கி.பி.1603ல் இப்பகுதியில் இறைபணியின் சாத்தியக்கூறுகளை ஆராய தலைமை பாதிரியுடன் அங்கு சென்று தோடர்கள் பலரைச் சந்தித்தார். தமது வருகையின் காரணத்தை அவர்களுக்கு விளக்கி, எருமை மற்றும் 300 பகோடாக்களை வணங்குவதையும் 2 சகோதரர்கள் ஒரு பெண்ணை திருமணம் செய்யும் வழக்கத்தையும் அவர்கள் விட்டுவிடுவார்களா? என்று கேட்டார். திருமண வழக்கத்தை கைவிடுவதாகவும், ஆனால் எருமைகளும் பகோடாக்களும் தங்களுக்கு தீங்கு செய்யுமென அஞ்சுவதாகவும் அவர்கள் பதிலளித்தனர். ஆகவே, மீண்டும் அதுபற்றி அவர்களிடம் பேச, ஃபெனிசியோ உறுதிபூண்டார். தோடர்கள் 4 மலைகளை சுற்றி, சிதறி வாழ்ந்ததால், முதல் தோடர் ஞானஸ்நானம் பெற 3 நூற்றாண்டுகள் ஆனது.
இந்திய கிறிஸ்தவ திருச்சபை வரலாறு தொடரும்...