Salomi
கதை எண்: 162
November 2024

நன்மை செய்யப் படியுங்கள்

சகோ. எம். அசரியா ஞானதாஸ் எம்.ஏ; எம்.எட்


ஒரு சிறு கிராமத்தில் ஒரு கால்நடை மருத்துவர் வசித்து வந்தார். அக்கிராமத்தை சுற்றிலும் இருந்த பல கிராமங்களில் உள்ள ஏராளமான ஆடு, மாடு, நாய், பூனை போன்ற வளர்ப்பு பிராணிகளுக்கு அந்த டாக்டர் கிறிஸ்தவ பண்புகளாகிய பொறுமை அன்புடன் சிகிச்சை அளித்துவந்தார். இதனால் ஏராளமான ஆடு மாடுகள் நோயிலிருந்து சுகம் பெற்றதோடு அநேக கால்நடைகளுக்கு தடுப்பு ஊசிகள் போட்டதனால் ஏராளமான ஆடு மாடுகள் உயிர்க்கொல்லி நோயிலிருந்து காப்பற்றப்பட்டன. அவரது சேவைக்காக மக்கள் அவரை பாராட்டினர். அவரும் பெருமையில்லாதவராய், பொறுமையுள்ளவராய் இயேசுவுக்கு சாட்சியாக செயல்பட்டு வந்தார்.

இந்த சூழ்நிலையில் ஒரு நாள் ஒரு நாய் அந்த டாக்டரிடம் வந்தது. காலில் கண்ணாடி குத்தியதால் வேதனையுடன் இரத்தம் சொட்ட சொட்ட நொண்டி நொண்டி வந்தது. டாக்டரும் அந்த நாய்க்கு சிறப்பாக சிகிச்சை அளித்தார். சிகிச்சை பெற்ற நாய் தனது வாலை ஆட்டி நன்றிகூறி விடைபெற்றது. சில நாட்க்கள் கழித்து அதே நாய் அங்கு வந்தது; ஆனால், அது தன்னைப்போல் காயப்பட்ட வேறோரு நாயை கூட்டிக்கொண்டு வந்தது. அந்த நாயின் காலில் இரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. பாதிக்கப்பட்ட அந்த நாய்க்கும் மருத்துவர் சிகிச்சை அளித்து அனுப்பிவிட்டார். இரு நாய்களும் தங்கள் வால்களை ஆட்டி டாக்டருக்கு நன்றி தெரிவித்து விடைபெற்றன. அந்த மருத்துவரும் தன்னைப்போல் மற்றவர்களும் சுகமாக வாழவேண்டும் என்ற நாயின் எண்ணத்தையும் அறிவுக்கூர்மையையும் எண்ணி வியப்படைந்தார்.

பிரியமானவர்களே! நாமும் நம் ஆண்டவராகிய தேவனிடமிருந்து பெற்றுக்கொண்ட நன்மை களுக்காக நன்றியுள்ளவர்களாக வாழ்வதோடு நம்மைச்சுற்றி வாழ்பவர்களும் துன்பங்களின்றி மகிழ்ச்சியோடு வாழவேண்டும் என்ற நல்லெண்ணம் உடையவர்களாக வாழவேண்டும். தான் பெற்ற நன்மைகளை இன்னொரு நாயும் பெற ஊதவி செய்த அந்த நாய் நமக்கு ஒரு முன் உதாரணம் ஆகும். நம்மைச் சுற்றி வாழும் மக்களும் துன்பங்களிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியோடு வாழ அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும் என இயேசு சுவாமி விரும்புகிறார். மற்றவர்கள் துன்பங்களில் பங்குகொண்டு அவர்களுக்கு நன்மைசெய்து அவர்களும் நம்மைப் போல் வாழ உதவி செய்வதை இயேசு நம்மிடம் எதிர்பார்க்கிறார். இயேசு சுவாமியின் விருப்பத்தின்படி செயலாற்றுவோம் ஆண்டவர் தரும் ஆசீர்வாதங்களை பெற்று நிறைவாழ்வு வாழ்வோம்.

வேதம் இவ்வாறு கூறுகிறது:

கர்த்தரை நம்பி நன்மை செய். சங் 37:3
நன்மை செய்யும்படி உனக்குத் திராணி இருக்கும்போது அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே. நீதி 3:27
கிறிஸ்துவினுடைய அன்பு நம்மை நெருக்கி ஏவுகிறது. 2கொரி-5:14
நீ நன்மை செய்தால் உனக்கு மேன்மையில்லையோ. நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் உன் வாசற்படியில் படுத்திருக்கும்.ஆதி 4:7


M.AZARIAH GNANADOSS M.A; M.ED
EDITOR, RATCHIPPU TAMIL CHRISTIAN MONTHLY, SALIGRAMAM, CHENNAI-93. MOBILE:9962924900